வரி ஏய்ப்பு முறைகள் இந்தியாவில் பகிரங்கமாக அரங்கேறுகின்றன.. பல நாடுகளில் சொத்து வாங்கியிருக்கும் பெரும் பணக்காரர்களும் சர்வதேச தொழில் நிறுவனங்களும் அப்பட்டமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன.
நீதிமன்ற அனுமதி பெற்று அண்மையில் கார்த்தி சிதம்பரம் செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். கடந்த சில வருடங்களாக அவரை நீங்கள் கவனித்து வந்தால் அவர் அடிக்கடி இவ்வாறு இங்கிலாந்து போன்ற வெளி நாடுகளூக்கு பயணம் செய்வதை அறியலாம். சில சமயம் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் நிற்கும் விமான நிலையத்தின் படத்தை பதிவு செய்து இது எங்கிருக்கிறது என்ற பார்வையாளருக்கு ஒரு வினா விடை போட்டி நடத்துவார். அந்தப் பதிவின் மேல் புறத்தில் தன்னை போன்ற சர்வதேசப் பணக்காரனுக்கு [High Net-worth Individuals (HNI)] ’எந்த நாட்டில் நுழைவதற்கும் தடை கிடையாது; கடவுச்சீட்டும் தேவையில்லை’ என்ற தற்பெருமை வாசகம் காணப்படும். இவர் வெளி நாட்டில் இருக்கும்போது என்ன செய்கிறார்? எதற்காக இவர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போகிறார்? என்ற வினாக்களுக்கு விடை காண்பதற்கு முன்பு மற்ற நாடுகளில் வருமான வரி சட்டங்கள் குறித்து அறிந்த்தும் சர்வதேச வரி சட்டங்கள் குறித்தும் ஓரளவு நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
உலகமயமாக்கலுக்கு நன்றி. பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்த பெர்முடா, கேமன் தீவுகள், பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள், மோரீஷியஸ், சிப்ரஸ் தீவுகள் போன்றவை வரி ஏய்ப்பு புகலிடங்களாக உள்ளன. இங்கு அதிக விகிதாச்சாரத்தில் ‘வணீக மேல் கடன்’ [maximum leverage ] வழங்கப்படுகிறது. இவற்றிற்கு தலைமையகமாக இலண்டன் திகழ்கிறது. இலண்டன் மாநகரில் வந்து இந்த சர்வதேசப் பணக்காரர்கள் பல் பெயர்களில் போலி நிறுவனங்களை உருவாக்கி அவற்றில் பணம் முதலீடு செய்வதாக ‘வணிக மேல் கடன்’ வாங்கி அவற்றை வைத்து வரி ஏய்ப்புச் செய்து விளையாடலாம். வரி செலுத்தாமல் இருக்க என்னென்ன வழிமுறைகள் உண்டோ அனைத்தையும் அங்கே வெற்றிகரமாக நிறைவேற்றி சொந்த மக்களின் அதாவது இந்திய அரசின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வெற்றிகரமாகத் தாயகம் திரும்பலாம்.
சர்வதேச நிறுவனங்கள் அல்லது பணக்காரர்களின் இலக்கு யாது?
சர்வதேச அளவில் நிறுவனங்கள் நடத்துகின்ற அல்லது நடத்துவதாக கணக்கு காட்டி பாசாங்கு செய்கின்ற – வெளி நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்ற பணக்காரர்களும் நிறுவனங்களூம் முடிவாக விரும்புவது ஒன்றே ஒன்று தான். அதாவது எந்த அரசுக்கும் வரி செலுத்தக் கூடாது. அதுவே பணக்காரனின் புத்திசாலித்தனம் என்று கருதுகின்றனர்.
