திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முன்னோக்கிய செயல்பாடு

திருமலை பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர மடாதிபதிகள் எப்படி முன்னோக்கிச் செயல்பட வேண்டும் என்கிற ஒரு சிறந்த ஆலோசனையைக் கட்டுரை ஆசிரியர் வழங்குகிறார்

0
3544
திருமலை பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர மடாதிபதிகள் எப்படி முன்னோக்கிச் செயல்பட வேண்டும்
திருமலை பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவர மடாதிபதிகள் எப்படி முன்னோக்கிச் செயல்பட வேண்டும்

(தமிழில்: பி.ஆர்.ஹரன்)

இந்தத் தொடரின் முதல் பகுதி “திருப்பதி திருமலை கோவில் பிரச்சனை – முக்கியக் குற்றச்சாட்டுகள்”. இந்தப்பகுதி, “முன்னோக்கிய செயல்பாடு”.

பகுதி-2: ஆச்சாரியார்கள் இணைந்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம்.

குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மைகளை ஹிந்து சமுதாயம் அறியவேண்டாமா? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நம்முடைய சம்பிரதாயங்களை நீதிமன்றங்கள் தீர்மானிக்க அனுமதித்துவிட்டு நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? நம்முடைய கோவில் சம்பிரதாயங்கள், பூஜை முறைகள், ஒவ்வொரு பூஜையின் காலநேரங்கள், நைவேத்யம், பிரசாதம், குறிப்பிட்ட சேவைகளுக்கான நகை அலங்காரங்கள், ப்ரம்மோத்ஸவம் உள்ளிட்ட திருவிழாக்கள் முதலியவற்றில் தலையிடும் “திண்ணை” போன்ற கங்காரு நீதிமன்றத்தை நடத்தும் அளவிற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. கற்றறிந்த அர்ச்சகர்களிடமும் அவர்களின் ஆச்சாரியார்களிடமும் இவ்விஷயங்களை விட்டுவிடுவதே சிறந்தது. திருமலைக்கும் கோபால் சுப்பிரமணியம் போன்ற மற்றொரு “மன்ற நட்பாளர்” (amicus curiae) நமக்கு வேண்டுமா? தற்போது, அவருடைய தகைமைத் திரட்டில் (Curriculum Vitae) இதை மத ரீதியிலான அனுபவமாக வெற்றிகரமாகச் சேர்த்ததற்காக நீதிபதிகள் மேஜைக்குப் பதிலாகத் தங்கள் முதுகுகளைத் தட்டிக்கொண்டிருப்பார்கள். திருவனந்தபுரம்; புரி; அடுத்ததாக திருமலையும் இருக்கலாம்! வேறு ஏதும் பாக்கி உள்ளதா?

என்னுடைய பார்வையின்படி, பின்வரும் ஆலோசனையை முன்னோக்கிய செயல்பாடாக ஹிந்து சமுதாயத்தின் முன் சமர்ப்பிக்கிறேன்:

  • பற்பல மடாதிபதிகளும் சேர்ந்து ஒரு குழுவை அமைக்க உடனடியாக முன்வரவேண்டும். நான் முன்மொழியும் பட்டியல் (இது முடிவானது அல்ல), திருப்பதி ஜீயர், அஹோபில மடம் அழகிய சிங்கர், த்ரிதண்டி ஜீயர், ஆண்டவர், பெஜாவர் ஸ்வாமிகள், ஹதிரம் மடம் ஸ்வாமிஜி, ஆகியோரை உறுபினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். திருப்பதி ஜீயர் ஏற்கனவே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பாகவும் அரசின் சார்பாகவும் இவ்விஷயத்தில் நிலைப்பாடு கொண்டுள்ளார் என்பதை அவருடைய அறிக்கைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆயினும், ஸ்ரீமத் ராமானுஜர் ஆரம்பித்த மடத்தின் தலைவர் என்கிற முறையில், அவரிடம் பேசி அவர் நம்பிக்கையைப் பெற்று, புனைவுகளைப் புறந்தள்ளி உண்மைகளைத் தனியே பிரித்தெடுக்க, அவரை உண்மைக் கண்டறியும் தெய்வீகக் குழுவில் இணைக்கவேண்டும்.
  • இதில் ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியாரும் ஸ்ரீ ஸ்ரிங்கேரி சங்கராச்சாரியாரும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்? இந்த முழு பிரச்சனைக்கும் சூடு பிடிக்கும். மொத்தத்தில் எப்படியிருந்தாலும், பஜ கோவிந்தமும். கரவலம்ப ஸ்தோத்திரமும், கனகதாரா ஸ்தோத்திரமும் பாடியவர் ஆதிசங்கரர் அல்லவா? மேலும் இந்த ஆச்சாரியார்களுக்கு நாராயண ஸ்ம்ருதி பொதுவாயிற்றே!

