பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிஜி காப்பாற்றிய காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை

அப்போது “ஆந்திர பூமி” பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த திரு. எம். வி. ஆர். சாஸ்த்திரி அவர்கள், இன்றிரவு காஞ்சி மடத்தின் இரண்டு சங்கராச்சாரியார்களும் கைது செய்யப்படப் போகிறார்கள், என்றார்

1
4742
காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை
காஞ்சி மடத்தின் 2500 வருட பாரம்பரிய பூஜை

(தமிழில்: பி.ஆர்.ஹரன்)

2004ம் வருடம் நவம்பர் மாதம் 11ம் தேதி, தென்னிந்தியாவில் நரக சதுர்த்தசி என்று கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளுக்கு முந்தைய தினம், மாலை நேரம். வானமெங்கும் வாணவேடிக்கைகள், வர்ணஜாலங்கள். காற்றில் கலந்த பட்டாசுகள் மற்றும் வெடிகளின் வெடிச்சத்தங்கள். வீடுகளின் முற்றங்களிலும் வாசல்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு ஒளிவீசிக் கொண்டிருந்தன. குழந்தைகளும் சிறார்களும் வாணவேடிக்கைகளையும் மத்தாப்புக்களையும் பட்டாசு வெடிச்சத்தங்களையும் அனுபவித்து மகிழ வீட்டிலிருந்து வெளியே தெருவுக்குத் துள்ளியோடி வந்தனர். அவர்களுக்குத் துணையாகப் பெரியவர்களும் குழந்தைகளுக்கான குதூகலத்துடன் அவர்கள் பின்னே ஓடிவந்தனர்.

பட்டாசு வெடிச் சத்தங்களுக்கிடையே அடங்கிய ஒலியில் தொலைபேசியின் மணிச்சத்தம். அப்போது மாலை 6 மணி இருக்கும். டெக்கான் கிரானிகிள் குழுமத்தைச் சேர்ந்த ஆந்திர பூமிபத்திரிகையின் ஆசிரியர் திரு.எம்.வி.ஆர்.சாஸ்த்திரி ஹைதராபாத்திலிருந்து கூப்பிட்டார். அவர் கூறிய விஷயம் என்னுள்ளே பரவியிருந்த மகிழ்ச்சியை, ஹிந்துக்களின் சிறப்பு மிகுந்த பண்டிகையைக் கொண்டாடும் சந்தோஷத்தை, விரட்டியடித்தது.

எங்கள் இருவரிடையேயான அந்தத் தொலைபேசி உரையாடலை அப்படியே நினைவிலிருந்து மீட்டெடுத்து வழங்குகிறேன்:

“பத்ரிகாரு! மெஹபூப்நகரில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?”

“இல்லை சார், தெரியாது”

“மெஹபூப்நகரிலிருக்கும் எங்களுடைய நபர் இப்போதுதான் கூப்பிட்டுச் சொன்னார். காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரும் கைது செய்யப்படப் போகிறார்களாம்”.

நான் சரியாகத்தான் கேட்டேனா? இரண்டு சங்கராச்சாரியார்களும் கைது செய்யப்படப் போகிறார்களா? அதிர்ச்சியில் நம்பமுடியாமல், அவர் சொன்னதை மீண்டும் சொல்லச் சொன்னேன். அவரும் சொன்னார்.

“ஏதாவது செய்தாக வேண்டும்”

ஒய். எஸ். ராஜசேகர ரெட்டியா அந்தக் காரியத்தைச் செய்வது? என்று அவரிடம் கேட்டேன். ஒய். எஸ். ஆர் இல்லை, ஜெயலலிதாவின் கீழேயுள்ள தமிழ்நாடு போலிஸ் தான் கைது செய்யப்போகிறார்கள், என்றார்.

ஜெயலலிதா போன்ற ஒருவர் ஏன் ஆச்சாரியார்களைக் கைது செய்ய நினைக்க வேண்டும்? என்றெல்லாம் யோசிக்க அப்போது நேரமில்லை.

