அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

உச்ச நீதிமன்றத்தின் மத்யஸ்த ஏற்பாட்டுக்கு ஒப்புக்கொண்ட இந்து தலைவர்கள்

0
1811
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதில் எவ்வித  சமரசத்துக்கும் இடமில்லை

இராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூன்று பேர் அடங்கிய மத்யஸ்தக் குழுவை நியமிக்கலாம் என்று அறிவித்த தீர்ப்புக்கு பெருமளவில் ஆதரவும் சிறியளவில் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

பொதுவாக பல அரசியல் தலைவர்களும் சமயத் தலைவர்களும் புதன்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்புக்குத்  தலை வணங்கினர். அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வலியுறுத்திய வலது சாரி அமைப்புகள் இத்தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்தன. ஆனால் சில முஸ்லிம் தலைவர்களும் இடது சாரி அமைப்புக்களும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கரை மத்யஸ்தக் குழுவின் தலைவராக நியமிப்பதற்கு அச்சம்  தெரிவித்தன.

நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த இராமர் கோயில் கட்டும் வழக்கு விவகாரத்தில் வெள்ளிக்க்கிழமை அன்று மத்யஸ்தம் செய்ய ஒரு குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நல்லதோர் தீர்ப்பாக பல மூத்த பி ஜே பி தலைவர்கள் கருதினர். மத்திய அமைச்சர் உமா பாரதி ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குத்  தலை வணங்குவோம்; இராமர் கோயிலை அதே  இடத்தில் கட்டி முடிக்க வேண்டும். மசூதியைக் கோயிலில் இருந்து  கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கட்டிக் கொள்ளட்டும்’ என்று இத்தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்தார்.

வழிபாட்டு உரிமையைக் கோரி  வழக்குத் தொடுத்த பி ஜே பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி சர்ச்சைக்குரிய அதே இடத்தில் இராமருக்கு கோயில் கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதில் சமரசத்துக்கோ பேச்சு வார்த்தைக்கோ இடமில்லை என்பதை தெளிவுபடுத்தினார். இராமர் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் அவருக்கு கோயில் கட்டுவது குறித்து எந்தக் கேள்விக்கும் இடமில்லை என்றார்.  மத்யஸ்த குழுவுக்கு முன்னால் தன்னுடைய கருத்துகளை விரிவாக எடுத்துரைக்கப் போவதாகவும் சுவாமி தெரிவித்தார்.

மூன்று முக்கிய மனிதர்களைக் கொண்ட மத்யஸ்தக்  குழுவை உச்ச நீதி மன்றம் அமைத்ததை வரவேற்கிறோம்.  ஆனால் இந்த குழு இதுவரை நடந்துள்ள இந்த வழக்கு விவகாரங்களையும் நீதிமன்றங்கள் இதுவரை அளித்துள்ள உத்தரவுகளையும் ஆராய்ந்து பார்த்து மத்யஸ்தம் செய்ய வேண்டும்.  1994 இல் அரசியல் உரிமை சட்டத்துக்கான அமர்வு நீதிமன்றத்தின்  தீர்ப்பு  முதற் கொண்டு, செப்டம்பர் 27, 2018 அன்று வெளியிட்ட மூன்று பேர் கொண்ட அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரை அனைத்தையும் இந்தக் குழு ஆராய வேண்டும். மசூதி என்பது இஸ்லாமிய இறையியலின் ஓர் அங்கம் அல்ல; எனவே அதனை இடம் மாற்றலாம் அல்லது அரசு அதனை இடித்துத் தள்ளலாம். ஆனால் அந்த இராம ஜென்ம பூமி என்பதால் அங்கு கோயில் கட்டி வழிபடுவது என்பது அரசியல் உரிமை சட்டப்படி இந்துக்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.  அத்தகைய சிறப்புடைய இராமர் கோயிலை அந்த இடத்தை விட்டு விட்டு வேறொரு இடத்தில் கட்ட இயலாது.

அது கோயில் இடமா? மசூதியா?

