தர்மமும் அதிகாரமும்

தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது

தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது
தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது

மேலே விவாதிக்கப்பட்ட விஷயங்களில் பல இடங்களில் அதிகாரத்தில் இருப்போர் தர்மத்தின் வழியில் செல்வது கிடையாது என்பது தெளிவாகிறது.  தர்மமும் அதிகாரமும் ஒன்றாக செல்வது கிடையாது.  தர்மம் இல்லாத இடத்தில் இருக்கும் அதிகாரம் மக்களுக்குப் பயனற்றது. தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்படாத எந்த சட்டமும் மக்களை நல்வழிப்படுத்த இயலாது. பீஷ்மர் அதிகாரத்தில் உள்ளவன் சொல்வது தான் இங்கு இப்போது தர்மம் என்றார். இன்றைக்கும் இதே நிலை தொடர்வதை காண்கிறோம். ஆனால் அது தவறு. தர்மத்தை காக்காத மன்னனோ மந்திரியோ அதற்குண்டான பலனை அனுபவிப்பர். இது சாபம் அல்ல.

துச்சாதனன் துகில் உரியும் போது திரவுபதியின் உடலின் ஒவ்வொரு அணுவும் அனுபவித்த  அவமானத்தை பீஷ்மர் தனது  அம்பு படுக்கையில் இருக்கும் போது அனுபவித்தார்

இயற்கை நியதி. இது மதம் பாவி என்று எவரையும் சுட்டவில்லை. ஆனால் செத்தவரை வணங்கும் ஒரு மதமும் தம்மை தவிர மற்ற அனைவரையும் சாகடிக்க வேண்டும் என்று கற்பிக்கும் மற்றொரு மதமும் மனிதராகப் பிறப்பதே ‘ஜென்ம பாவம்’ என்கின்றன. இந்து மதம் என்ன சொல்கிறது? நீ என்ன விதைக்கிறாயோ அதையே நீ அறுவடை செய்வாய் என்கிறது. இது ஓர் உலகளாவிய தத்துவம். இதை எவரும் மறுப்பதற்கில்லை. பீஷ்மர் திரவுபதி தர்மம் எங்கே எனக் கேட்ட போது சொன்ன பதிலுக்காக 13 ஆண்டுகள் கழித்து அம்பு படுக்கையில் இருந்த போது வருத்தப்பட்டார். துச்சாதனன் துகில் உரியும் போது திரவுபதியின் உடலின் ஒவ்வொரு அணுவும் அனுபவித்த  அவமானத்தை பீஷ்மர் தனது  அம்பு படுக்கையில் இருக்கும் போது அனுபவித்தார்.

பீஷ்மர் அம்பு படுக்கையைத் தேர்தெடுத்ததற்கு ஒருவர் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால் அன்று திரவுபதியை பாதுகாக்காத குற்றத்துக்காக பீஷ்மரை  இயற்கை நீதி அம்பு படுக்கையில் வைத்து தண்டித்தது என்று கருதுவதே சரி. சட்டமும் தர்மமும் வெவ்வேறாக இருந்தால் தர்மம் ஒரு நாள் சட்டத்தை தண்டிப்பது உறுதி.  தர்மத்தை காக்கத் தான் சட்டமே தவிர சட்டத்தின் போக்குக்கு தர்மத்தை வளைக்க கூடாது.

வீட்டு விலக்கு பிரச்சனை

சபரி மலை கோயிலுக்கு வீட்டுக்கு விலக்கான பெண்கள் ஏன் போக கூடாது என்பதற்கு ஒரு காரணம் உண்டு. கோயில் என்பது ஒரு கட்டிடம் அல்ல. அங்கு யந்திரம் மந்திரம் தந்திரங்களால் விக்கிரகம் நிலை நிறுத்தப்பட்டு அதற்கு தெய்விக சக்தி ஏற்றப்படுகிறது. அதன் பிறகு கோயில் பிரபஞ்ச சக்திகளோடு இணைந்து அதன் பிரதிபலிப்பாக இயங்குகிறது. கோயில்களின் கட்டுமானமே அதன் கொடி மரம் போன்றவை  இயற்கையின்  பிரபஞ்ச  சக்திகளை பூமிக்குக்  கொண்டு வருவதற்கு ஏதுவாக ‘ஆண்டெனா’ போல் அமைக்கப்பட்டுள்ளது. 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இது பற்றி ஓர் ஆய்வு நடத்தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது. [சென்னையில் அந்த ஆண்டு தீவு திடலில் நடந்த வர்த்தகக் கண்காட்சியில் கோயில் அதிசயங்கள் பற்றிய பரிசோதனைகள் செய்து காட்டப்பட்டன]

