எண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை குலைந்து போகுமா?

எண்ணூர் எரிவாயு மையத்தின் திறன் ஆண்டொன்றிற்கு 5 மில்லியன் டன்னாகவுள்ள நிலையில், மணலி தொழிற்சாலைகளில் 1.5 மில்லியன் டன் எரிவாயுவை மட்டும் தான் உபயோகிக்க முடியும்.

0
1913
எண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை குலைந்து போகுமோ?
எண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை குலைந்து போகுமோ?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்போது எண்ணூரில் அமைத்து வரும் இயற்கை எரிவாயு இறக்குமதி மையத்தின் கட்டுமானப்பணி 2018ம் ஆண்டு இறுதியில் முடிவடையும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு மேல் தாமதமாகிவிட்டது.

ரூபாய் 6000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும், வருடத்திற்கு 5 மில்லியன் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்ய திறனுள்ள இந்த எரிவாயு மையம், முழுவதுமாக உபயோகிக்கப்பட வேண்டுமென்றால், அங்கிருந்து எரிவாயுவை பல இடங்களுக்கும் எடுத்துச் செல்ல குழாய் அமைக்க வேண்டும். இந்த குழாய் அமைக்கும் பணி 2018ம் ஆண்டிற்குள் முடிவடைவது சாத்தியமல்ல. இந்த நிலையில் எரிவாயு மையத்தின்திறன் தகுந்த அளவில் உபயோகிக்கப்படாமல் போகும் நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

தற்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எண்ணூரில் உள்ள எரிவாயு இறக்குமதி அமைப்பிலிருந்து, மணலிக்கு எரிவாயுவை கொண்டு செல்ல, குழாய் அமைக்கும் பணியை செய்துகொண்டு உள்ளது. இது 23 கிலோ மீட்டர் நீளமுள்ள முதலாவது கட்ட பணி. இந்த குழாய் மூலம், எரிவாயு சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், மெட்ராஸ் பெர்டிலைசர் போன்ற மணலியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு கொணடு செல்லப்படும். இதன் மூலம் ஆண்டொன்றிற்கு சுமார் 1.5 மில்லியன் டன் எரிவாயு மணலியிலுள்ள தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும்.

எண்ணூர் எரிவாயு மையத்தின் திறன் ஆண்டொன்றிற்கு 5 மில்லியன் டன்னாகவுள்ள நிலையில், மணலி தொழிற்சாலைகளில் 1.5 மில்லியன் டன் எரிவாயுவை மட்டும் தான் உபயோகிக்க முடியும். மீதமுள்ள 3.5 மில்லியன் டன் எரிவாயு திறனை எப்படி உபயோகிப்பது? மற்ற இடங்களுக்கு எரிவாயுவை கொண்டு செல்ல வேறு குழாய் அமைப்புகள்இல்லாததால், அவற்றை உடனே உபயோகிக்க வழியில்லை.

எண்ணூர் எரிவாயு அமைப்பின் முழு திறனான வருடத்திற்கு 5 மில்லியன் டன் எரிவாயுவை முழுவதும் உபயோகிக்க, தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு கொண்டு செல்ல 1385 கிலோ மீட்டர் நீளத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்படவேண்டும். இந்த குழாய் எண்ணூரில் தொடங்கி புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை அமைக்க திட்டம் உள்ளது. மேலும் இந்த குழாயிலிருந்து எரிவாயுவை மதுரை,திருச்சி, தூத்துக்குடி, பெங்களுருக்கு கொண்டு செல்ல திட்டமுள்ளது. இந்த குழாய் திட்டத்திற்கு வழியமைக்க சேலம், காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் போன்ற சில இடங்களையும்மத்திய அரசை சார்ந்த இயற்கை எரிவாயு கண்காணிப்பு மையம் (Petroleum and Natural Gas Regulatory Board) தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த குழாய் அகலமாகவோ குறுகலாகவோ இடத்திற்கு தகுந்தாற் போல அமைக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பல நெடுஞ்சாலைகள், நகரம் மற்றும் கிராமச்சாலைகள் வழியாகவும்,குறுக்காகவும் குழாய் அமைக்கப்பட வேண்டும். பல இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும்.

இவற்றிற்கான ஆயத்தப்பணிகள் முழு மூச்சில் இது வரை தொடங்கப்படவில்லை.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 1385 கிலோ மீட்டர் எரிவாயு குழாய் திட்டத்தை பல பாகங்களாக பிரித்து வரும் காலத்தில் செயல்படுத்தும் என்று அறிவித்துள்ளது. அதே சமயம்,எண்ணூர் எரிவாயு இறக்குமதி மையத்தின் கட்டுமானப்பணி 2018ம் ஆண்டில் பூர்த்தியடைவதால், 1385 கிலோ மீட்டர் குழாய் திட்டம் முடிவடையாததால் எண்ணூர் எரிவாயு மையம் பலமாதங்கள் முழு திறனை உபயோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் படி குழாய் திட்டத்திற்கே எதிர்ப்பு

