திருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் என்ன நடந்துள்ளது என்பதைப் பற்றிய உண்மைகளை, திருப்பதி லட்டு பிரசாதத்தை உருவாக்கியவரின் பேரன் இங்கே விவரிக்கிறார்

0
3999
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் என்ன நடந்துள்ளது என்பதைப் பற்றிய உண்மைகளை, திருப்பதி லட்டு பிரசாதத்தை உருவாக்கியவரின் பேரன் இங்கே விவரிக்கிறார்
திருமலை திருப்பதி என்ன நடந்துள்ளது என்பதைப் பற்றிய உண்மைகளை, திருப்பதி லட்டு பிரசாதத்தை உருவாக்கியவரின் பேரன் இங்கே விவரிக்கிறார்

(தமிழில்: பி.ஆர்.ஹரன்)

முக்கியக் குற்றச்சாட்டுகளும் முன்னோக்கிய செயல்பாடும்

நான் எனக்கு ஆறு வயது இருக்கும்போது என்னுடைய தந்தையாரை இழந்தேன். என்னுடைய தாய்வழி பாட்டனாரும் பாட்டியும் தான் என்னையும் என் உடன்பிறந்த எட்டு பேரையும் வளர்த்தார்கள். என்னுடைய தாய்வழிப் பாட்டனாரான காலஞ்சென்ற ஸ்ரீமான் கல்யாணம் ஐயங்கார் தான் இவ்வுலகுக்குத் திருப்பதி லட்டு கொடுத்தவர். நான் அந்தக் கோவிலிலேயே வளர்ந்தவன். லட்டு மிராஸி (பாரம்பரிய லட்டு தயாரிப்பு) நீக்கப்படுவதற்கு நீண்ட காலம் முன்பே, கோவிலின் கர்ப்ப கிருகம் தவிர மற்ற அனைத்து இடங்களையும் அணுகக்கூடிய பாக்கியம் எனக்கு இருந்தது. அந்த மாதிரியான ஓர் தெய்வீகச் சூழலில் வளர்ந்ததால் கோவில் நிர்வாக முறைமை எப்படி நடந்தது என்பதை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. என்னுடைய பாட்டனாரின் காலத்திலிருந்தே கோவில் அர்ச்சகர்கள் எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். லட்டு பிரசாதத்துடன் தொடர்புள்ள பரம்பரை கமேகார்களும் (Gamekars) என்பவர்களும் பரம்பரை தீக்ஷிதர்களும் என் பாட்டனாரின் நண்பர்கள். நான்கு பிரதான அர்ச்சகர்களின் குடும்பங்களும் மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இந்தக் கட்டுரை எழுதுவதற்கான நோக்கம் உருவானதே பின்வரும் குற்றச்சாட்டுகளால் ஏற்பட்ட பொறுக்கமாட்டாத மனவேதனையினால் தான்:

 1. மதிப்பிற்குரிய பிரதான அர்ச்சகரும் குடும்ப நண்பருமான ஸ்ரீமான் ரமண தீக்ஷிதுலு கூறியுள்ள குற்றச்சாட்டுகளும், அவருடைய குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு பிரச்சனையை அணுகாமல் அவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தும் குழுநலன்கள் சார்ந்தோர்.
 2. அரசும், அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசுக்கு உடந்தையகச் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தான மன்றத்தின் உறுப்பினர்களும் அதிகாரிகளும் அவர் செயல்பாட்டுக்கு அரசியல் நோக்கங்கள் கற்பிப்பது.
 3. தேவஸ்தான அதிகாரிகள் கொடுக்கும் சிறப்புப் பிரசாதங்களுக்காகவும், கூடுதல் விலையில் விற்பதற்குக் கிடைக்கும் சிறப்பு தரிசன டிக்கட்டுகளுக்காகவும், தேவஸ்தானத்திடமும், அரசிடமும் விலைபோன, அவர்களுக்கு ஆதரவாக இயங்கும் அச்சு மற்றும் மின் ஊடகங்கள்.
 4. மிகவும் முக்கியமாக, ஸ்ரீ பகவத் ராமானுஜர் விதித்த பூஜைமுறைகள் மற்றும் வைகானஸ ஆகம சாஸ்த்திரங்களின்படி அர்ச்சகர்கள் ஆற்றக்கூடிய புனித வழிபாட்டு முறைகள் சம்பிரதாயங்கள் ஆகியவற்றை அவமதித்து அவற்றை மீறி நடந்துகொள்ளும் அரசு மற்றும் தேவஸ்தானத்தின் அதிகார துஷ்பிரயோகத்தைக் கண்டும் காணாமல் போகும் ஹிந்து சமுதாயம்.