நான் அவரிடம், ஹிந்து தர்ம ஆச்சாரிய சபாவின் ஒருங்கிணைப்பாளர் பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிஜி அவர்களிடம் விஷயத்தை எடுத்துச் சென்று அவருடைய யோசனையைக் கேட்டு அவர் அறிவுரைப்படி செய்வதாகச் சொல்லி தொலைபேசி உரையாடலை நிறைவு செய்தேன்.

உடனடியாக, பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிஜியை வழக்கமாகத் தொடர்பு கொள்ளும் அவருடைய கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவருடைய கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

வேறு யாரிடம் சென்றால் ஸ்வாமிஜியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று யோசித்தபோது, எனக்குச் சட்டென்று டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்கள் ஞாபகத்திற்கு வந்தார்கள். உடனடியாக அடையாற்றில் இருக்கும் அவருடைய விட்டிற்கு விரைந்தேன். தெருவில் வைக்கப்படும் வாணங்களும் பட்டாசுகளும் தடங்கல்களாக இருந்தாலும் விரைந்து அவர் வீட்டை அடைந்தேன்.

டாக்டர் பத்மா சுப்பிரமணியமும் அவருடைய மருமகன் திரு.கண்ணன் பாலகிருஷ்ணனும் வீட்டில் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துச் சொல்ல வந்திருக்கிறேன் என்கிற எண்ணத்தில், என்னை அன்புடன் வரவேற்றார்கள். ஆனால், கவலை ரேகைகள் படர்ந்த என் முகத்தைப் பார்த்தவுடன், என்ன ஆச்சு?” என்று கேட்டார்கள்.

எல்லாம் போச்சு என்று கண்ணீர் பெருகக் கூறினேன்.

பிறகு. எம். வி. சாஸ்த்திரி சொன்ன தகவலையும், ஸ்வாமிஜியைத் தொடர்பு கொள்ள முடியாததையும் அவரிடம் சொன்னேன்.

“ஸ்வாமிஜி தற்போது ஆஸ்த்திரேலியாவில் இருக்கிறார்; அவரைத் தொடர்பு கொள்ள அவர் தங்கியிருக்கும் இடத்தின் தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது” என்று கூறி அந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டார்.

“ஸ்வாமிஜி! நாசம் விளைவிக்கும் செய்தி ஒன்றை பத்ரிஜி கொண்டு வந்திருக்கிறார். உஙகளுக்கு விரிவாகச் சொல்ல அவரிடம் தொலைபேசியைத் தருகிறேன்”

“ஸ்வாமிஜி! இன்று இரவு மெஹபூப்நகரில் காஞ்சி சங்கராச்சாரியார்கள் இருவரும் கைது செய்யப்படப் போகிறார்கள் என்று ஆந்திர பூமி பத்திரிகையின் ஆசிரியர் எம்.வி.ஆர்.சாஸ்த்திரி தகவல் தெரிவித்தார். அவர் பெரிதும் நம்பத்தகுந்தவர். நான் அவருடைய தகவலைப் பரிபூரணமாக நம்புகிறேன்”.

பூஜ்ய ஸ்வாமிஜி பேரதிர்ச்சி அடைந்தார். “ஐயய்யோ! என்னப்பா சொல்ற?” என்றார்.

“ஸ்வாமிஜி! இதுவரை என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒய்.எஸ்.ஆர். செய்யவில்லை, ஜெயலலிதாவின் கீழுள்ள தமிழ்நாடு போலிஸ் தான் கைது செய்ய வந்துள்ளார்கள், என்று சாஸ்த்திரி ஜி சொன்னார். நாம் எப்படியாவது இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் ஸ்வாமிஜி”.

“ஆமாம். ஆனால் நான் இப்போது ஆஸ்திரேலியாவில் இருந்துகொண்டு என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார் பூஜ்ய ஸ்வாமிஜி.

ஸ்பீக்கரில் எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களைப் பார்த்தேன். அவருக்குப் பின்புறம் சுவற்றில் காஞ்சி மஹாஸ்வாமியின் படம் அழகாகத் தெரிந்தது. ஒரு கணம் என் கண்கள் அவர் மீது பதிந்தன.

அடுத்த கணம் மின்னல் போல ஓர் எண்ணம் என் மனதில் தோன்றியது. .

