
ஹிந்து மதம் பேசும் பிரபஞ்சத் தத்துவத்தில் மஹா சிவராத்திரி ஒரு முக்கியக் கருத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பிரளயத்தை அல்லது பிரளய முடிவைக் குறிப்பதாகக் கருதப்படும் இந்த நாளில் சிவனது அடியையும், முடியையும் காணவியலாது, முழுவதும் நெருப்புப் பிழம்பாகவே சிவன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்பொழுது சிவன், நடராஜர் கோலத்தில் ஆடிய நடனத்தில் அண்டங்களின் சுழற்சியைப் பற்றிய அற்புதமான அறிவியல் கருத்து இருக்கிறது என்பதை பற்றிப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
சிவராத்திரி என்றால் என்ன?
இருளும், அழிவும், பிரளயமும் ஏற்பட்டால் அங்கு சிவனது அம்சம் இருக்கிறது என்பது பொதுக் கருத்து. அதனால் ஒவ்வொரு இரவும் சிவனுடைய ராத்திரிதான். தினந்தோறும் பகல் மடங்கியபின், உயிர்களை உறங்கவைக்கும் இரவாக வருவது நித்ய சிவராத்திரி எனப்படும்.
பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் ஒவ்வொரு பொறுப்பு இருக்கிறது. அவர்களுள் சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம் பிரமனது தொழில் சுறுசுறுப்பாக நடைபெறும் நேரம். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரம்.
இதன் அடிப்படையில்தான் நம் முன்னோர் நாளைப் பகுத்துள்ளனர். விடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை (1 மணி = 1 ஓரை = 2 1/2 நாழிகைகள்) உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல், மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.
காலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.
மாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உணவும் உடலில் ஒட்டும் நேரம் இது.
இரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.
நம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சமும் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.
இவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. நாம் அறியாத நிலையில் உள்ளே சலனங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இங்கே தான் மஹா சிவராத்திரியின் முக்கியத்துவம் வருகிறது.
மாதாமாதம் சிவராத்திரி வந்தாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மஹா சிவராத்திரி என்கிறோம். இந்த மஹா சிவராத்திரி முடிந்த மறுநாள் கலியுகம் ஆரம்பித்த நாள். ஒரு அழிவைத் தொடந்து இன்னொரு ஆக்கம் வரும் என்று காட்டுவது இது. ஆயினும், பிறப்பது கலியுகம் என்பதால், அழிவிலிருந்து உண்டாகும் ஆக்கம் சுமாரான ஒன்றாகத் தானே இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி வரும்போது – அது அழிவிலிருந்து வருவதால், அதனிலிருந்து உருவாவது ஏனோ தானோ என்றுதானே இருக்கும்? சிறந்த ஒன்று உருவாக வேண்டுமென்றால், ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் அழித்துவிட்டுப் புதிதாக உற்பத்தி செய்தால்தானே உண்டு?
இதுதான் பிரளய கால சிவராத்திரியின்போது, அடி முடி காண முடியாத சிவராத்திரியின் போது நிகழ்ந்து, ஒரு புது சுழற்சி உண்டாக ஏதுவாகிறது. இதைப் புரிந்து கொள்ள வேதம் கூறும் பிரபஞ்ச நிலையை – Vedic Model of Creation-ஐத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேதம் கூறும் பிரபஞ்ச அறிவியல்
இன்றைய அறிவியலார் Big Bang என்னும் வெடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்கின்றனர். வேறு சில ஆராய்ச்சிகள் இந்த ஊகம் தவறென்றும், மாறாக, படைப்பு என்பது நுண்ணிய அணுக்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும் காட்டுகின்றன. வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள் அறிவியலாரை விட இன்னும் விரிந்த சிந்தனையை வேதமதம் காட்டுகிறது என்றால் மிகையில்லை. அவை:
1) நாம் இருக்கும் இந்த அண்டவெளி மட்டுமல்ல, கோடானு கோடி அண்டவெளிகள், பலப் பல உலகங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கின்றன.