தெலுங்கு தேச அரசின் கீழ் இயங்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரதான அர்ச்சகர்களுக்கு அளித்துள்ள கட்டாய ஓய்வு மற்றும் பிரதான அர்ச்சகர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்பது போல இவ்விஷயத்தை பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது. இது நம் சனாதன தர்மத்தின் பிரச்சனை. பிரதான அர்ச்சகர்களுக்கு அளிக்கபட்டுள்ள கட்டாய ஓய்வு சரியா தவறா என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விவாதிக்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை அது தவறு தான்; அதை வேறு கட்டுரையில் பார்ப்போம். ஆனால் அதற்கு முன்னால் பொது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.

திருமலை பாலாஜி கோவில் சேவையில் 4 பிரதான அர்ச்சகர்கள் இருக்கின்றனர். அவர்கள், 39/40 தலைமுறைகளாக பகவான் வேங்கடாஜலபதிக்குச் சேவை செய்து வரும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

 1. பைடிபள்ளி (ஸ்ரீமான் நாராயண தீக்ஷிதுலு)
 2. கொல்லபள்ளி (ஸ்ரீமான் டாக்டர் ,வி.ரமண தீக்ஷிதுலு)
 3. திருபதம்மா (ஸ்ரீமான் நரசிம்ஹ தீக்ஷிதுலு)
 4. பெத்திண்டி (ஸ்ரீமான் ஸ்ரீனிவாஸமூர்த்தி தீக்ஷிதுலு)

ஆகியோரே அந்த நான்கு குடும்பத்தினர்.

ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் அவர்கள் சேவை புரிகிறார்கள். அவர்கள் தேவஸ்தானத்தின் ஊழியர்கள் அல்ல. அவர்களுடைய மதக் கடமைகளைச் செய்வதற்கு அவர்கள் சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை. பகவானுக்குச் செய்யும் கைங்கர்யமாக (இறைப்பணியாக) தங்கள் கடமையைச் செய்கிறார்கள். பல வருடங்களாகப் பூஜைகள் செய்வதற்காக அவர்களுக்குப் பரம்பரை உரிமையுள்ள ருசுமு(Rusumu) என்கிற சிறிய பங்கையே பெற்றுக்கொண்டிருந்தார்கள்.

பாரம்பரிய அர்ச்சகர் முறையை நீக்கும் பரிந்துரை அறிமுகம் செய்யப்பட்டபோது, அதை எதிர்த்துத் தளராத ஊக்கத்துடன் நீதிமன்றங்களில் போராடி, உச்ச நீதிமன்றம் வரைத் தங்கள் வழக்கை எடுத்துச் சென்றனர். அர்ச்சகர்கள் மற்றும் தேவஸ்தானத்துக்கிடையே சமரசம் ஏற்படுத்தும் நோக்கில் முதல் படியாக, அப்போதைய நிர்வாக அதிகாரி திரு. I. Y. R. K. Rao அவர்களும் தர்ம பரிஷத் என்கிற அமைப்பும் (இவ்வமைப்பு இப்போது இல்லை), 2007ம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி பிரிவு 142ன் கீழ் பாரம்பரிய பிரதான அர்ச்சகர்களின் மரியாதைகளும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன; அதையே உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்றும், எனவே, பாரம்பரிய பிரதான அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அவர்களுடைய மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பரிந்துரை செய்தார்கள். உச்ச நீதிமன்றமும், அர்ச்சகர்களின் குறைகளைக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தான மன்றத்திற்குக் குறிப்பிட்டு, அர்ச்சகர்களின் மனுவை வாபஸ் பெற அனுமதித்தது. ஆனால் இன்றுவரை, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டபடி தேவஸ்தான மன்றம் அர்ச்சகர்களின் குறைகளை கேட்கவில்லை.