- வரி ஏய்ப்பு
- மேலே காணப்படும் விதி ஒன்றை படித்து பாருங்கள்
- வரி செலுத்தாமல் நாட்டை ஏமாற்ற சட்டத்தில் என்னென்ன ஓட்டைகள் உண்டு என்பதை அறிந்துகொள்வார்கள்
- மூன்றாவதாகச் சொன்னதும் நடக்கவில்லை என்றால் சட்டத்தை வளைக்க பார்ப்பார்கள். அதற்குரிய வழக்கறிஞர்களை நல்ல சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துவர்
இந்த இடத்தில் ஒரு திரைப்படப் பாட்டின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. “நாணல் போல வளைவது தான் சட்டம் ஆகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா”
இந்த வரி ஏய்ப்பு இந்தியாவை எப்படி பாதிக்கும்?
இந்தியாவின் வரி வசூல் முறை அமெரிக்காவைப் போல அல்லது பிற மேலை நாடுகளைப் போல மிகப் பரந்ததோ விரிவானதோ கிடையாது. இங்கு விவசாயிகள் வரி செலுத்துவது இல்லை. அது போல மிகப் பெரிய வணீக நிறுவனங்களும் வரி செலுத்துவது இல்லை. முன்னது இல்லாமை; பின்னது ஏய்ப்பு. வரி செலுத்துவதில் பெரும் பணக்காரனும் பரம ஏழையும் ஒன்று தான். பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வதை சாமர்த்தியமாக வரி திட்டமிடல் என்ற பெயரால் குறிப்பிடுகின்றனர். இது ஒரு பகல் கொள்ளை. இதைஅரசு கண்டுபித்து தண்டிக்க வேண்டும் இல்லையென்றால் அரசு கண்ணை விழித்துக்கொண்டே கிணற்றில் விழுவதற்கு சமம் ஆகும். பெரும் பணக்காரர் செலுத்தாத வரி அனைத்தும் நடுத்தரக் குடும்பத்தின் தலையில் சுமையாக வந்து விழும். அரசு தான் செலவு செய்தாக வேண்டிய கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்றவற்றிற்கு ஆகும் செலவுகளை நடுத்தரக் குடும்பத்தினரிடம் இருந்து மட்டுமே வருமான வரி என்ற பெயரில் ஆண்டுதோறும் அவர்களீன் சம்பளத்தில் இருந்துஅரசு பிடித்துவருகிறது..
வரி என்பது யாருக்கோ வழங்கப்படும் தர்மம் அல்ல. அது நாகரிக வாழ்க்கைக்கான விலை ஆகும். இந்த விலையை நாம் தராவிட்டால் நாம் நம் நாட்டில் நாகரிகமாக வாழ முடியாது; வாழக் கூடாது. எனவே வரி ஏய்ப்பு என்பது குடிமைச் சட்டம் சார்ந்த தவறாகக் கருதப்பட்டு அதற்கு வெறும் அபராதத் தண்டனை மட்டும் வழங்கப்பட்டாலும் தேசிய நலன் சார்ந்தததாக சிந்திக்கும் போது வரி ஏய்ப்பு என்பது ஒரு மாபெரும் ‘கிரிமினல்’ குற்றம் ஆகிறது.
வரி ஏய்ப்பும் கறுப்பு பணமும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
இவ்வாறு வரி செலுத்தாமல் மறைக்கப்படும் தொகை பணமதிப்பு நீக்கத்தின் போது கணக்கிடப்பட்ட தொகையை விட அதிகமாக இருக்கிறது. இந்த வரி ஏய்ப்பை செய்பவர்கள் படித்த நாகரிகமான உயர்ந்த நிலையில் உள்ள ‘பெரிய’ மனிதர்கள். இவர்களுக்கு இந்த வரி ஏய்ப்புக்கு உறுதுணையாக இருப்பவர்கள் அதிகச் சமபளத்துக்கு நியமிக்கப்படும் கள்ளக் கணக்கு எழுதும் கணக்காளர், வழக்கறிஞர், வங்கியாளர் போன்றோர் ஆவர். இவர்கள் அனைவரும் இணைந்து பூஜ்ய வரி அல்லது குறைந்த வரி செலுத்தும் முறைகளை ஆராய்ந்து அதனை செயல்படுத்த உதவுகின்றன.
