ஆக, தனது தேர்தல் தோல்விகளால் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் இயங்கும் காங்கிரஸ் கட்சி இனியும் பாடம் படிக்கப் போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அண்மையில் ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் என்பவரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளராக ஆக்கி அவரிடம் தெலுங்கானா மாநிலத்தின் பொறுப்பை ஒப்படைத்திருகிறார் ராகுல். யார் இந்த ஸ்ரீனிவாசன்? அவர் நியமனம் ஆன சில நாட்கள் கழித்து ஊடகங்கள் ‘அவர் தூர்தர்ஷனில் பணியாற்றியவர்; இந்திய தகவல் ஒளிபரப்பு துறையின் அதிகாரி; என்று தெரிவித்தன. இவர்ராகுல் காந்தியின் கூடாரத்துக்குள் எப்படி வந்தார்? அதன் பின்னணி யாது?
இதோ பதில்.
ஸ்ரீனிவாசன் என்றழைக்கப்படும் ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். ராபர்ட் வதேராவின் பல தொழில் கூட்டாளி ஆவார். ராபர்ட்டின் பல்வேறு வில்லங்கமான நிறுவனங்களில் இவர் இணை இயக்குனராகப் பணி புரிந்தவர். மேலும் Blue Breeze Trading என்ற விமானச் சரக்கு போக்கு வரத்து நிறுவனத்தில் இயக்குனராகவும் இருந்தார். இந்த நிறுவனத்தின் முதல் இயக்குனர் ராபர்ட் வதேரா. அடுத்த இயக்குனர் 2008இல் பொறுப்பேற்ற அவரது மனைவியும் ராகுல் காந்தியின் தமக்கையுமான பிரியங்கா காந்தி. பிறகு வெகு விரைவில் பிரியங்கா அந்த இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டு ஸ்ரீனிவாசனை இயக்குனராக்கி விட்டார். மனையடி விற்பனையில் ஜாம்பவானாகத் திகழும் DLF ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ராபர்ட் வதேராவின் வேறு பல நிறுவனங்களிலும் இவரே இயக்குனராக இருந்தார்.
ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான Saket Holidays Resorts Private Ltd, Prowess BuildconPvt Ltd மற்றும் Clevea Builders and Developers Pvt Ltd போன்ற பல நிறுவனங்களிலும் ஸ்ரீனிவாசன் கிருஷ்ணன் இயக்குனராக இருந்தார்; இருந்து வருகிறார். 2011- 2012 களில் ஊழல் எதிர்ப்பு இயக்கங்கள் வலுப்பெற்ற போது ராபர்ட் வதேராவை போல ஸ்ரீனிவாசனும் சில நிறுவனங்களில் சேர்வதும் பின்னர் தந்திரமாக விலகுவதுமாக இருந்தார்.
கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீனிவாசன் [54] கேரள முதலமைச்சர் கே. கருணாகரன் 1995இல் மத்திய அமைச்சரான போது அவரது தனிச் செயலராக டில்லி வந்தார். 1999இல் தனது தூர்தர்ஷன் பணியில் இருந்து விலகிய இவர் வின்சென்ட் ஜார்ஜ், விஜய்சந்திரன் பிள்ளை, மாதவன் மற்றும் சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தலைவரான கே. பி. பிஜு என கேரளாக்காரர்கள் அதிகம் இடம்பெற்ற சோனியா காந்தியின் செயலாளர் குழுவில் இவரும் இணைந்தார். பிரியங்கா காந்தியின் செயலராகப் பணி புரிந்து வரும் மாதவனே ஸ்ரீனிவாசனுக்கு குரு என காங்கிரஸ் வட்டாரத்தில் குறிப்பிடுகின்றனர். கேரளாவில் இருந்து டில்லி வந்து பணி புரியும் இந்தச் செயலாளர் குழுவினர் பிரியங்கா காந்தியின் குடும்பத்துடன் கொண்ட நெருக்கத்தினால் இவர்களின் வளைகுடா நாட்டு தொழில் நடவடிக்கைகள் தொடர்பாக துபாயில் உள்ள சி சி தம்பி என்ற கல்லு தம்பியும் இக்குழுவில் இணைந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த கல்லுத்தம்பி 288 கோடி ரூபாய் அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட மீறல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறையினரின் கழுகுப் பார்வையில் சிக்கி கொண்டார்.
கல்லு தம்பி ஸ்ரீனிவாசனுக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால் அவரது சிபாரிசின் பேரில் ராபர்ட் வதேரா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் பதவியை ஸ்ரீனிவாசனுக்கே அளிக்கும்படி ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார். ஸ்ரீனிவாசன் சுனந்தா தற்கொலை வழக்கில் சிக்கியிருக்கும் அவரது கணவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஷி கபூருடனும் மிகவும் நெருக்கமானவர். சஷியின் Professional Congress அமைப்பிலும் ஸ்ரீனிவாசன் பொறுப்பான பதவி வகிக்கிறார்.
ராபர்ட் வதேராவின் நிறுவனங்கள் தவிர Ashwin Enterprises, Sreejoh Realtors Private Limited போன்ற மனையடி தொழில் நிறுவனங்களிலும் ஸ்ரீனிவாசன் இயக்குனராக இருக்கிறார். இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளராக ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்ட ஸ்ரீனிவாசன் அவரது அக்காள் கணவரான ராபர்ட் வதேராவின் ரியல் எஸ்டேட் தொழில் கூட்டாளி ஆவார் என்பது தெளிவாகின்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி இப்போது ராபர்ட் வதேராவின் கைகளில் தான் இருக்கிறதா எனக் கேட்டால் நாம் உரத்த குரலில் ஆமாம் என்று தான் சொல்ல வேண்டும். வேறு என்ன காரணத்துக்காக ராகுல் காந்தி ஸ்ரீனிவாசனை காங்கிரஸ் கட்சியின் செலாளராக நியமனம் செய்திருக்க முடியும்? சிந்தித்துப் பாருங்கள்.