மேற்கூறப்பட்ட சமரசத்தின்கீழ், பிரதான அர்ச்சகர்கள் தங்களுடைய அர்ச்சக கைங்கர்ய உரிமைகளை நிலைநாட்டவும் அவற்றை நீட்டித்துத் தங்களுடன் வைத்துக்கொள்வதற்காகவும், தங்களுக்குக் கிடைத்து வந்த ருசுமு என்கிற மதிப்புமிக்கத் தொகையைத் துறப்பதற்கும் ஒத்துக்கொண்டார்கள். பிரதான அர்ச்சகர்கள் தேவஸ்தான ஊழியர்கள் இல்லை என்பதும், தேவஸ்தான ஊழியர்களாக இருப்பதற்கு ஒத்துக்கொண்ட மற்ற அர்ச்சகர்களுக்கும், மற்ற தேவஸ்தான ஊழியர்களுக்கும் உள்ள சம்பளம், உழைப்பூதியம், ஊக்கத்தொகை, விடுமுறை வசதி, மருத்துவச் சலுகை போன்ற பயன்களும் அவர்களுக்கு இல்லை என்பதும் பெரும்பாலான மக்களுக்கு வியப்பான செய்தியாக இருக்கும். பிரதான அர்ச்சகர்கள் தேவஸ்தான ஊழியர்களாக இருக்க விரும்பவில்லை. அவர்கள் செய்து வந்த கைங்கர்யங்கள் மற்றும் பூஜைகளுக்குத் தினப்படியாக ஒரு அடையாள சம்பாவனை மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இனி இக்கட்டுரையின் நோக்கத்தைச் செல்கிறேன்:

கடந்த இரண்டு பத்தாண்டுகளில் ஹிந்து தர்மத்தின் மீது பகிரங்கமாகவும் தெளிவாகவும் இரண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

முதலாவது, காஞ்சி மடத்தின் மீதான தாக்குதல். அதற்கு ஹிந்து சமுதாயத்தின் எதிர்வினையானது ஊமைத்தனமாக இருந்தது என்றுதான் விவரிக்க முடியும். ஒரு சில பக்தர்களின் தனிப்பட்ட முயற்சிகள் தவிர்த்து, ஹிந்து இயக்கங்கள் என்று சொல்லப்படுகின்ற அமைப்புகள், சாதுக்கள், சன்யாசிகள் ஆகியோரின் எதிர்வினை பற்றி எழுதுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை. நாம் ஆச்சாரியார்களைக் கைவிட்டோம். அவர்கள் தனிநபர்கள் அல்ல; நிறுவனங்கள். மொத்த ஹிந்து சமுதாயமாக, சனாதன தர்மத்திற்கு 2500 வருடங்களாகத் தொடர்ந்து சேவை செய்வதன் மூலம் நிர்மாணிக்கப்பட்ட நிறுவனங்களை, நாம் கைவிட்டோம். சனாதன தர்மத்தைத் தோற்கச் செய்தோம்.

இரண்டாவதாக திருமலை திருப்பதி கோவிலின் பிரதான அர்ச்சகர்கள், கோவிலின் வழிபாட்டு முறைகள், கோவிலின் செல்வங்கள் மீதான தாக்குதல். ஹிந்து சமுதாயமாக நாம் எதிர்வினை ஆற்றுவதில் செயலிழந்து நிற்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும் மற்றொரு நிகழ்வாகும் இது.