2) நமக்கு மேலும் கீழும் நமக்கு அப்பாலும் நம்மை அப்பால் கொண்டும் பிரபஞ்சங்கள் இருக்கின்றன.
3) அவை எல்லாம் ஹிரண்யகர்பன் என்றும் சொல்லபடும் முழுமுதல் இறைவனின் கர்ப்பத்தில் உள்ளன.
4) கணக்கிட இயலாதவையாக அவை உள்ளன.
5) இந்த உலகங்கள் என்று ஆரம்பித்தன என்றும் தெரியாத, சொல்ல முடியாத ஆதியும் இல்லாமல், அந்தமும் இல்லாமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றிலும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கின்றன.
ஆதாரங்கள்
பிரபஞ்ச அமைப்புக்கு ஆதாரமாக புருஷ சூக்தம் கூறும் கருத்து கவனிக்கத் தக்கது. இறைவனே படைத்து, எல்லாவற்றிலும் வியாபித்து இருந்தாலும், தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே. அவரது முக்கால் பங்கு அழிவற்றதான விண்ணில் இருக்கிறது. பரம்பொருளின் முக்கால் பங்கு மேலே விளங்குகிறது. எஞ்சிய கால் பங்கு மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது என்று 3, 4 -ஆம் ஸ்லோகங்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட அமைப்பு எவ்வாறு இருக்கும் என்று சிந்தித்தால், அது சக்கர வடிவுடையதாக இருக்க வேண்டும். இதற்கும் பிரமாணம் உள்ளது. ச்வேதாஸ்வதர உபநிஷதத்தில், இந்தப் பிரபஞ்சம் பிரம்ம சக்கரமாக உள்ளது என்று விவரிக்கப்படுகின்றது. இதன் பலவித பாகங்களும் விவரிக்கப்பட்டு, இதில், கர்மம் என்னும் பாசக் கயிற்றில் கட்டப்பட்டு ஜீவன் சுழன்று வருகிறான். மீண்டும் மீண்டும் சுழலுகையில், பிரம்ம ஸ்வரூபத்தைப் புரிந்துகொண்டு, இந்தச் சக்கரத்தில் சுழலச் செய்யும் பிறவிப் பிணியிலிருந்து முடிவில் விடுபடுகிறான்.
உலகங்களையும், பால்வெளி போன்ற கலாக்சிகளையும் (Galaxies) தன்னகத்தே கொண்ட பிரபஞ்சம் சுழலும் சக்கர வடிவினதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பில்தான், ஆதியும் இருக்காது, அந்தமும் இருக்காது. சக்கர அமைப்பில்தான் எங்கே தோன்றியது, எங்கே முடிந்தது என்று சொல்ல முடியாமல் இருக்கும். கணக்கிலடங்காத பல சக்கரங்கள் ஒன்றுக்கு அப்பால் ஒன்றென infinity அளவில் இருக்க முடியும். ஒன்றுக்கு மேலும், அல்லது கீழும் என்றும், Concurrent circles- ஆக முடிவில்லாமல், கணக்கில்லாமல் ஒன்றை அடுத்து ஒன்றாகவும் இருக்க முடியும்.
கால நேமி என்று உபநிஷத் சொல்லும் இந்த அமைப்பில் தோற்றம் என்னும் நிலையில் கால் பங்கு உள்ளன. முக்கால் பங்கு என்றுமே தோன்றாதவை.
இந்த அமைப்பில் உலகங்கள் நுண் அணுத் துகள்களாக unmanifest எனப்படும் வெளிப்பாடு இல்லாத முக்கால் பகுதியில் சுற்றி வரும். தோற்றம் இருக்கும் கால் பகுதியுள் நுழையும்போது ஸ்ட்ரிங் தியரி (String theory) போல, தெரியா நிலையிலிருந்து, தெரிநிலைக்கு, அதாவது manifest நிலைக்கு மாறி தோற்றம் அல்லது படைப்பு என்னும் பகுதிக்குள் விரையும்.