இந்தக் குழு என்ன செய்ய வேண்டும்?

  1. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பக்தர்களில் / தங்கள் மடங்களைப் பின்பற்றுபவர்களில் 4 கணக்காய்வாளர்களின் பெயர்களை முன்மொழிய வேண்டும். கூடுதலாக, அவர்கள் 4 ஹிந்து நகை மதிப்பீட்டாளர்களையும் முன்மொழிந்து தணிக்கைக் குழுவை நிறைவு செய்ய வேண்டும்.
  2. இந்தத் தணிக்கைக் குழு கோவில் நகைகளை தணிக்கை செய்யும் என்று அவர்கள் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிடவேண்டும். அத்தகைய கூட்டறிக்கை எவ்விடத்திலிருந்து வருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ளும் தேவஸ்தானத்திற்கும் அரசிற்கும், அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போகும்.
  3. அதன் பிறகு, பூஜை முறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் விஷயங்களில் ஆச்சாரியார்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நபர்களைக் கூப்பிட்டு, விசாரணை செய்து, உண்மைகளைக் கண்டறிவதற்கான அதிகாரம் அவர்களிடம் மட்டுமே உள்ளது. கோவில் சம்பிரதாயங்கள், பூஜை முறைகள், அவற்றின் காலநேரங்கள், திருவிழாக்கள், நைவேத்யம், பிரசாதம் ஆகியவற்றை முடிவு செய்ய தேவஸ்தான நிர்வாகத்திற்கு எந்தவிதமான உரிமையும் தகுதியும் இல்லை என்பதை, தேவஸ்தானத்திடம் ஆச்சாரியார்கள் தெளிவுபடத் தெரிவிக்க வேண்டும்.
  4. நிறைவாக, ஆச்சாரியார்கள் தாங்கள் கண்டறிந்த உண்மைகளைப் பொது மக்களிடம் அறிவிக்க வேண்டும். பின்னர், வருடாந்திர நகைகள் தணிக்கை நடப்பதையும், சம்பிரதாயங்களில் இடையூறுகள் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்யத் தேவையான வழிகாட்டுதல்களை அவர்கள் அளிக்க வேண்டும்.

நகைகள் தணிக்கைக்கான அடிப்படை அளவு என்ன?

நகைகளுக்கான தணிக்கைக் கடைசியாக நடந்தது 22 அண்டுகளுக்கு முன்பு என்று பிரதான அர்ச்சகர் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பப் புள்ளியாக அந்தப் பட்டியலே பொருத்தமாக இருக்கும். அதன் பிறகு பகவானுக்குக் காணிக்கையாக வந்த நகைகளை அந்தப் பட்டியலில் சேர்த்து, ஒவ்வோர் நகையையும் வகை வகையாகக் கணக்கிட்டு அவற்றின் தரத்தையும் பதிவு செய்ய வேண்டும். கணிப்பொறி இலக்கமுறை (Digitisation) பிரபலமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நன்கொடைத் தகவல்கள், நகை வகைகள், தரம், என அனைத்தையும் விவரமாகக் கணிப்பொறி இலக்கமுறையில் பதிவு செய்து சேமிக்கப்படவேண்டும். உண்மையான நகைகள் சேமிப்பறைக்குத் திரும்பி வந்துள்ளனவா, அல்லது போலி நகைகள் அவற்றுக்குப் பதிலாக வைக்கப்பட்டுள்ளனவா, அல்லது உண்மையான நகைகள் காணாமல் போயுள்ளனவா என்பதெல்லாம் தற்போது உறுதியாகத் தெரியாத நிலைதான் நிலவுகிறது.

இந்த மாதிரியான சமயங்களில் பூஜ்ய ஸ்வாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. ஆலயப்பாதுகாப்பு, கோவில் பிரச்சனைகளில் ஒருமித்த கருத்து ஏற்படுத்துதல், பசுப்பாதுகாப்பு, மதமாற்றங்கள் போன்ற ஆபத்துகளை எதிர்கொள்ளுதல் ஆகிய விஷயங்களுக்காக, அனைத்து ஆச்சாரியார்களையும், ஆதீனங்களையும், மண்டலேஸ்வரர்களையும் ஒருங்கிணைத்து, ஹிந்து தர்ம ஆச்சாரிய சபா என்கிற ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து மாபெரும் பணியைச் செய்தவர் அந்த மஹான். அரசுகளின் அசுரக் கட்டுப்பாட்டிலிருந்து நம் ஆலயங்களை மீட்பதற்காக அவர் தொடுத்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர் மட்டும் இப்போது இருந்திருந்தால், இந்தக் கட்டுரையை எழுதுவதற்குப் பதிலாக அவரிடம் ஓடிச் சென்றிருப்பேன்.