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் இக்கண்காட்சிக்கு பரிசோதனை கூடத்துப் பொருட்களை எல்லாம் கொண்டு வந்து சுலோகம் சொல்லும் போதும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போதும் பழங்கள் மற்றும் இலைகளை காணிக்கையாக இறைவனுக்கு அளிக்கும் போதும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவியல் பூர்வமாக செய்து காட்டினர். இப்பரிசோதனைகளுக்கு பொறுப்பாக இருந்த பேராசிரியர் கோயில் வழிபாட்டில் அறிவியல் காரணம்

அதிகளவில் மறைந்து இருக்கிறது என்பதை உறுதிபட எடுத்துரைத்தார்

இதற்கிடையே யாகங்களின் [Athirathram Yajna ] அறிவியல் உண்மை பற்றிய ஆய்வும் நடந்து வந்தது,  அது போல அக்னிஹோத்ர ஹோமம் போன்ற ஹோமங்கள் குறித்தும் ஆய்வு நடந்தது. போபால் விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களின் துயரம் தீர்க்க ஹோமங்களின் மூலமாக முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் வீட்டுக்கு விலக்கான ஒரு பெண் ஹோமத்திற்குப் பயன்படுத்தும் பாத்திரங்களைத் தொட்டதால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இந்து மதத்தில் நடத்தப்படும் யாகங்கள் மற்றும் ஹோமங்கள் குறித்து விரிவான அறிவியல் ஆய்வு நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்து மதத்தின் தொன்மையை நிரூபிக்கும் வகையில் பல ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். எந்த ஒரு பண்பட்ட சமூகமும் தனது பாரம்பரியங்களை வருங்கால சந்ததியினரும் மாறாமல் பின்பற்ற வேண்டுமென்று தான் கருதும் அவ்வாறான ஒன்று தான் வீட்டுக்கு விலக்கான பெண்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்பது. ஆனால் அதை உணராத கேரள அரசு  கோயிலின் புனிதம் கெடும் வகையில் நாற்பது வயது பெண்களைப் பாதுகாப்புடன் அழைத்து சென்று கோயிலுக்குள் விட்டு தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றிவிட்டதாக மார் தட்டி கொள்வதில் எந்த நியாயமும் இல்லை.  சட்ட வல்லுனர்களும் கோயிலுக்குள் பெண்கள் செல்வதால் கோயிலுக்கோ பெண்களுக்கோ எந்த தீங்கும் வராது என்கின்றனர். என்ன தீங்கு வரலாம் என்பதை எடுத்து கூறும் பொறுப்பு நம்முடையது தான். அதற்கான ஆராய்ச்சிகளை நாம் செய்து முடிக்கவேண்டும். பாரம்பரியத்தின் பெருமையை அறிவியல் பூர்வமாக நிறுவ முயல வேண்டும்.

கோயிலில் முறைகேடுகள், ஒழுங்கீனங்கள் நடக்கும்போது அவற்றை சரி செய்ய பரிகாரச் சடங்குகளை நம் முன்னோர் கற்றுத் தந்துள்ளனர். சுத்திகரணம் என்ற சடங்கை செய்து இது போன்ற நேரங்களில் கோயிலைத் தூய்மைப் படுத்துகின்றனர். இந்த சடங்கு இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. காலம் காலமாக நம் இந்துப் பாரம்பரியத்தில் இருந்து  வருகிறது.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவம் பற்றி ஆராயும்போது தர்மத்தின் காவலர்கள் எனப் போற்றப்பட்ட விதுரர், பீஷ்மர், தர்மர் ஆகிய மூவருள் யுதிஷ்டிரன் எனப்படும் தர்மர்  பணயமாக வைத்து தனது மனைவியை இழந்ததன மூலமாக  ஒரு செய்தி நமக்கு அளிக்கிறார். அதாவது பெண் என்பவள் ஒரு உடைமை அல்ல; அவள்  அடிமையும் அல்ல அவள் மனித உணர்வும் மனமும் கொண்ட ஒரு தனி மனுஷி.  இந்தக் கருத்தை துரியோதணன் சபையில்  பீஷ்மர் உரத்த குரலில்  சொல்ல பயந்தார். ஆனால் விதுரர் ஒரு கருத்தை எடுத்துரைத்தார். யுதிஷ்டிரன் தன்னை இழக்கும் முன்னர் திரவுபதியை பணயப் பொருளாக வைத்திருந்தால் அவளை இழந்திருக்கலாம் ஆனால் அவர் தன்னை இழந்த  பின்பு திரவுபதி மீது அவருக்கு அந்த உரிமை கிடையாது என்றார். அவர் திரவுபதியை யாரும் பணயம் வைக்க முடியாது என்றதால் அவளை வைத்து ஆடுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அவளை வைத்து யாரும் வெல்லவும் இல்லை தோற்கவும் இல்லை என்றார். அதாவது அவள் சுதந்திர மனுஷி என்று சொல்லி விட்டார்.

இதை விட பெண்களை சுதந்திரமானவர்கள் என்று சொல்ல வேறு ஆதாரம் எதுவும் வேண்டுமா? தர்மத்தின் அடிப்படையில் உருவான மதம் பெண்ணுக்கு அதர்மமான காரியங்களைச் செய்யுமா? இன்றைக்கு ஏராளமான துச்சாதனர்கள் இந்து மதத்தை துகில் உரிகின்றனர்.

