மெல்ல மெல்ல படிப்படியாக சட்டத்தின் கரங்கள் நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர்களை இறுக்குகின்றன. நகர் மேம்பாட்டு அமைச்சகம் (Urban Development Ministry) செயல்படாமல் இருக்கும் நேஷனல் ஹெரால்டு செய்தித்தாளின் அலுவலகமான அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் [ஏ ஜெ எல்] நிறுவனத்துக்கு அது இயங்கி வந்த ஹெரால்டு ஹவுஸ் என்ற கட்டிடத்தில் இருந்து நவம்பர் ஐந்தாம் தேதிக்குள் வெளியேறும்படி நோட்டிஸ் அனுப்பியது. அந்தக் கட்டிடத்தில் அரசு அனுமதித்த செய்தித் தாள் அச்சிடும் பணி நடைபெறாததாலும் அந்தக் கட்டிடம் அரசு அனுமதிக்காத வேறு செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாலும் அக்கட்டிடத்தை காலி செய்யும்படி அந்த நோட்டிசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே நேற்று மாலையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டில்லி உயர் நீதிமன்றத்துக்கு ஓடினார். இவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
போலி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு
2008ஆம் ஆண்டிலேயே நேஷனல் ஹெரால்டு நாளிதழும் அங்கிருந்து இந்தி மற்றும் உருது மொழிகளில் வெளிவந்த வேறு நாளிதழ்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. 2010இல் அங்கு யங் இண்டியன் என்ற பெயரின் ஒரு போலி நிறுவனம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த யங் இண்டியன் நிறுவனத்தின் 76% பங்குகள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பெயரில் உள்ளன. எனவே பி ஜெ பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்த வழங்கப்பட்ட கட்டிடத்தில் வேறு பணிகள் நடப்பதால் அதனை அரசு மீட்டெடுக்க வேண்டும் என்று நகர் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு மனு அனுப்பினார். பத்திரிகை நடத்துவதாக பொய் சொல்லிக்கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் அங்கு பித்தலாட்ட வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை ஆதாரத்துடன் அந்த மனுவில் விளக்கி இருந்தார்.
2011 ஆம் ஆண்டு ஏ ஜெ எல் நிறுவனத்தை சோனியாவின் போலி நிறுவனமான யங் இண்டியன் எடுத்துக்கொண்ட பின்பு அக்கட்டிட்த்தின் ஒரு பகுதி பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு உள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு சோனியாவும் ராகுலும் மாத வாடகையாக எண்பது இலட்சம் பெற்று வருகின்றனர்.
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு மத்திய அரசு அந்த கட்டிடத்தை சொற்பத் தொகைக்குக் குத்தகைக்கு விட்டிருந்தது. குத்தகைக் காலம் வரும் நவம்பர் 15ஆம் தேதியுடன் முடிவடைவதால் அன்றைக்குள் காலி செய்து கட்டிடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏ ஜெ எல் நிறுவனம் சார்பில் உடனே டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகி கட்டிடத்தை மத்திய அரசு திரும்ப்ப் பெறும் செயலை நிறுத்தும்படி மனு அளித்து கேட்டுக்கொண்டார். இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று நடத்தும்படி வேண்டினர். அதனால் இவ்வழக்கு இன்று நீதிபதி சுனில் கௌர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
நகர் மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியிருக்கும் நோட்டிசில் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் அக்கட்டிடத்தில் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட செயல்களுக்குப் பயன்படுத்தாமல் மற்ற செயல்களுக்கு அக்கட்டிடம் பயன்படுவதால் அதனை காலிசெய்து திரும்ப அரசிடம் நல்ல முறையில் உடனே ஒப்படைக்குமடி தெரிவிக்கப்பட்டுள்ளது.
வக்கீல்களான சுனில் ஃபெர்னான்டஸ் மற்றும் பிரியன்ஷா இந்திரா ஷர்மா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்க்காக நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் மத்திய அரசு தங்கள் கட்சிக்காரரை 1971இல் நிறைவேற்றப்பட்ட ‘’அதிகாரமில்லாதோர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதை அகற்றுதல்’’ என்ற சட்டத்தின் கீழ் அந்த கட்டிடத்தை உடனே காலி செய்ய வேண்டும் என்று நோட்டிஸ் அனுப்பியிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குத்தகைப் பத்திரத்தின் விதிமுறைகள் மீறப்பட்டு கடந்த பத்து வருடங்களாக அந்தக் கட்டிடத்தை வணிக ரீதியாக பயன்படுத்தி பணம் சம்பாதித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்த பின்பு சோனியாவும் ராகுலும் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிணை [ஜாமீன்] பெற்ற பிறகு நேஷனல் ஹெரால்டு என்ற பெயரில் ஒரு இணைய தளத்தை தொடங்கி சட்டத்தை ஏமாற்றி வந்தனர். காங்கிரஸ் தலைமையும் அவ்வப்போது நேஷனல் ஹெரால்டின் இலவச இணைப்பு என்ற பெயரில் ஏதாவதொன்றை வெளியிட்டு அரசின் கண்ணீல் மண்ணை தூவியது. இவ்வாறான தந்திரங்களால் பித்தலாட்டங்களால் காங்கிரஸ் தலைமை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நேஷனல் ஹெரால்டு ஹவுசை தனதாக்கி கொள்ள முயன்றது. அந்தக் கட்டிடத்தில் பத்திரிகை நடத்துவதாக நாடகமாட சில பத்திரிகையாளர்களும் அங்கு பணி அமர்த்தப்பட்டனர்.