இந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா?

பாரம்பரியமும், முக்கியத்துவம் உள்ள பல இந்து கோவில்களை நாடெங்கிலும் அரசுகள் கையகப்படுத்தி அரசுடமை கோவில்களாக கடந்த காலங்களில் மாற்றி விட்டன.

0
2116
இந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா?
இந்தியாவில் இந்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா?

சுமார் 80 சதவீதம் மக்கள் தங்களை இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்ற நிலையில் வாழ்ந்து வரும் இந்திய நாட்டில் இந்து மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிடும் போது மாற்றாந்தாய் போன்ற பார்வையுடன், பல அரசுகள் மற்றும் அரசியல்வாதிகளின் அணுகுமுறைகளில் காணப்படுகிறது என்று பல இந்து மதத்தை சார்ந்தவர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இத்தகைய எண்ண் ஓட்டங்கள் உள்ளது என்ற நிலை கீழ் கண்ட பல நிகழ்வுகளினால் தெள்ளந் தெளிவாக தெரிகிறது.

இந்து கோவில்கள் அரசுடைமையில் மிகவும் பாரம்பரியமும், முக்கியத்துவம் உள்ள பல இந்து கோவில்களை நாடெங்கிலும் அரசுகள் கையகப்படுத்தி அரசுடமை கோவில்களாக கடந்த காலங்களில் மாற்றி விட்டன.

இந்த கோவில்களில் பக்தர்களின் காணிக்கை மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் பலவிதங்களில் அரசாங்கத்தின் கஜானாவிற்கு சென்றுவிடுகிறது. இந்த கோவில்களில் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள் அல்லது ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளவர்கள், அவர்கள் உறவினர்கள், நண்பர்கள், பெருமளவில் ஆலயத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் அமர்த்தப்படுகின்றனர்.

பெருமளவு வருமானம் உள்ள இந்து கோவில்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அரசுகள், கிறித்துவ மதத்தினை சார்ந்த தேவாலயத்தையோ, முஸ்லீம் மதத்தை சார்ந்த மசூதியையோ,சீக்கிய மதத்தை சார்ந்த குருத்துவாராவையோ கையகப்படுத்தவில்லை.

மற்ற மதங்களை சிறுபான்மை மக்களின் மதங்கள் என்பதால், அரசு கையகப்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இதில் என்ன நியாயம் உள்ளது என்பது புரியவில்லை. மேலும், சில மாநிலங்களில் இந்து மத மக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த மாநிலங்களிலும் இந்து அல்லாத மற்ற மதங்களின் ஆலயங்கள் அரசு கையகப்படுத்தவில்லை.

தமிழ் நாட்டில், இந்து கோவில்களில் அர்ச்சகர்களையும்,பூசாரிகளையும் பெரும்பாலும் அரசு நியமிக்கிறது. அவர்களுக்;கு வேண்டிய தகுதியையும், ஊதியத்தையும் அரசுதான் நிச்சயிக்கிறது. ஆனால், மற்ற மதங்களின் மத போதகர்களை நியமிக்கும் அணுகுமுறையில் அரசு தலையிடுவதில்லை.

பசு வதை பிரச்சினை

பாரம்பரியமாக இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பசுக்களை தெய்வீக பிராணிகள் என்று கருதி வழிபடுகிறார்கள். இவர்கள் பசு வதையை, பசுவை கொன்று மாமிசத்தை மக்களின் உணவு பொருளாக உபயோகிக்கும் முறையை, அறவே தடை செய்ய வேணடும் என்று கோருகின்றனர்.

பசுக்களை கசாப்பு கடைகளுக்கு கொண்டு செல்லும் காட்சியை பார்க்கும் போது சிலர் கொதித்தெழுந்து அதனை தடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால், இவர்களை இந்து தீவிரவாதிகள் என்று வர்ணித்து ஊடகங்களும், செய்திதாள்களும், சில ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் சித்தரிக்கின்றனர். இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பசுவதைகளை தடுப்பவர்கள் வன்முறையில் ஈடுபடுவது தவறு. இருப்பினும் பசுவதையை குறித்து இந்துக்களின் எண்ண ஓட்டங்களை அரசியல்வாதிகளும், ஆர்வலர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வெட்டி வழிபடுகின்றனர். இது அவர்களது மத கோட்பாடு ஆனால், இதனை வன்முறையாக கருதி, இதனை குறித்து ஊடகங்களோ, செய்தித்தாள்களோ, பத்திரிக்கைகளோ, அரசியல்வாதிகளோ,விலங்குகளின் பாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் ஆர்வலர்களோ எதிர்ப்பு குரல் எழுப்புவதில்லை.

சபரிமலை படும்பாடு

உலகெங்கிலும் உள்ள ஆலயங்களில், கேரளாவிலுள்ள சபரிமலையிலுள்ள சுவாமி ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்கள். பக்தர்கள் பல கடுமையான விதிமுறைகளை பின்பற்றி, மிகவும் ஒழுக்கத்துடன் விரதம் இருந்து ஐயப்ப சுவாமியை தரிசிக்கிறார்கள். இத்தகைய கட்டுப்பாட்டுடன் வரும் பக்தர்களை வேறெந்த ஆலயத்திலும் பார்க்க முடியுமா என்பதே சந்தேகம். இத்தகைய பெருமைக்குரிய இந்து கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலை குறித்து தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலுக்கு 10 வயதிற்கு மேல் 50 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் செல்லக் கூடாது என்ற வழிமுறை பல காலமாக உள்ளது. மற்ற வயதிலுள்ள பெண்கள் செல்ல எந்தவித தடையும் இல்லை. இந்தியாவிலும், உலகெங்கிலுமுள்ள மற்ற சுவாமி ஐயப்பன் கோவில்களில் பெண்கள் செல்ல வயது வரம்பில்லை.

பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் செல்வதற்கு உள்ள விதிமுறை சட்டத்திற்கு புறம்பானது, பெண்களுக்கு செய்யப்படும் அநீதி என்று தீர்ப்பு கூறி உச்சநீதி மன்றம் இத்தகைய விதிமுறைக்கு தடை விதித்துள்ளது. உலகெங்கிலும், எல்லா மதங்களிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.

இதனை நம்பிக்கை அடிப்படையில், பாரம்பரிய பழக்கத்தின் மேலுள்ள ஈடுபாட்டினால், மக்கள் பின்பற்றி வருகிறார்கள். உலகத்தில் மக்கள் யாவரும் காலம் காலமாக நடைமுறையிலுள்ள நம்பிக்கை அடிப்படையில் பல மதக்கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இந்த விதிகளை யாரும் விஞ்ஞான ரீதியில் சரியா அல்லது சட்ட ரீதியில் சரியா என்று பார்ப்பதில்லை. இதே நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுள்ள விதிமுறைகளும் பார்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக சீக்கிய மதத்தில் தலையை துணி போர்த்தி மறைத்து கொண்டு தான் யாரும் சீக்கிய ஆலயமான குருத்வாரவுக்கு செல்ல முடியும். இஸ்லாமிய மதத்தில் மசூதியில், ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் அமர்ந்து வழிபாடு செய்ய அனுமதிப்பதில்லை. கிறிஸ்துவ மதத்தில் தேவாலயங்களில் பெண்களுக்கு பாதிரியார் போன்ற பதவியை பெற அனுமதி கிடையாது. கிறிஸ்துவ மதத்தில் பெண்கள் போப்பாண்டவர் பதவியை இதுவரை அடைந்ததில்லை.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலிலுள்ள விதிமுறைகளை மாத்திரம், ஆர்வலர்களும், நீதிமன்றமும் குறிவைப்பது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

சிலர் சுவாமி ஐயப்பன் கோவிலிலுள்ள பெண்களை குறித்து உள்ள விதிமுறைகளை முன்பு நிலவிய பெண்கள் உடன்கட்டை ஏறும் கொடுமையான பழக்கத்துடன் ஒப்பிடுகின்றனர். இது மிக மிக விஷமத்தனமானது. சுவாமி ஐயப்;பன் கோவிலிலுள்ள விதிமுறையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எதுவுமில்லை.

மற்ற எல்லா சுவாமி ஐயப்பன் கோவில்களும் எந்தவித வயதானாலும், பெண்கள் செல்லலாம் என்ற நிலையில், பெண்களை குறித்து சுவாமி ஐயப்பன் கோவில்களில் எந்தவிதமான இழிவான பார்வையும் இல்லை என்பதை உணர்வில் எல்லோரும் கொள்ள வேண்டும். பெண்கள் ஆயுட்காலம் முழுவதும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்படவில்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினருக்கு மாறுபட்ட விதிகள் ஏன்?

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலிலுள்ள விதிமுறைகளை குறை கூறுவோர் மற்ற இஸ்லாமிய, கிறித்துவ மதங்களிலுள்ள பெண்களை குறித்துள்ள கட்டுபாடுகளை விமர்சிப்பது இல்லை. விமர்சிக்க வேண்டுமென்று கூறவில்லை. சுவாமி ஐயப்பன் கோவில் விதியை மாத்திரம் ஏன் குறிவைக்கிறார்கள் என்பது தான் கேள்வி.

இந்த நிலைக்கு அரசியல் கட்சிகளும், அரசுகளும் சிறுபான்மை மதங்களை குறித்து பின்பற்றப்படும் வித்தியாசமான அணுகுமுறையே முக்கிய காரணம் அரசியல் நோக்கமுள்ள வாக்கு வங்கி அரசியல் தான் (vote bank politics) என்று தோன்றுகிறது.

சிறுபான்மை மதங்களில் கட்டுக்கோப்பான தலைமை பீடம் உள்ளது. தலைமையின் அறிவுறுத்தல் பேரில் நடந்து கொள்ள பெரும்பான்மையான மக்கள் தயாராக உள்ளனர். ஆனால், இந்து மதத்தில் கட்டுக்கோப்பான ஒருமித்த தலைமையில்லை. பல இயக்கங்கள், பல தலைமைகள் நாடெங்கிலும் உள்ளன. பல இந்துக்கள்,இந்து மத தலைவர்களின் அறிவுரைகளை முழுவதும் கேட்டு அடிபணிய வேண்டும் என்று கருதுவதில்லை.

இந்த காரணங்களால், அரசியல் கட்சிகள் சிறுபான்மை மதத்தின் கோட்பாடுகளை குறித்து விவரித்தாலோ அல்லது தலையிட்டாலோ, அவர்களின் வாக்கு வங்கி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தில், சிறுபான்மை மதங்கள் விஷயத்தில் தலையிடுவது இல்லை.

இந்து மதத்தின் மதவழிபாடுகளில் தலையிடுவதால் தங்களது வாக்கு வங்கிக்கு பாதிப்பு எற்படாது என்று அரசியல் கட்சிகள் எண்ணுகின்றனர். சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் விதிமுறைக்கு ஏற்பட்டுள்ள சில அரசியலில் ஈடுபாடு கொண்ட ஆர்வலர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பிற்கு இதுவே முக்கிய காரணம்.

சுவாமி ஐயப்பன் கோவில் குறித்து பிரச்சினை ஏற்படுத்தும் நோக்கில,; கோவிலின் விதிமுறைகளை ஒரு பெண்கள் விடுதலை இயக்கம் என்பது போல மாற்றத் துடிக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here