இருப்பினும், இவ்விஷயத்தில் ஹிந்து சமுதாயம் யாரேனும் ஒருவர் மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளலாம் என்றால், அவர் டாக்டர் சுப்பிரமணியன் ஸ்வாமி அவர்கள் தான்! இந்தப் பிரச்சனையை உச்ச நீதிமன்றத்தில் வழக்காக எடுத்துச் செல்லும் முயற்சியில் இருக்கும் அவர், உண்மையைக் கண்டறிவதற்கும், நடைமுறைகளைச் சரிசெய்வதற்கும் ஆச்சாரியார்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியையும் கூடுதலாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் வேண்டிக்கொள்கிறேன். இவ்விஷயத்தில் ஆச்சாரியார்களைத் தலைமை ஏற்றுக்கொண்டு வழிநடத்துமாறு சம்மதிக்க வைக்கக் கூடிய தகுதியும், ஆளுமையும் அவரிடம் மட்டுமே இருக்கிறது. காஞ்சி பரமாச்சாரியாரிடம் அவர் கொண்டிருக்கும் குருபக்திக்கு இணையே இல்லை.

ஆலோசிக்கப்பட்டுள்ள இந்த ஆச்சாரியார்கள் குழு சனாதன தர்மத்தின் நோக்கத்தை நிறைவேற்றும். நாளடைவில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆச்சாரியார்களும், சாதுக்களும் இணைந்து அந்தந்தப் பிராந்தியங்களின் ஆலயங்கள் மற்றும் ஆலயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக குழு அமைத்துச் செயல்பட வேண்டும். அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட்டதும், அவற்றை வழிநடத்தக் கூடிய அமைப்புகளாக இந்தக் குழுக்கள் விளங்கும்.

ஹிந்து சமுதாயம் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் இருக்கின்றது. நாம் நம்பிக்கை வைத்து வாக்களித்த தலைவர்கள், பரம்பரை போலி மதச்சார்பின்மைவாதிகளை விட பெரும் போலி மதச்சார்பின்மைவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்ற அரசியல்வாதிகளும், பயபக்தி இல்லாத அரசு அதிகாரிகளும், ஆலய அலுவல்களில் ஊடுருவியுள்ள பாலைவனச் சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களும் நம் ஆலயங்களை நிர்வகிக்கக் தேவையான தீர்வு அல்ல. அவர்கள் நம் ஆலயங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆலயங்கள் ஆச்சாரியார்களின் ஆட்சிப்பரப்பு. ஆலய நிர்வாகம் ஆச்சாரியார்கள் வசம் தான் இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் வசம் அல்ல; நீதிமன்றங்கள் வசமும் அல்ல; பாலைவனச் சமயக் கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்கள் வசமும் அல்ல. ஆச்சாரியார்கள் ஆலயங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

திருப்பதி திருமலைக் கோவில் பிரச்சனை வழியாக நமக்கு ஓர் நல்வாய்ப்பை வழங்கியிருக்கிறான் பகவான் ஸ்ரீமன் நாராயணன். நாடெங்கிலும் உள்ள ஆச்சாரியார்களுக்கும், பக்தர்களுக்கும், ஹிந்து சமுதாயத்துக்கும் இதைவிட ஓர் நல்வாய்ப்பு கிட்டுமா? இறைவன் அருளுடன் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, வரும் காலங்களில் நம் மத உரிமைகளையும் மதச் சுதந்திரத்தையும் மீட்டெடுப்போம். 

(திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மூத்த அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள ஒருவரிடம் பேசினேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் திருப்பதி கேந்திரிய வித்யாலயாவில் படித்த வகுப்புத் தோழர் அவர். அவர் என்னிடம், “சில வருடங்களுக்கு முன்னால் ஒரு ஆச்சாரியர் கோவிலில் நடக்கும் சில தவறான நடைமுறைகளைப் பற்றிக் கேள்விகள் எழுப்பியபோது, அவரிடத்திற்கு வந்து அவரைச் சந்தித்த தேவஸ்தான அதிகாரிகள், அவருக்குத் திருமலையில் ஒரு மடம் உள்ளது என்றும், தேவஸ்தான மூத்த அதிகாரிகளின் ஆதரவு அவருக்குத் தேவை என்றும், அவருக்கு நாசூக்காக நினைவூட்டினார்கள். மேலும், உத்தரவுப்படி அவருக்கு மஹாத்வாரம் மற்றும் கர்ப்பக்ருஹம் ஆகிய இடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை  தான் மரியாதைகள் உண்டென்றும், அதுவும் குறைக்கப்படலாம் என்றும் கூறியுள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இப்படித்தான் செயபடுகிறது” என்றார்).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here