சமீப காலங்களில், உலகெங்கிலும் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் பிளாஸ்டிக் உபயோகத்தை நெடுநாட்களுக்கோ அல்லது குறுகிய காலத்திற்கோ முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு, ஊடகங்களும், செய்திதாள்களும் பெரிதளவில் ஆதரவு அளித்து வருகின்றன.
பிளாஸ்டிக் தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றது.
பிளாஸ்டிக்கிற்கு எதிர்ப்பு குரல் ஒரு வெறுப்புணர்ச்சியை வளர்த்தும் இயக்கமாக தற்போது மாறி, பிளாஸ்டிக்கை எந்தவிதமான உபயோகத்திற்கும் உட்படுத்துவது சமுதாய ஆரோக்கியத்திற்கு எதிரான செயல்,மற்றும் தனிப்பட்ட மக்களுக்கு உடல் ரீதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற எண்ணம் பொது மக்களிடம் பரவத் தொடங்கியுள்ளது. பிளாஸ்டிக்கை எதிர்த்து வன்மையான எதிர்ப்பு இயக்கம் தொடர்வதால், போதுமான அளவு விஞ்ஞான அறிவும், பொறியியல் அனுபவமும் இல்லாத பொது மக்களிடம் பிளாஸ்டிக் குறித்து ஒரு பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது. சுருக்கமாக கூறினால் பிளாஸ்டிக் எதிர்ப்பு இயக்கம், தீண்டாமை இயக்கம் போல் உருவெடுத்துள்ளது.
மத்திய அரசு 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஒரு முறை மாத்திரம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முழுவதுமாக தடை செய்ய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தனது குறிக்கோளைஅறிவித்து, அதற்கு தேவையான திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. இந்த அறிவிப்பினால், கடந்த வருடம் நடந்த உலக சுற்றுப்புற சூழல் மாநாட்டில், இந்தியா பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. இந்தியாவில், இதுவரை, 22 மாநிலங்கள், ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்வதாக அறிவித்துள்ளன. தடை செய்யப்பட்டுள்ள பொருட்களில் கைப்பை, கிண்ணம், தட்டு, கரண்டி, உறிஞ்சி (straw) தெர்மோ கோல் போன்றவை அடங்கும்.
ஒரு முறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பல மாநில அரசுகள் தற்போது தடை செய்திருக்கும் நிலையில், பலவிதமான உபயோகத்திற்கு பயன்படும் எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என்று பிளாஸ்டிக் எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருகின்றது.. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களும், நாட்டின் சுற்றுப்புற சூழல் நன்மைக்கு எதிராக செயற்படுகின்றனர் என்ற எண்ணம் பொதுமக்களிடம் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
உலகெங்கிலும், பல கோடி டன் அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்கள் பலவிதமான உபயோகத்திற்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசிய நாடுகளில் மட்டும் பாக்கேஜிங்கிற்கு (packaging) உபயோகப்படுத்தப்படும் பொருட்களில், 37மூ பிளாஸ்டிக் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களில் பாலி எதிலின், பாலி அசிடால், பாலி கார்;பனேட், பீ வி சி (PVC) போன்ற பல பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கும். இத்தகைய பலவிதமான பிளாஸ்டிக் பொருட்கள் பலவிதமான துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் குழாய், மின்பொருள், விவசாயம், மருத்துவ கருவி, மீன் பிடிக்கும் வலை, பொட்டலம் (packaging) போன்றவை அடங்கும்.
பிளாஸ்டிக் எதிர்ப்பு இயக்கத்தை முன் நடத்தி செல்பவர்கள் பலவிதமான பிளாஸ்டிக்களுக்கு இடையிலுள்ள வித்தியாசம் பற்றியும், அவற்றின் உபயோகத்திலுள்ள வேறுபாடுகளை குறித்தும் சரியான முறையில் பொது மக்களுக்கு புரியும் வகையில் விளக்கவில்லை என்பது ஒரு மறுக்க முடியாத வருத்தமான விஷயம்.