அது கோயில் இடமா? மசூதியா? என்ற பெயர் உறுதி செய்யும் வழக்குக்கே இடமில்லை. இந்த வழக்கு வழிபாட்டுக்கான அடிப்படை உரிமையை வலியுறுத்தும் வழக்காகும். எனவே அந்த இடத்தில் மீண்டும் இராமர்  கோயிலை எழுப்பி அங்கு வழிபாடு செய்யும் அடிப்படை உரிமையை இந்துக்களுக்கு வழங்க வேண்டும். இது இந்திய அரசியல் உரிமை சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை ஆகும் 1993 இல் மத்திய அரசு 67.07  ஏக்கர் நிலத்தையும் விவகாரத்துக்குரிய 0.313 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து  தேசியமயமாக்கிவிட்டது.  உச்ச நீதிமன்றம் இனி அதைக்  கேள்வி கேட்க இயலாது. இப்போது அந்த இடத்தில் மசூதி கட்டி வைத்திருப்பவர்கள் அதற்குரிய இழப்பீட்டையும் பதிலுக்கு வேறு ஒரு இடத்தையும் பெற்றுக்கொள்ள உரிமைப்பட்டவர்கள் ஆவர். எனவே இந்த விவகாரத்துக்கு ஒரே தீர்வு தான் உண்டு. இப்போது மசூதி உள்ள இடத்தில் ராம ஜென்ம பூமியில்  இராமருக்கு புதிதாகக் கோயில் கட்ட வேண்டும். மசூதியை முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் அம்பேத்கர் அல்லது லக்னோ மாவட்டங்களில் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். என்று சுவாமி தனது  அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும் என்று AIMIM  என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவர் அசாதுதின் ஓவைசி கூறினார். ‘மேலும் ‘’உச்ச நீதிமன்றம்  பொதுவான நபர் ஒருவரை மத்யஸ்தம் செய்ய நியமித்திருக்கலாம். இந்தக் குழுவில் உள்ள ஒருவர் ஏற்கெனவே முஸ்லிம்களை மிரட்டினார். இந்தியா இன்னொரு சிரியா ஆகிவிடும் என்று எங்களை அச்சுறுத்தினார். இப்போது அந்த எண்ணங்களை எல்லாம் அவர் தனது  மனதை விட்டு அகற்றிவிட்டு நல்லதொரு தீர்வு காண  ஒத்துழைப்பார் என்று நம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் முடிவை வரவேற்கிறோம்’, என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

அனைத்திந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வெள்ளிக்கிழமை அன்று வரவேற்றுள்ளது. பேச்சு வார்த்தை மூலமாக இந்த ராம் ஜென்ம பூமி – பாப்ரி மசூதி விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதை வரவேற்கிறோம். இது மிகச் சரியான முடிவு. என்று இந்த வாரியத்தின் செயலர் மௌலானா வாலி ரெஹ்மானி குறிப்பிட்டார்.

இந்த வழக்கின் வாதிகளுள் ஒருவரான நிர்மோகி அகாரா அமைப்பைச் சேர்ந்த மகந்த் ராம் தாஸ் என்பவர் மத்தியஸ்தக் குழு  அமைக்கும் முடிவை ஆதரித்தார்.   இந்த வழக்கில் ஒரு இந்து நீதிபதியையும் சேர்த்திருக்கலாம் என்றார். மதய்ஸ்தக் குழு அமைப்பதோடு நீதிமன்றம் தன கடமை முடிந்தது  என இருந்து விடக் கூடாது. இந்த வழக்கு வாதி பிரதிவாதிகளால் மத்யஸ்த குழுவின் முடிவை ஏற்றுக்கொள்ள இயலவில்லை என்ற நிலை வராமல் இவ்விவகாரத்தை இன்னும்   இழுத்துக் கொண்டு போகாமல் விரைவில் ஒரு முடிவை எட்டும்படி தொடர் கண்காணிப்புக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பி எஸ் பி கட்சியின் தலைவர் மாயாவதி உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவைப் பாராட்டினார். ‘ஃபாயிசாபாத் நகரில் அறைக்குள்  [இன் கேமரா] வைத்து மத்யஸ்த பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்பது நேர்மையான முயற்சி.  இரு தரப்புக்கு இடையிலான உறவு ஆரோக்கியமான முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மாண்பமை நீதிமன்றம் முடிவு செய்திருப்பது பாராட்டுதலுக்கு உரியதாகும்’, என்றார்.

சி பி ஐ [எம்] தலைவரான பிருந்தா காரத், ‘இதற்கு முந்தைய  மத்யஸ்த முயற்சிகள் பலனளிக்கத் தவறிவிட்டன. இந்த முறை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் அனைத்து தரப்பினரும் நீதிமன்ற ஆணைக்கு சம்மதித்து உள்ளதால் இந்த முறை பலன் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here