திரவுபதி இயக்கத்தில் இருந்து இந்து மதத்தை மீட்பது எப்படி?

திரவுபதி துகிலுரியும் கதை நமக்கு ஏராளமான விஷயங்களை எடுத்து சொல்கிறது. திருதராஷ்டிரர் அவளுக்கு வரம் தர முன்வந்த போது அவள் முதலில் யுதிஷ்ட்ரனையும் பின்பு மற்ற நால்வரையும் விடுதலை செய்யும்படி கேட்டாள். இன்னும் அதிகமாக கேள் என்று சொல்லியபோது அவள் பேராசை பெரு நஷ்டம் என்று சொல்லிவிட்டாள். பேராசையினால் நற்குணங்கள் அழிந்து விடும் என்பது அவளது கருத்து.

ஐந்து பாண்டவர்களும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலையான பின்பு திரவுபதிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக அவள் மானம் காப்பாற்றப்பட வேண்டி போர் தொடுத்தனர்.  உடம்பின் ஐம்புலன்களும் பேராசையின் சங்கிலியால் கட்டி போடப்பட்டுள்ளன. அவற்றை தர்மம் ஒன்றினால் மட்டுமே விடுவிக்க முடியும். தர்மத்தினை அனுசரித்து வந்தால் நாம் இந்து மதத்தை திரவுபதியின் நிலைக்கு உள்ளாக்காமல் தடுக்க முடியும்.  அவளை அப்படியே விட்டுவிட முடியாது.. நாம் நமது தர்மத்தை திரவுபதியை காப்பாற்றியாக வேண்டும். நாம் யாராக இருந்தாலும், பிரதமரோ, தலைமை நீதிபதியோ, யாத்ரீகரோ, சராசரி மனிதரோ யாராக இருந்தாலும் அவரவர் தர்மத்தின் படி செயலாற்ற வேண்டும்.

இந்து மதத்தின் பல பிரிவுகளின் தலைவர்களும் ஒரு குடைக் கீழே இணைந்து செயல்பட வேண்டும்

ஒரு யாத்ரிகர் தன பயணத்தை ஒத்தி போடுவது போல சுருக்கிக் கொள்வது போல திசையை மாற்றி செல்வது போல ஒரு தாந்திரி இருக்க இயலாது.  கோயிலின் விக்கிரகதத்துக்கு மந்திரம் தந்திரம் யந்திரம் ஆகியவற்றிற்கும் மேலாக அங்கு வரும் பக்தர்கள் மற்றும் யாத்ரிகர்களும் அவசியமாகும். . வேதங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளைப் போல மந்திர உச்சாடனம் தரும் அதிர்வும் கோயிலை தெய்வாம்சமாக மாற்றுகின்றது.  இந்த மந்திர உச்சாடனம் பற்றி குற்றாலம் பராசக்தி கல்லூரியில் ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. எனவே நீங்கள் தினமும் கோயிலுக்கு போய் சுலோகங்களையும் மந்திர உச்சாடனங்களையும் சரணங்களையும் சொல்ல வேண்டும். இதனால் கோயில் எங்கும் ஆக்கப்பூர்வமான அதிர்வுகள் கிளம்பி உங்களுக்கும் விக்கிரகத்துக்கும் நன்மை தரும்.  நமக்கு இன்னும் நிறைய கோயில்கள் வேண்டும். தெருவுக்கு தெரு  கோயில்கள் கட்ட வேண்டும். ஊரெங்கும் வேதம் முழங்க வேண்டும்.

இந்து மதத்தின் பல பிரிவுகளின் தலைவர்களும் ஒரு குடைக் கீழே இணைந்து  செயல்பட வேண்டும். இந்துக்களுக்கு எங்கு அநீதி நடந்தாலும் அங்கு கூடி நின்று குரல் கொடுக்க வேண்டும். திரவுபதியின் வெற்றிக்கு காரணம் தர்மம் மட்டுமே.. நாமும் தர்மத்தை துணை கொண்டால் அனைத்து எதிர்ப்புகளையும் தூள் தூள் ஆக்கலாம்.  இப்போது இந்துக்களுக்குள் ஒற்றுமை இல்லாதது தான் மற்றவர்கள் குதியாட்டம் போட முக்கிய காரணம் ஆகும். நாம் ஒருவருக்குள் ஒருவர் முரண் படுகிறோம். நமக்கும் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு ஒன்றாகக் கூடி நின்று இந்து தர்மம் செழிக்கப் பாடுபட வேண்டும்.  இந்துக்களின் வெற்றி என்பது இந்து தர்மத்தின் வெற்றி ஆகும்.  திரவுபதியின் கண்ணியத்தை காக்க வேறு என்ன வேண்டும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here