நடராஜர் நடனத்தில் சுழலும் பிரபஞ்சம்
அப்படிப்பட்ட அமைப்பு நடராஜரின் தாண்டவக் கோலத்தில் காணப்படுகிறது. நடராஜர் உருவ அமைப்பு, நாட்டியத்திலும், சிற்ப சாத்திரத்திலும் சில குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டது. ஒரு வட்ட வடிவத்தினுள், இரண்டு முக்கோணங்களை மேலும், கீழுமாக உள்ளடக்கியது.
நடராஜர் உருவத்தை இந்த அமைப்புக்குள்தான் வடிவமைப்பர்.
நடராஜரைக் கவனித்தால், ஒரு அரிய காஸ்மிக் அமைப்பு புலனாகும். அவரது மேல் இரண்டு கைகளிலும், ஒன்றில் உடுக்கையும், மற்றொன்றில் அக்னியும் வைத்திருப்பார். இந்த இரண்டு கைகளையும், அவரது நாபியுடன் இணைத்து, கோடுகளாக நீட்டினால், அவை சக்கரத்தை 90 பாகைகளிலான 4 சம கூறுகளாகப் பிரிக்கும். இங்குதான் வேத மதம் கூறும் Theory of Creation- பிரபஞ்சத்தின் அமைப்பு புலப்படுகிறது.
வலக்கை உடுக்கையிலிருந்து, இடக்கை அக்னி வரை இருப்பது ‘தோன்றும் பிரபஞ்சம்’ (the visible part of Creation). அக்னியிலிருந்து, உடுக்கை வரை unmanifest பிரபஞ்சம் (the invisible part of Creation). அதன் மையப்பகுதி அந்தகாரம் என்னும் அதி இருட்டு. அது, அசுரனை மிதித்து அடக்குவதாகக் காட்டப்படுகிறது.
நடராஜர் தன் இடது காலை வீசி உயர்த்திய வீச்சு காட்டும் பகுதி, தோற்றத்திற்குத் (படைப்புக்குத்) தயாராகிற – இன்னும் உருவம் கொள்ளாத – பிரபஞ்சத் துகள்கள் இடித்தும், வெடித்தும் அழிவின் மூலம், ஆக்கம் நோக்கிப் பாயும் பிரபஞ்சப் பகுதியைக் காட்டுகிறது.
அந்தப் பகுதியில், மற்ற இரு கைகளின் முத்திரைகளும், Force- அதற்குப் போட்டியான Anti-Force தத்துவங்களாக சிவன் – பார்வதி போட்டியைக் காட்டுகின்றன. உடுக்கை அடிக்கும் கைப் பகுதியை நெருங்க நெருங்க, ஊர்த்துவ முகமான, மேல் நோக்கிய கை, செல்லும் பாதையைக் காட்ட, உடுக்கையின் ஓம்கார நாதத்திலிருந்து உலகங்கள் பிறக்கின்றன. ஒலி அலைகள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் படைத்தல் (Creation) ஆரம்பமாகிறது என்று உடுக்கை ஒலி உணர்த்துகிறது. இது சாத்தியமே என்று அறிவியலாரில் ஒரு சாரார் இப்பொழுது எண்ணத் தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாதப் பிரம்மம் என்னும் ஒலி அலைகளிலிருந்து தான் படைப்பு உருவாகிறது என்பதை சங்க நூலான பரிபாடலும், “கரு வளர் வானத்து இசையில் தோன்றி” (verse 2- line 5) என்று குறிப்பிடுகிறது. இந்தக் கோணத்தில் அறிவியல் இன்னும் பயணிக்கவில்லை என்பதே உண்மை.