பிளாஸ்டிக் தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்தில் முக்கியமான பங்கு வகிக்கின்றது. பிளாஸ்டிக் பொருட்கள் உலக முன்னேற்றத்தில் இன்றியமையாத, தவிர்க்க முடியாத நிலையில் உபயோகிக்கப்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையில், பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலும் ஒதுக்க முடியுமா, தவிர்க்க முடியுமா என்பதே அடிப்படை கேள்வி.
எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் பலவிதமான உபயோகத்திற்கும் தடை செய்வது நடைமுறையில் சாத்தியமல்ல என்பது திட்டவட்டமாக தெரிந்திருப்பினும,; பிளாஸ்டிக் எதிர்ப்பு இயக்கம் எல்லாவிதமான பிளாஸ்டிக்கை குறித்தும் நடத்தப்பட்டு வருகின்றது.
பிளாஸ்டிக் குறித்து முக்கியமான எதிர்ப்பு குரல், பிளாஸ்டிக் பொருள் மக்காதது என்பதே. பிளாஸ்டிக் எதிர்ப்பாளர்கள் ஒரு இடத்தில் பிளாஸ்டிக் பொருளை வைத்தால் அது ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் அதே நிலையில் மக்காமல் காணப்படும் என்று பிளாஸ்டிக்கை எதிர்த்து உரத்த குரலில் பேசி வருகின்றனர்.
அதே சமயம், நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஏதேனும் ஒரு பொருள் மக்காமல் இருந்தால் அதனை ஒரு குறையா எண்ணவேண்டிய அவசியமில்லை. பல உபயோகங்களில் மக்காத தன்மையுள்ள பிளாஸ்டிக்கை பலவிதமாக பல வருடங்கள் ;உபயோகத்திற்கு சாதகமாக பயன்படுத்தலாம். தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
உதாரணமாக, தொலை காட்சி பெட்டி, தொலை பேசி, கைப்பேசி, பேருந்து, இரு சக்கர வாகனங்கள் போன்றவை பலவிதமான பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. அவைகள் மக்காத பொருளாக இருக்க வேண்டியது அவசியம்.
மக்காத தன்மையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அங்கங்கே சாலைகளில் பரவிகிடப்பதால், அவற்றை விலங்குகள் தின்று, யானையின் கழிவுப்பொருட்களில் காணப்படுகின்றது. பசுவின் வயிற்றில் காணப்படுகின்றது என்று பிளாஸ்டிக் பொருளுக்கு எதிராக குறை கூறப்படுகின்றது. இதே போல், உபயோகிக்கப்பட்ட பிளாஸ்டிக்கை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட மின்பொருட்கள் மற்றும் பல பாகங்கள் கடலில் பல காலமாக மிதப்பதாக கூறப்படுகின்றது. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதால் புற்று நோய் பரவக்கூடிய வாய்ப்பும் ஏற்படுவதாக, பிளாஸ்டிக்கை எதிர்ப்போர் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால் உபயோகிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஏன் எரிக்க வேண்டும், ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதே.
ஒரு முறை மாத்திரம் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதால், பிரச்சினை எந்த அளவு தீரும் என்பதை குறித்தும் ஆராய வேண்டும். இதனால், வேறு சில பிரச்சினைகள் ஏற்படாதா என்பதை குறித்தும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.
