சனிக்கிழமை தில்லி போலிசார் நீதிமன்றத்தில் புதிய ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க மறுத்துவிட்டனர். முன்பு சுனந்தாவின் மரணம் நிகழ்ந்த போது அதில் காணப்பட்ட மர்மத்தை மறைக்க இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் பெரு முயற்சி எடுத்து முதல் தகவல் அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையில் மறைக்கப்பட்ட விஷயங்களை கண்டு பிடித்து டில்லி போலீசார் புதிய விஜிலென்ஸ் அறிக்கை ஒன்றை தயார் செய்தனர். ஆனால் அதை நீதிமன்றத்தில் அளிக்க மறுத்துவருகின்றனர். சுவாமி நீதிமன்றத்தில் முதல்தகவல் அறிக்கையில் பல தடயங்கள் மறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி புதிய அறிக்கை கேட்டிருந்தார். டில்லி போலிசார் சுவாமி கேட்டிருந்த அறிக்கை வழக்குக்கு பொருத்தமற்றது என்றும் அரசுதரப்பு வக்கீலுக்கு இந்த அறிக்கை எந்த விதத்திலும் உதவாது என்றும் தெரிவித்துவிட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி தரூரின் வக்கீலும் சுவாமியின் கோரிக்கையை மறுத்தது தான் வேடிக்கை.
டில்லியின் அரசு வக்கீலான அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா அரசு தரப்புக்கு உதவ வேண்டிய அவசியமே இப்போது எழவில்லை. இந்திய தண்டனை சட்டம் 306 பிரிவின் கீழ் தொடுக்கப்பட்ட இவ்வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் தான் நடக்க வேண்டும் என்றார். நீதிமன்றத்தில் டில்லி போலீசார் விஜிலென்ஸ் ரிப்போர்ட் பற்றி எதுவும் தெரிவிக்காமல் அதை சமர்ப்பிக்காமல் இருந்துவிட்டனர். சுவாமி நீதிமன்றத்தில் ‘’குற்றவியல் சட்டத்தில் 301 & 302 ஆம் பிரிவுகள் தனி நபர் அரசு தரப்பு வாதத்தில் உதவி செய்வதையும் வழக்கு நடத்துவதையும் அனுமதிக்கிறது’’. என்றார்.
முதல் ஆய்வு குழுவினர் செய்த தகிடு தத்தங்களை புதிய விஜிலன்ஸ் அறிக்கையில் விளக்கியிருப்பதால் அதனை நீதிமன்றம் படித்துப் பார்ப்பது அவசியமாகும். எனவே டில்லி போலீசார் அந்த விஜிலென்ஸ் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு நீதிமன்றமும் உத்தரவு போட வேண்டும் என்று சுவாமி வாதிட்டார். ‘’உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்ந்த பின்பு தான் போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையையும் தயாரித்தனர்.’’ என்று சுவாமி நீதிமனறத்தில் பொலிசாரின் அலட்சியத்தை எடுத்துக்காட்டினார். அவருக்கு உதவியாக நீதிமன்றத்துக்கு இஷ்கரன் பண்டாரியும் திலிப் குமாரும் வந்திருந்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்ற நீதிபதி சமர் விஷால் முரண்பாடான விஜிலன்ஸ் ரிப்போர்ட்டை சமர்ப்பிப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கவும் சசி தரூர் சமர்ப்பித்த பிணை மனு [ஜாமீன் மனு] குறித்து ஆராயவும் இந்த வழக்கை ஜுலை 26ஆம் நாள் பிறபகல் இரண்டு மணிக்கு ஒத்தி வைத்தார். கூடுதல் அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு ஊடகங்கலும் ‘’இணை ஆணையர் விவேக் கோகியா மேற்கொண்ட ஆய்வில் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதை டில்லி போலிசாரின் விஜிலன்ஸ் ரிப்போர்ட் வெளிப்படுத்தியுள்ளது’’. என்பதைத் தெரிவிக்கின்றன.சசி தரூரை காப்பாற்றும் நோக்கில் இந்த முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதை விஜிலன்ஸ் ரிப்போர்ட் ஆதாரங்களோடு விளக்கியுள்ளது. சுனந்தா செத்து கிடந்த படுக்கை விரிப்பை கூட போலீசார் பத்து மாதங்கள் கழிந்த பின்பே ஓட்டலில் இருந்து பெற்றுள்ளனர். சுனந்தாவின் அலைபேசிகளை சுனந்தா இறந்த அன்றே அவரது கணவர் தரூரிடமே போலீசார் கொடுத்துவிட்டனர். பின்பு சில நாட்கள் கழித்து அவற்றை போலீசார் வாங்கி ஆராய்ந்த போது அவற்றில் பல தடயங்கள் அழிக்கப்பட்டிருந்தன.
பல போலிஸ் அதிகாரிகள் கோகியாவின் அறிவுறுத்தலின் படியே அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். ஓட்டலின் கண்காணிப்பு [சி சி டி வி] கேமராக்களின் பதிவுகளும் தொலைந்துவிட்டன. இவற்றில் சுனந்தா மரணம் நிகழ்ந்த 2014. ஜனவரி மாதம்17 அன்று அவரை வந்து சந்தித்த மனிதர்களின் பதிவுகள் கிடைத்திருக்கும். அவர்களை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கத்தில் வேண்டுமேன்றே அழிக்கப்பட்டனவோ என்ற ஐயம் தோன்றுகிறது.
காலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சசி தரூர் பவுன்சர் எனப்படும் மெய்க்காப்பாளர், அவருக்கு பிணை பத்திரம் அளிப்போர் ஆகியோருடன் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். திருவனந்தபுரத்தின் பாராளுமன்ற உறுப்பினரான தனக்கு ஜுலை ஐந்தாம் தேதி அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தரப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
கூடுதல் தலைமை பெருநகர் நீதிபதி சமர் விஷால் சசி தரூர் நீதிமன்றத்தில் ஒரு இலட்ச ருபாய் ரொக்கம் செலுத்தியதும் ஜாமீன் அளித்தார். அவருக்கு பிணை அளிக்க வந்தவரையும் ஒரு இலட்ச ருபாய் பிணைத் தொகை செலுத்தும்படி தெரிவித்தார். பின்பு தரூருக்கான இடைக்காலப் பிணையை நிரந்தரப் பிணையாகவும் மாற்றினார்.
இந்தியக் குற்றவியல் சட்டம் 306 [தற்கொலைக்கு தூண்டுதல்] மற்றும் 498A [மனைவியை கொடுமைப்படுத்துதல்] என்ற பிரிவுகளின் கீழ் சசி தரூரை மட்டும் குற்றம் சாட்டி 3500 சொற்களில் குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. டில்லி போலீசார் சுனந்தாவின் உடம்பில் உள்ள பன்னிரெண்டு காயங்களுக்கான அடையாளங்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர். கொலை மற்றும் தடயங்களை அழித்தது தொடர்பாக தரூர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர். விஜிலென்ஸ் ரிப்போர்ட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த பிரேதப் பரிசோதனை அறிக்கையும் விரைவில் சசி தரூர் கைகளில் விலங்கை மாட்டும் என்பது சட்ட நிபுணர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.