மேல் காட்டிய படத்தில் உடுக்கை முதல், மறுகையில் உள்ள அக்னி வரை இருக்கும் பகுதி சக்கரத்தின் கால் பகுதி. இதுவே புருஷ சூக்தம் கூறும் மீண்டும் மீண்டும் தோன்றி வரும் கால் பங்கு பிரபஞ்சம். இந்தப் படத்தில், உடுக்கைப் பகுதியில், படைப்புக் கடவுளான நான்முகப் பிரமனின் வேலை தொடங்குகிறது. இங்கே சிவனுக்கு வேலை இல்லை. மேலும் கீழும், எல்லை இல்லாத இந்தப் பகுதியில், பல பிரமன்கள் பல்வேறு பிரபஞ்சங்களில் படைப்புக்கு ஆதாரமாக விளங்குகின்றார். இங்கே சிவனும் தென்படுவதில்லை. விஷ்ணுவும் தென்படுவதில்லை.
படைப்பு தொடங்கியவுடன், அது விஷ்ணு பதம் ஆகிறது. உடுக்கைப் பகுதி முதல், அக்னிப் பகுதி வரை, விஷ்ணுவின் காக்கும் பகுதியும், காலமும் ஆகும். இது பிரமனின் ஆயுளில் 100 வருடங்கள். (31104000,00,00,000 மனித வருடங்கள். ஏறத்தாழ 3 X 10^14 வருடங்கள் என்றும் எழுதலாம்) நாம் இன்று இருப்பது பிரமனின் ஆயுளில் 50 வருடங்கள் முடிந்த பிறகு மறுநாள் மத்தியானம். அதாவது, நடராஜரது தலை உச்சி காட்டும் பகுதியில் நாம் இப்பொழுது இருக்கிறோம். இன்னும் பாதி காலம் தாண்டினால் இந்தப் பிரபஞ்சம், அக்னிப் பகுதியைச் சென்றடையும்.
படைத்து, காத்த இந்தப் பிரபஞ்சம், முழு அழிவைச் சந்திக்கும் இடம் அது. அங்கே பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் வேலை இல்லை. மேலும், கீழும் பார்த்தாலும், எல்லை இல்லாத அக்னிப் பிழம்பாக இருக்கும் அதுதான் மஹா சிவராத்திரி. அது தான் அடி முடி காண இயலா அதிசயம் நிகழும் இந்தப் பிரபஞ்சத்தின், அதன் தோற்றத்தின் முடிவு நாள்.
தோற்றம் உள்ள பிரபஞ்சத்திலிருந்து, தோன்றவியலாத முக்கால் பங்கு பிரபஞ்சத்திற்கு உலகங்கள் விரையும்போது, சிவபெருமானின் பிரளய அக்னியில் உலகங்கள் எல்லாம் அழிகின்றன. இந்தப் பகுதியில், குறுக்குவாட்டிலும், நெடுக்குவாட்டிலும் அக்னிதான் உள்ளது. ஒரு சுவராக, ஒரு மா மலையாக இந்த Exit- zone-இல் சிவபெருமான் அக்னி ரூபத்தில் நிற்கிறார். அதுதான் அடி முடி காண இயலா உருவம். அது நடந்தது அல்லது நடக்கப்போவது மாசி மாத தேய்பிறை சதுர்தசியில். அதுவே மஹா சிவராத்திரி எனப்படுவது.
மஹா சிவராத்திரியின் முக்கியக் கதை, அழிவிலிருந்து உயிர்களைக் காப்பாற்றுமாறு பார்வதி வேண்டிகொண்டது. கால் பங்கு தோற்ற வெளியில், பிரமனின் 100 ஆண்டு காலமும், உயிர்கள் கர்ம வினையில் பிணைபட்டு உழன்று விட்டன. இப்பொழுதோ ‘ஆட்டம் க்ளோஸ்’ என்று சிவபெருமான் தாண்டவம் ஆடுகிறார். அப்படி என்றால், இன்னும் முக்கால் பங்கு பிரபஞ்சமும், அதாவது பிரமனின் வயதுக் கணக்கில் 300 வருடங்களும் உயிர்கள் பிணைபட்டுக் கிடக்க வேண்டுமா? அவற்றுக்கு விடிவு கிடையாதா என்று பார்வதி வேண்டிக்கொள்ளவே ‘கடைசி சான்ஸ்’ என்று மஹா சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படவே, சிவபெருமான் உயிர்களுக்கு விடிவு கொடுக்கிறார்.