ஒரு முறை மட்டும் உபயோகிக்கும் பிளாஸ்டிக்கை கொண்டு உணவு பொருள், வாசனைப்பொருள், மளிகை சாமான்கள், அன்றாட உபயோகத்திலுள்ள பொருட்கள் ஏராளமாக பொட்டலங்களாக (packaging) விநியோகப்படுத்தப்படுகின்றன. பிளாஸ்டிக் போன்ற அதே அளவில் அதே அளவு பயனளிக்கும் வகையில் மாற்றுப்பொருட்கள் தேவையான அளவில் உள்ளதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
உலகெங்கிலும்,தற்போது மக்கக் கூடிய பிளாஸ்டிக் தயாரிக்க ஆராய்ச்சிகள் பல நாடுகளில் பெரிய அளவில் நடைபெற்று வருகின்றன.பாலிலாக்டிக் ஆசிட் (Polylactic acid), ஸ்டார்ச் கலந்த பிளாஸ்டிக் (starch based polymer)) போன்ற மக்காத பல பொருட்கள் தயாரிப்பும் தொடங்கி விட்டன. அவை தேவையுள்ள அளவில் உற்பத்தி செய்ய, பல ஆண்டுகள் முயற்சிகள் தொடர வேண்டும். அவற்றை எல்லாவிதமான பிளாஸ்டிக் பொருளுக்கும் மாற்று பொருளாக உபயோகிக்கப்படுத்த முடியாது. மேலும் மக்கும் பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி செலவு கூடுதலாக உள்ள நிலையில், அவற்றின் விலையும் மிக அதிக அளவில் காணப்படுகின்றன.
மேற் கூறிய காரணங்களை நினைவில் கொண்டு, பிளாஸ்டிக் எதிர்ப்பு இயக்கத்தின் தன்மை மாற்றப்பட வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் எதிர்ப்பாளர்கள் பிளாஸ்டிக்கை குறித்து வெறுப்பு இயக்கம் தொடர்வதை கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களின் தவிர்க்க முடியாத உபயோகத்தைப்பற்றியும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகத்தை முழுவதும் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றுவதில், பல அடிப்படை பிரச்சினைகள் தெளிவாக தெரிகின்றன. தகுந்த அளவில் மாற்றுப்பொருட்கள் இல்லாத நிலையில் ப்ளாஸ்டிக் எதிர்ப்பு இயக்கம் தடுமாறுவது தவிர்க்க முடியாதது. தற்போதைய பிளாஸ்டிக்கின் தேவை மிக அதிகமாகவுள்ள நிலையில் அவற்றை காகிதம், சணல், பருத்தி அடிப்படையாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் துணி, பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருளாக அமைய தேவையான அளவு கிடைக்காது.
அரசின் பிளாஸ்டிக் தடை செய்யும் திட்டம், மாற்றுப் பொருள் தேவையான அளவில் இல்லாமல், தெளிவான மாற்று திட்டமில்லாமல் நடத்தப்படுகிறது என்பது வெட்ட வெளிச்சம். ஒரு முறை உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருளை தடை செய்த பல மாநில அரசுகள் , எந்த அளவில் மாற்று பொருள் உள்ளது என்பதை குறித்து விரிவான ஆராய்ச்சி செய்ததாக தெரியவில்லை. சரியான மாற்று பொருள் தகுந்த அளவில் தயாரிக்காமல், ஒரு முறை உபயோகிக்கப்படுத்திய பிளாஸ்டிக்கை மாநில அரசுகள் தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என்ற எண்ணம் பலருக்கு தோன்றியுள்ளதில் ஆச்சரியமில்லை.
பிரச்சினை பிளாஸ்டிக்கினால் அல்ல. உபயோகிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தூக்கி வீசாமல் மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்தாமல் உள்ளதே பிரச்சினையின் அடிப்படைக் காரணம். பல வளர்ந்த நாடுகளில் உபயோகித்த பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்க ஏராளமான வசதிகள் ஏற்படுத்தி வரும் நிலையில,; இந்தியாவில் இதற்கான முயற்சிகள் போதுமான அளவில் இல்லை. ஜப்பானில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக்கில் 83 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படுகின்றது. இந்தியாவில் சில சிறிய அளவு மறு சுழற்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பினும், அது யானை வாய்க்கு ஒரு கையளவு சோளப்பொரி போன்ற நிலையிலேயே உள்ளது.
போதுமான அளவு உபயோகித்த பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்ய வசதிகள் ஏற்படுத்தாமல், மக்காத பிளாஸ்டிக் தயாரிக்க விஞ்ஞான ரீதியிலும், பொறியியல் நுட்ப ரீதியிலும் தேவையான அளவு முன்னேற்றம் ஏற்படுத்தாமல் ப்ளாஸ்டிக் தடை செய்யும் திட்டம் வெற்றி பெறாது.