பஞ்ச்குலா நகரில் இருந்த ஒரு நிலத்தை அமலாக்கத் துறையினர் கருப்புப் பணத் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கில் சேர்த்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு டில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தின் தலைமையகத்தைத் திரும்பப் பெறலாம் என்று பெரு நகர் மேம்பாட்டு அமைச்சகம் அமலாக்கத் துறைக்கு அனுமதி அளித்தது. இவ்வழக்கில் வேகமாக செயல்பட்டு வரும் அமலாக்கத் துறை இப்போது புதிதாக ஒரு ஒரு சொத்தை இணைத்துள்ளது. நேற்று திங்கட்கிழமை அன்று [3-12-18] ஹரியானா மாநிலத்தில் 2005இல் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது ஏ ஜே எல் நிறுவனம் கையகப்படுத்திய மிகப் பெரிய மனையடி நிலத்தை வழக்கில் சேர்த்துள்ளது. டிசம்பர் முதல் தேதி அன்று சி பி ஐ கறுப்புப் பணத்தைச் சட்டத்தின் கீழ் இந்த இடத்தை வழக்கில் சேர்க்க சி பி ஐ ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையை அமலாக்கத் துறையினர் நேற்று நிறைவேற்றினர். மேலும் சி பி ஐ அதிகாரிகள் அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபேந்திர சிங் ஹுடா மீதும் ஒரு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். அசோசியேடட் ஜர்ணல்ஸ் லிமிட்டட் நிறுவனத்துக்கு [ஏ ஜே எல்] முறைகேடாக இந்த நிலத்தை பதிவு செய்ய உதவிய குற்றத்துக்காக அவர் மீது சி பி ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சிபிஐ தனது அறிக்கையில் ஏ ஜே எல் நிறுவனத்துக்கு நிலத்தை பதிவு செய்த போது அதன் மதிப்பு மிகவும் குறைவாக காட்டப்பட்டிருப்பதால் இதில் முறைகேடுகள் நடந்திருப்பது தெளிவாகிறது. இதனால் இந்நிலம் கருப்புப்பணத் தடைச் சட்டத்தின் கீழ் இணைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இச்சட்டத்தின் ஐந்தாம் பிரிவின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் முன்னேற்றம் குறித்து முக்கிய மனுதாரரான பி ஜே பி தலைவர் சுப்பிரமணிய சுவாமி அமலாக்கத் துறையினருக்கு தனது பாராட்டுக்களை டிவிட்டரில் தெரிவித்தார். அடுத்து மகாராஷ்டிரா மாநில அரசு பந்த்ரா என்ற பகுதியில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கிய காரணத்துக்காக வழக்கு தொடரப் போவதாக தெரிவித்தார். மாநில அரசு இதற்காக ஒரு ஆய்வுக்குழுவை அமைத்து முறை கேடாக நிலம் ஒதுக்கீடு செய்யப்பட விவரங்களை சேகரித்து வழங்கும்படி அறிவித்தது. நிலம் ஒதுக்கியதிலும் பயன்படுத்தியதிலும் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்றதை உறுதிப்படுத்திய அந்த ஆய்வுக் குழு அந்த நிலத்தை திரும்ப மாநில அரசிடம் ஏ ஜே எல் நிறுவனம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஏ ஜே எல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆய்வுக்குழு தெரிவித்தது.
அமலாக்கத் துறையினர் முன்னாள் முதல்வர் ஹுடா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நேர்மையற்ற முறையில் ஏ ஜே எல் நிறுவனத்துக்கு அந்த நிலத்தை ஒதுக்கினார். 1982ஆம் ஆண்டின் நில மதிப்பின்படி சதுர அடிக்கு 91 ரூபாய் என்றளவில் கணக்கு காட்டி மீண்டும் ஒரு முறை மறு ஒதுக்கீடு செய்துள்ளார். ஒரு முறை ஒதுக்கீடு செய்து காலாவதியாகிப் போனதை மறு முறை ஒதுக்கீடு செய்ய முடியாது என்ற சட்டம் இருந்தும் இவர் சட்டத்துக்கு புறம்பாக இந்த நிலத்தை ஏ ஜே எல் நிறுவனத்துக்கு ஒதுக்கி உள்ளார் என்று அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். 2005இல் ஒதுக்கீடு செய்த நிலத்தை மறு ஒதுக்கீடு செய்ததால் சட்டத்துக்கு புறம்பான வழிகளில் ஏ ஜே எல் நிறுவனம் பயனடைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
முதல்வர் ஹுடா சட்டத்துக்கு புறம்பாக மூன்று முறை நீட்டிப்பு வழங்கி ஏ ஜே எல் நிறுவனத்துக்கு இந்த நிலம் கிடைக்க வழி செய்திருக்கிறார். அந்த நிலத்தில் கட்டிடம் கட்டலாம் என்றும் முறைகேடாக அனுமதி வழங்கியிருக்கிறார். பிறகு ஏ ஜே எல் நிறுவனம் அந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து மீண்டும் மீண்டும் பணம் வாங்கியுள்ளது. சி பி ஐ டிசம்பர் முதல் தேதி அன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த போது இவ்வழக்கில் ஹுடா தவிர காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோராவையும் சேர்த்திருந்தது.
இதற்கிடையே பெருநகர் மேம்பாட்டு அமைச்சகம் போன வாரம் ஏ ஜே எல் நிறுவனத்துக்கு அளித்த கட்டிடத்தை காலி செய்யும் நோட்டிசுக்கு தற்காலிகத் தடை வழங்கியுள்ளது. முக்கிய வழக்கு வரும் பதினோராம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று காங்கிரஸ் சார்பில் சுப்பிரமணிய சுவாமி மீதான குறுக்கு விசாரணை தொடங்கும்.