அந்தகாரமான இருளிலும், அழிவிலும் கூட நடராஜரது ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவரது பலம் வெளித்தெரியும் சிவராத்திரியில், பக்தர்களும், அந்தச் சலனத்தை மேற்கொண்டு, கண்விழித்து அவரைத் தியானிக்கிறார்கள். அந்தத் தியானம் கடவுள்களுள் யார் பெரியவர் என்று தெரிந்து கொள்வதற்காக அல்லது தெரிந்து கொண்டதற்காக அல்ல. பிரளயாக்கினியிலிருந்து தப்ப, அதைத் தரும் சிவபெருமானை வேண்டி விடுதலை பெறவே, அடி முடி காண இயலாத இறைவனாக வழிபடுகின்றனர் .
இந்தத் தாத்பரியத்தின் ஒரு அடிப்படைதான், நான்முகப் பிரமனுக்குக் கோவில் இல்லாமல் இருப்பது (சில இடங்களில் விதிவிலக்காக இருக்கின்றன.) பிரமன் இயங்கும் இடம், உடுக்கை காட்டும் படைப்பின் ஆரம்ப இடம். பிரமனிலிருந்துதான் மற்ற கடவுள்கள் தோன்றுகின்றனர். அவர்கள் தத்தமது செய்யல்பாடுகளாக படைப்பை மேலும் எடுத்துச் செல்கின்றனர். அதனால் தோற்றம் உள்ள கால் பங்கு பகுதியில் பிரமனைக் காண இயலாது. அங்கே பிரமனுக்குக் கோயில் கிடையாது. மாறாக, எல்லாக் கோயில்களிலும், வருடாந்திர பிரம்மோத்சவத்தின் போது, பிரமன்தான் அங்கு உற்சவத்தை நடத்திச் செல்பவராக முதலில் இருக்கிறார். அதுதான் பிரம்மோத்சவத்தின் பெயர்க் காரணமும் ஆகும்.
படைப்பு என்று உயிர்கள் கால் பதித்தவுடன், அங்கு தானும் கால் பதிப்பவர் விஷ்ணு. பிரமனின் 100 வயது காலமும், ஓடி ஆடி, அவதாரங்கள் பல எடுத்து, உயிர்களைக் காத்து, வழிப்படுத்தி என்று, ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ வேலை விஷ்ணுவுக்கு.
மேலே காட்டிய படங்களில், ஒவ்வொரு சுற்றும், ஒரு குறிப்பிட்ட பௌதிக விதிகளுக்குட்பட்ட பிரபஞ்சம். இதைப் போல், கணக்கிடமுடியாத பல பிரபஞ்சங்கள் மேலும் கீழும் அடுக்குகளாகவும், பக்கவாட்டில் விரித்து கொண்டும், அதனதன் விதிகளுக்கு உட்பட்டு கால் பங்கு தோற்றமாகவும், முக்கால் பங்கு தோற்றம் இல்லாத சஞ்சரிப்பாகவும் உள்ளன. எந்நேரமும் கால் பங்கு பகுதியில் நுழைவும், நீங்குதலும் நடந்து கொண்டே இருக்கின்றன. எந்நேரமும் புதிது புதிதாக பிரமன்கள் தோன்றிப் படைத்துக்கொண்டே இருக்கின்றார்கள். விஷ்ணுவும், சிவனும் தொழில் செய்துகொண்டே இருக்கின்றார்கள். எல்லா பிரமன்களுக்கும் ஆயுள் 100 தான். சக்கரத்தின் அச்சின் அருகில் உள்ள பிரபஞ்சத்தில் வேகம் அதிகம். சீக்கிரமே 100 வயது ஆயுள் முடிந்து விடும். ஆனால் ஆயுள் 100 என்பதற்கு ஏற்றார்போல் நாள், வருடக் கணக்குகள் அங்கே இருக்கும்.