கற்றறிந்த அறிவாளியான பிரதான அர்ச்சகர் ஸ்ரீமான் ரமண தீக்ஷிதுலு Molecular Biology துறையில் Ph.D பட்டம் பெற்றவர். திருமலைக் கோவிலில் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டுவரும் வைகானஸ ஆகமத்திலும் தேர்ச்சி பெற்ற நிபுணர். ஸ்ரீமத் பகவத் ராமானுஜர் விதித்த பூஜைமுறைகளிலும் வித்தகர். அப்பேர்பட்ட பிரதான அர்ச்சகரான ஸ்ரீமான் ரமண தீக்ஷிதுலு, தினப்படி பூஜைகள் மற்றும் வழிபாட்டு முறைகளில் அரசியல்வாதிகள், தேவஸ்தான உறுப்பினர்கள், தேவஸ்தான அதிகாரிகள் ஆகியோர் இடையூறுகள் ஏற்படுத்துவதைப் பற்றிக் கவலைகள் தெரிவிக்கும்போது, அவற்றைத் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, அவ்வாறு தவறுகளும் குற்றங்களும் நடக்கின்றனவா என்று ஆராய்ந்து, அத்தகைய சூழ்நிலைகளைச் சரி செய்வதற்கான வழிகளைக் காணவேண்டும். கோவில் நகைகளுக்கான கணக்குகள் தணிக்கை பல ஆண்டுகளாகச் செய்யப்படுவதில்லை என்று அவர் கூறும்போது, அதைக் கேட்டும் கேட்காமல், அவர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்து, சேற்றை வாரியிறைத்துத் துர்பிரச்சாரம் செய்வோமா, அல்லது அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்படுவோமா?

பிரதான அர்ச்சகர் கூறியுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகளைப் பார்ப்போம்:

 • பகவானுக்குச் செய்யப்படும் வழிபாட்டு முறைகளில் தேவஸ்தான நிர்வாகத்தினால் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமென்றால், அவர் கூற்றுப்படி, பகவானை துயிலெழுப்பக் கூடாத சமயமான நடுநிசியில் முக்கிய மனிதர்களுக்காக (VIPs) சுப்பிரபாத சேவை செய்யச் சொல்லி அர்ச்சகர்களை தேவஸ்தான அதிகாரிகள் வற்புறுத்துவதைச் சொல்லலாம். தோமாலை சேவையை மிகவும் சுருக்கமாகச் செய்யச் சொல்லி அர்ச்சகர்களக் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து அழுத்தம் தரும் தருணங்களும் உண்டு. பலதரப்பட்ட முக்கிய மனிதர்களை (VIPs) திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது கோவிலுக்கு வரும் பக்தர் கூட்டத்தை நிர்வாகம் செய்யவேண்டும் என்கிற வசதியான காரணத்திற்காகவோ பல்வேறு சேவைகள் மிகவும் சுருக்கப்பட்டுள்ளன.
 • பகவானுக்கு நைவேத்யம் செய்யப்படுவதற்கான பிரசாதங்களைத் தயாரிக்கும் போட்டு (சமையலறை) என்கிற கோவில் மடப்பள்ளியில் பழுதுபார்த்துச் செப்பனிடும் வேலைகள் நடத்தப்பட்டுள்ளன. தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகரான பிரதான அர்ச்சகருடைய சம்மதம் இல்லாமல் இந்த வேலைகள் நடந்துள்ளன. கருங்கல் தளம் தோண்டப்பட்டும், கருங்கல் சுவர்கள் உடைக்கப்பட்டும் செப்பனிடும் வேலைகள் நடந்துள்ளன. மிகவும் முக்கியமாக, பத்து நாட்களுக்கு மேலாக, சாஸ்த்திரங்கள் மீறப்பட்டு, பகவானுக்கான பிரசாதங்கள் “போட்டு” சமையலறைக்கு வெளியே, குறிப்பிடப்பட்டுள்ள அளவை விடக் குறைந்த அளவில் தயரிக்கப்பட்டுள்ளன. இவை போன்று கோவிலில் நடப்பவை எல்லாம் அங்கே கிடைக்கும் லட்டுவைப் போன்று இனிமையாக இல்லை என்கிற சந்தேகத்தை எழுப்புகின்றன. அன்னப் பிரசாதம் தயாரிக்கும் அப்பாவி “போட்டு” ஊழியர்களைக் கொண்டு, தனக்கு அனுகூலமான ஒரு அறிக்கையை வெளியிடச் செய்து, அதன் மூலம் உண்மையை மறைத்து பொதுமக்களின் கவனத்தைத் திசை திருப்ப முயற்சித்துள்ளது தேவஸ்தானம்.
 • ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் இறைப்பணி செய்யும் பிரதான அர்ச்சகர்கள், பகவானின் நகைகளை வெளிப்படையாகத் தணிக்கை செய்யும் முறையைப் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வந்துள்ளார்கள். தங்களின் ஓராண்டு இறைப்பணியை நிறைவு செய்த பிரதான அர்ச்சகர், தங்கக் காசுகள், மணிகள், வைரங்கள், வைடூரியங்கள் உள்ளிட்ட அனைத்து நகைகளையும் முறையாகக் கணக்கிட்டு அடுத்து இறைப்பணி செய்ய வரும் பிரதான அர்ச்சகரிடம், ஒப்படைப்பார். இந்த தணிக்கை முறையானது தேவஸ்தான அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும். 1996 முதல் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டுவிட்டது. பிரதான அர்ச்சகரின் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், விசேஷமான தினங்களில் பகவானுக்கு விசேஷ அலங்காரங்கள் செய்வதற்கு, கிருஷ்ண தேவராயர் போன்ற மாமன்னர்கள் அறக்கொடையாக அளித்துள்ள குறிப்பிட்ட நகைகளைக் கேட்டால், அவர்கள் கேட்கும் அந்நகைகள் எப்போதும் கொடுக்கப்படுவதில்லை என்பது தான். “மதச்சார்பற்ற” தேவஸ்தான அதிகாரிகள் எந்த நகைகளைக் கொடுக்கிறார்களோ, அந்நகைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர பகவானுக்கு வேறு வழியில்லை. அவர்களின் செயல்பாட்டுக்குப் பகவான் அனுசரித்துப் போகவேண்டும். எந்த நோக்கத்திற்காக அந்தக்கால மன்னர்களும் செல்வந்தர்களும் நகைகளைக் அறக்கொடையாக அளித்தார்களோ அது சௌகரியமாகப் புறந்தள்ளப்படுகிறது. எனவே, அந்த பழம்பெருமை வாய்ந்த நகைகள் இன்னும் இருக்கின்றனவா?” என்கிற மிக முக்கியமான கேள்வி எழுகிறது.

அந்தக் கேள்வி இப்போதைய பிரச்சனைக்கு மிகவும் தொடர்புடையது என்பதைப் பின்வரும் உதாரணம் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்:

ஒரு நன்கொடையாளர் பகவானுக்கு ஒரு நகையைக் காணிக்கையாக வழங்கவேண்டும் என்று தேவஸ்தானத்தை அணுகினால், அவருடைய முதலீட்டுக்குத் தக்கவாறு, தேவஸ்தான நிர்வாகம் கோவிலில் இருக்கும் பழைய நகையின் வடிவமைப்பைக் கொடுத்து, அதைப்போலச் செய்து காணிக்கையாகக் கொடுக்குமாறு கூறுகிறது. இதன் மூலம், பழைய நகை போன்று இரண்டாவது நகை பகவான் அலங்காரத்திற்கு வந்து சேர்கிறது. பழைய நகை பத்திரப்படுத்தப் படுவதற்காக கருவூலத்தின் நிலவறைக்குச் சென்று விடுகிறது. இரண்டு நகைகளும் பத்திரமாக இருக்கின்றனவா?   

(தொடரும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here