“ஸ்வாமிஜி! தேவப்ரஸ்னம் செய்து பார்க்காமல் ஜெயலலிதா ஆச்சாரியார்களைக் கைது செய்யத் துணியமாட்டார். இம்மாதிரியான விஷயங்களில் அவர் நாடும் ஜோதிடர் பரப்பனங்காடி உன்னிகிருஷ்ண பணிக்கர் தான். அவரிடம் ஸ்வாமிஜி பேசி, ஆச்சாரியார்களின் கைதைத் தள்ளிப்போட்டால், தாங்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து உடனடியாகக் கிளம்பி வந்து ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசலாம். இப்போதைக்கு நாம் இதைச் செய்வதுதான் உசிதம். என்ன ஆனாலும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜைப் பாரம்பரியத்திற்குத் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஸ்வாமிஜி!”

“நீ அங்கேயே இருப்பா…..நான் பேசிட்டு சொல்றேன்”.

கைது இன்னும் நடக்கவில்லை. ஏதாவது டிவி சானலில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடுகிறதா என்று ஒவ்வொரு சானலாக மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். எதிலும் வரவில்லை.

பூஜ்ய ஸ்வாமிஜி போனில் அழைத்தார். “நீ சொன்னது சரிதான். அவர்கள் பணிக்கரை அணுகி தேவப்ரஸ்னம் பார்த்துள்ளார்கள். ஆச்சாரியார்களைக் கைது செய்தால் தன்னுடைய முதலமைச்சர் பதவிக்கு பங்கம் ஏதும் நேருமா என்று பார்த்துள்ளார்கள். தேவப்ரஸ்னத்தில் ஆச்சாரியார்கள் இருவருக்கும் சிறைவாசம் உள்ளது என்றும், முதலமைச்சர் பதவிக்கு எந்த பங்கமும் ஏற்படாது என்றும் வெளியாகியுள்ளது. நான் இந்தியா திரும்பி முதலமைச்சரைச் சந்தித்துப் பேசும்வரை கைதைத் தள்ளிப் போடச்சொல்லி அவரிடம் பேசச் சொன்னேன். ஆனால் அவர் முடிவு செய்துவிட்டார் என்றும் இனி என்ன சொன்னாலும் கேட்கமாட்டார் என்றும் உன்னிகிருஷ்ண பணிக்கர் சொன்னார்”, என்றார்.

அவ்வாறு சொன்ன உன்னி கிருஷ்ண பணிக்கரிடம், “முதல்வர் ஏன் அப்படி ஒரு மிகக்கொடிய செயலைச் செய்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், பழமையான பாரம்பரியப் பூஜை தொடரவேண்டி ஒரு ஆச்சாரியாரை இருக்கச் செய்யுமாறு, முதல்வரை ஏற்றுச்சம்மதிக்க வைக்க உங்களால் முடியுமா?” என்று கேட்டுள்ளார் ஸ்வாமிஜி.

அவர் உத்தரவிட்டபடி ஜெயலலிதாவிடம் பேசுவதாக உன்னி கிருஷ்ண பணிக்கர் ஸ்வாமிஜியிடம் உறுதி அளித்துள்ளார்.

அதன் பின்னர் இருபது நிமிடங்கள் கழித்து தொலைக்காட்சித் திரையில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடத்தொடங்கியது.

பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளுடன் அவருடைய சீடரான பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் கைது செய்யப்படவில்லை.

பழம்பெருமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர் பூஜை தடையின்றித் தொடர்ந்தது

(நீதிமன்றத்தில் நீதி நிலைநாட்டப்பட்டு தர்மம் வெற்றிபெற்ற பிறகு, ஆச்சாரிய ஸ்வாமிகள் இருவரிடமும், பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களுடனான என்னுடைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொலைபேசி உரையாடல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஸ்வாமிஜி மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகிய விஷயங்களை நான் எடுத்துச் சென்றபோது, ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்களிடமிருந்தே தாங்கள் தெரிந்து கொண்டதாக பூஜ்ய ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னிடம் உறுதிப்படுத்தினார்கள். ஆச்சாரியார்கள் இருவரின் பரிபூர்ண அனுக்ரஹத்தையும் பெற்றேன்.)

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here