இவை எல்லாமே சக்கர வடிவான அமைப்பில் சௌக்கியமாக இருக்கின்றன. ‘சௌக்கியமாக’ என்று ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால், வாஸ்து சாத்திரப்படி, 16 வித நில அல்லது கட்டமைப்புகளுள், ‘விருத்தாகாரம்’ என்னும் வட்ட வடிவ அமைப்பு சிறந்தது. பாதுகாப்பனது. அது மட்டுமல்ல, அறிவு ஆன்மிக வளர்ச்சிக்கு உதவுவது. கல்விச் சாலைகளும், ஆன்மிகம் போதிக்கும் மடங்களும் வட்ட வடிவில் இருப்பது சிறந்தது.
சக்கரத்தாழ்வாரும் சுதரிசனமும்
நடராஜருடைய பிரபஞ்ச அமைப்பிலேயே சக்கரத்தாழ்வாரும், யோகத்தில் ஆழ்ந்து யோக நரசிம்ஹரும் பயணிக்கின்றனர்.
பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்து, எல்லாப் பொருள்களிலும் உள்ளிலிருந்து கடையும் கடவுளாக, நமக்குள் யோகேஸ்வரனாக இருப்பதையும், சக்கரத்தாழ்வானாகக் காப்பதையும், பிரபஞ்சச் சுழற்சியைக் காட்டி நடராஜராக தாண்டவம் ஆடுவதையும் ஒரே உருவில் காட்டப்படும் அந்தச் சக்கரம் சு-தர்சனச் சக்கரம். சுதர்சனம் என்றால் சிறந்த தரிசனம் என்று பொருள்.
சக்கரம் போல் சலனங்கள் சுற்றிச் சுற்றி வரும் நம் உடலிலும், ஒரு உறுப்புக்கும் மற்றொரு உறுப்புக்கும் போட்டி கிடையாது, பொறாமை கிடையாது. கண், ஒலியைக் கேட்காது, காது, காட்சிகளைப் பார்க்காது. அவை அவை தத்தம் செயல்களை ஆற்றுகின்றன. ஆனால் நாம் எப்பொழுதுமே மூளையை நினைவில் கொள்வதில்லை. உறுப்புகளின் செயல்பாடுகள் மூலமாக மூளையின் முக்கியத்துவத்தை அறிகிறோம். மூளையைப் போல அந்தப் பரம்பொருள் இருக்கிறான். அவன் இருக்கிறான், அவனே நம் குறிக்கோள் என்று புரிந்து கொள்ள, நம் உடல் உறுப்புகள் போல பல கடவுளர்களும் உதவுகின்றனர்.
அக்கடவுளர்களுக்குள் போட்டி என்றோ, சண்டை என்றோ கதைகள் வழங்கி வந்தால், சிறிய குழந்தைகள் போல வெளிப் பார்வைக்குத் தெரியும் கதையை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏதோ உள்ளர்த்தம் இருக்க வேண்டும் என்று தேட வேண்டும். அப்படி நம்மைத் தேடச் செய்வதற்குத் தான் அப்படிப்பட்ட கதைகள் எழுந்துள்ளன.
தேடினால் தான் கிடைக்கும், சு-தர்சனம்- இறைவனின் சிறந்த தரிசனம்; அவனே அடி முடி காணவியலாத அருட் பெரும் ஜோதியாகவும் இருக்கின்றான் என்ற தெளிவும்.