இந்தக் குழுவினர் சொத்து மற்றும் வருமானத்தை மட்டும் ஒளிப்பதில்லை; அதன் உரிமையாளர்களையும் சட்டத்தின் பிடியில் இருந்து ஒளித்து வைக்கின்றனர். வரி ஏய்ப்பு செய்வதன் மூலமாக கறுப்பு பணம் உருவாகவும் உதவுகின்றனர். இந்த வரி ஏய்ப்பு இத்துடன் முடிந்த் விடுவதில்லை; போலி நிறுவனங்களைத் தொடங்குதல், போலி கணக்கு காட்டுதல் போன்ற பல குற்றங்களுக்கும் வழி வகுக்கின்றது.
வரி விதிப்பை சர்வதேச நிறுவனங்களும் சர்வதேசப் பணக்காரர்களும் அரசாங்கமும் ஒரு விளையாட்டாகக் கருதி விளையாடிக் கொண்டிருக்கின்றன. ‘டாம் அண்டு ஜெரி’ காமிக்சில் வரும் டாம் என்ற பூனையை போல ஒவ்வொரு முறையும் இந்திய அரசு ஜெரி என்ற எலியை பிடிக்க இயலாமல் ஏமாந்து போய் மூக்குடைபடுகிறது. வரி ஏய்ப்புக்கு இடமளிக்க கூடிய சட்டத்தின் ஓட்டைகளை ஒவ்வொரு ஆண்டும் அரசு அடைத்துக்கொண்டு தான் வருகிறது. ஆனால் [‘’கள்வன் பெரிதா காப்பான் பெரிதா’’ என்பது போல] பணக்காரக் கள்வர்கள் சட்டத்தில் புதிய புதிய ஓட்டைகளை கண்டு பிடித்து தப்பிவிடுகின்றனர். ஹவாலா மோசடியும் தாராளமாக நடந்து வருகிறது. துபாய் போன்ற நாடுகளில் வருமானத்திற்கான வழிகளை பற்றி விசாரிப்பதில்லை அங்கு எவ்வளவு இந்திய ரூபாயை கொடுத்தாலும் மறு பேச்சின்றி அமெரிக்க டாலர்களை கொடுத்து விடுவர்.
எனவே இப்போது பண முதலைகள் தங்கள் பணத்தை வங்கி பரிவர்த்தனையின் மூலமாக பாதுகாக்காமல் தவறான முறைகளில் டாலர்களாக மாற்றி சேமிக்கின்றனர். இதில் புரோக்கர்களாக சிலர் செயல்பட்டு நல்ல கமிஷன் சம்பாதிக்கின்றனர். இந்த ஹவாலா மோசடி பற்றி நாம் தெரிந்திருப்போம் . இது இந்திய பொருளாதாரத்தின் இரத்ததை குடிக்கும் கொடூர செயல் என்பதையும் அறிவோம். இது போல தான் சுவிஸ் வங்கி கணக்குகளும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷ்யமாக இருந்தாலும் சில ஆண்டுகள் முன்பு வரை யாரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த தொடரில் நாம் வரி ஏய்ப்பு குறித்து இன்னும் பல விஷயங்களை விவரமாக எடுத்துரைக்க திட்டமிட்டு உள்ளோம். வெள்ளை காலர் கறுப்புப் பண முதலைகளின் தோலுரித்து காட்ட முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து வாசிப்பீர்! பின்பு கொஞ்சம் யோசிப்பீர்!!!
தொடரும்…
[…] எவ்வாறு வரி ஏய்ப்பு செய்கின்றனர்? [பகுதி 1] என்பதையும் வரி ஏய்ப்பு செய்ய […]
[…] கட்டுரையின் முதல் பகுதியில் கறுப்புப் பணமும் வரி ஏய்ப்புக்கு ஒரு நாணயத்தின் இரு […]