தற்போது, எண்ணூரிலிருந்து மணலிக்கு அமைக்கப்படும் 23 கிலோ மீட்டர் நீளமுள்ள எரிவாயு குழாய் திட்டத்திற்கே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எண்ணூரிலிருந்து மணலி வரை செல்லும் 23 கிலோ மீட்டர் குழாய், எண்ணூரிலுள்ள உப்பங்கழி (backwater)) வழியாக செல்கிறது . இதனால் தங்கள் மீன்பிடிக்கும் தொழிலிற்கு பாதகம்ஏற்படும் என்று கூறி குழாய் திட்டத்தை மீனவர்கள் எதிர்க்கின்றனர்.சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த பாதைக்கு பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal)அனுமதிஅளிக்கவில்லை என்று கூறி குழாய் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியுள்ளன. ஆனால், இந்திய ஆயில் கார்ப்பரேஷன் இத்தகைய குற்றச்சாட்டுகள்ஆதாரமில்லாதவை என்று கூறி தனது விளக்கத்தை தெரிவித்துள்ளது. பசுமை தீர்பாயத்தால் அனுமதி அளிக்கப்படாத 600 மீட்டர் நீளத்தில் குழாய் அமைக்கப்படவில்லை என்றுஆணித்தரமாக கூறியுள்ளது .மேலும் கொசஸ்தலை ஆற்றில், நவீன விஞ்ஞான பொறியியல் சித்தாந்தங்கள் அடிப்படையில், எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆற்றின்தண்ணீருக்கு கீழே குழாய் அமைக்கப்படுகிறது என்றும், மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் உள்ளடக்கியிருப்பதாகவும் விளக்கமாக கூறியுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கங்களை கூறியிருப்பினும், மீனவர்களும், சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும் விளக்கங்களை ஏற்று தங்களது எதிர்ப்பை கைவிட தயாராக இல்லை.கூடிய விரைவில், பலவிதமான ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்பார்க்கலாம்.

1385 கிலோ மீட்டர் எரிவாயு குழாய் திட்டத்திற்கான கதி என்ன?

எண்ணூரிலிருந்து மணலி வரை அமைக்கப்படும் 23 கிலோ மீட்டர் குழாய்க்கே இத்தகைய எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 1385 கிலோ மீட்டர் குழாயை தமிழ்நாடு முழுவதும் அமைப்பதுசாத்தியமா என்ற அச்சம் ஏற்படுகிறது.

1385 கிலோ மீட்டர் குழாய் அமைக்க பல இடங்களில் நிலத்தை கையகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும். பல கட்டிடங்கள் இடிக்க வேண்டியிருக்கும். பல மரங்களை வெட்டி சாய்க்கவேண்டியிருக்கும். சேலம் எட்டு வழி நெடுஞ்சாலை திட்டத்திற்கே வலுவான எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும், சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும்,போராட்டக்காரர்களும் 1385 கிலோ மீட்டர் எரிவாயு குழாயை அமைக்க விடுவார்களா என்ற சந்தேகம் ஏற்படுவது இன்றைய கால கட்டத்தில் தவிர்க்க முடியாத நிலை.

கொச்சியிலிருந்து இயற்கை எரிவாயு குழாய்திட்டம் கைவிடப்பட்டுவிட்டதே

கொச்சியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு மையத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு இயற்கை எரிவாயுவை கொண்டு வர 300 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேலாக எரிவாயு குழாய்அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. இந்த குழாய் திட்டம் தமிழ்நாட்டில் சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பினால்; கைவிடப்பட்டுவிட்டது.இதனால், தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயுவை மூலப்பொருளாக கொண்டு ரூபாய் 15000 கோடி வரை முதலீட்டில் ரசாயன தொழிற்சாலைகள் அமைக்கும் வாய்ப்பை தமிழ்நாடுஇழந்துவிட்டது.

எரிவாயு குழாய் திட்டத்தினை அமல்படுத்த வேண்டிய மத்திய அரசை சார்ந்த கெய்ல் நிறுவனம், இந்த திட்டத்தின் பாதுகாப்பான அம்சங்களை குறித்து எடுத்து கூறியும்,விவசாயிகளும்,சுற்றுப்புற சூழல் ஆர்வலர்களும் தங்களது எதிர்ப்பை கைவிட மறுத்துவிட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவையும், தமிழக அரசால் அமல்படுத்த முடியவில்லை.

தமிழ்நாட்டில் எரிவாயு குழாய் திட்டம் நிறுத்தப்பட்டதால் 4000 ரூபாய் கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட கொச்சி இயற்கை எரிவாயு மையம்,தேவையான அளவு எரிவாயுவை வெளியேகொண்டு செல்ல முடியாமல் பெரியளவில் நட்டத்தை சந்தித்து வருகிறது.

கர்நாடகாவுக்கு எரிவாயு குழாய் திட்டம் தீவிரம்

தற்போது, கொச்சி இயற்கை எரிவாயு மையத்திலிருந்து கர்நாடகாவிற்கு எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் வேகமாக அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்து சில மாதங்களில்முடிவடைந்து விடும்.

இதனால், எரிவாயுவை மூலப்பொருளாக கொண்டு கர்நாடகாவில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், பல தொழிற்சாலைகள் அமைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

எண்ணூர் இயற்கை எரிவாயு அமைப்பு நிலைகுலைந்து போகுமா?

எண்ணூரிலிருந்து 23 கிலோ மீட்டர் நீளத்தில் எரிவாயு குழாய் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏற்படும் எதிர்ப்பை காணும் போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனால் எவ்வாறு 1350கிலோ மீட்டர் நீளத்தில் எரிவாயு குழாய் திட்டத்தை தமிழ்நாட்டில் அமைக்க முடியும் என்ற வலுவான சந்தேகம் எழுவதில் ஆச்சரியமில்லை.

வரும் காலங்களில், சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள் என்று தங்களை வர்ணித்து கொள்வோரும், அரசியல்வாதிகளும் 1315 கிலோ மீட்டர் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்ததேவையான நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என்று கூறி எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தலாம். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் இதனை குறித்து சூடாகவிவாதிக்கும். பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்.

இந்த நிலையில் எண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை குலைந்து போகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here