கமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்!

கமல் ஹாசனைக் கேள்வி கேட்பவருக்கு குழப்பம்

கமல் ஹாசனைக் கேள்வி கேட்பவருக்கு குழப்பம்
கமல் ஹாசனைக் கேள்வி கேட்பவருக்கு குழப்பம்

அசட்டுத்தனமான கேள்வியும் அதற்கேற்ற பதிலும்‘ என்ற தலைப்பில் அந்தநாளில் ஒரு வார இதழில் ஜோக்ஸ்கள் வந்தன. உதாரணத்திற்கு, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒருவனிடம், ‘சாப்பிடுகிறீர்களா?’ என்று கேட்டால் என்ன அசட்டுத்தனமான கேள்வி அது? அதற்கு அவன் ‘இல்லை, சாதம் என்ன கலர்-னு பார்த்துக்கிட்டுருக்கேன்’ என்று பதில் சொன்னால் அசட்டுக் கேள்விக்கு சரியான பதில்தானே அது!  கேள்விக்கேற்றார்ப்போலத்தான் பதில் இருக்க வேண்டும். அசட்டுக் கேள்விக்கு அசட்டுத்தனமான பதில்தான் கொடுக்கவேண்டும். இதுவே ஆக்கபூர்வமான கேள்விக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டும்? ஆக்க பூர்வமாகத்தானே பதில் கொடுக்க வேண்டும்? ஆனால் அசட்டுத்தனமாக   பதில் கொடுப்பதில் ஒரு ட்ரெண்டை உண்டாக்கிக் கொண்டிருப்பவர் கமல்ஹாசன் அவர்கள்.

கமல் ஹாசனைக் கேளுங்கள் என்னும் ஹாஷ்டாகில் (#AskKamalHaasan) அவர் கேள்விகளை வரவேற்கிறார். நல்ல பதிலை வரவழைக்கும்படியாக ஒரு கேள்வி கேட்பதற்கே திறமை வேண்டும். அப்படிப்பட்ட கேள்விகளையே  பதில் கூறுவோர்கள் தேர்ந்தெடுப்பார்கள். கமல் இப்பொழுது அரசியல் அவதாரம் எடுத்திருப்பதால், ஏடாகூடமான கேள்விகள் வரும். அதனால் கவனமாகக் கேள்விகளைத் தேந்தெடுத்து பதில்  கூறுவார் என்றுதான் நாம் எதிர்பார்ப்போம்.

அவரும் ஒரு கேள்வியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சாதாரண கேள்வி, ஆனால் நல்ல கேள்வி.  ஒரு அறிவுஜீவியாக, படிப்பாளியாகத்  தன்னைக் காட்டிக்  கொள்ளும் கமல் மீது தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகம் எது என்று அறியும் ஆவலில் அவரது ரசிகர் கேட்கிறார்.

இதற்கு கமல் தரும் பதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும். ஒன்று ஜோக்கடித்து பதில் சொல்லலாம். அல்லது சீரியஸாக பதில் சொல்லலாம். இரண்டும் இல்லாமல் அசட்டுத்தனமான ஒரு பதிலை கமல் தருகிறார்.

இந்த பதிலைப் படித்துவிட்டு அவரவர் கமலைத் திட்டித் தீர்த்து விட்டார்கள்- பூணூலைக் கேவலப்படுத்திவிட்டார், பார்ப்பனர்களை மட்டம் தட்டுகிறார், தான் திராவிட அரசியல் செய்வதாகக் காட்டிக் கொள்வதற்கு இப்படி ஒரு பதிலைக் கொடுத்திருக்கிறார் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

கமல் அப்படி என்ன சொல்லிவிட்டார்? பூணூல் அணிந்துகொண்ட காரணத்துக்காகவே பார்ப்பனர்கள் அவமதிக்கப்பட்டார்கள், பாதிக்கப்பட்டார்கள். அதைத்தான் கமலும் சொல்லியிருக்கிறார் – என்னை பாதித்த நூல் பூணூல்- என்று. அதனால் அதைக் கழற்றி வைத்துவிட்டார் போலிருக்கிறது. அத்துடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம். அதற்கு மேலே போய், ‘அதனாலேயே பூணூலைத் தவிர்த்தேன்’ என்கிறாரே அதுதான் அசட்டுத்தனம்.

பூணூலைத் தவிர்த்தேன் என்கிறாரே, பூணூல் போட்டுக் கொண்டவரைத் தவிர்த்தாரா?  பரம்பரை பூணூல் இல்லை என்றாலும், திடீர்ப் பூணூல் அணிந்த ராகுல் காந்தியை அவர் தவிர்த்தாரா? இல்லையே

பரம்பரைப் பூணூல் கமலும், திடீர்ப் பூணூல் ராகுலும் தமிழ் நாட்டு அரசியலுக்காகக் கை குலுக்கிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க பூணூலைத் தவிர்த்தேன் என்று ஏன் பதில் சொல்ல வேண்டும்? நாளைக்கு யாராவது இதை பற்றிக் கேள்வி கேட்டால், ‘நான் பூணூலைத்  தவிர்த்தேன் என்று சொன்னேனே தவிர பூணூல் போட்டுக் கொள்பவரைத் தவிர்ப்பேன் என்று சொல்லவில்லையே’ என்று அசடு வழிய வேண்டியிருக்கும். அதனால்  ஒழுங்காக கேட்ட கேள்விக்கு பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் கமலுக்கு அது சாத்தியமாகாது போலிருக்கிறது.

சமீபத்தில் இன்னொரு கேள்விக்கு அவர் அளித்த பதில் அசட்டுத்தனத்திலிருந்து அபத்தத்துக்கு முன்னேறி இருந்தது.

கமலுடைய  சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லையே என்ற கருத்தில் ஒரு ரசிகர் கேட்கிறார்.

இந்தக் கேள்விக்கு யோசிக்காமல் பதில் சொல்கிறார் கமல். பாரதியார் இவருக்குத் தகப்பனாராம். பாரதியார் முகம்தான் இவரது முகமாம்.

பாரதியார் முகத்தைத் தன் முகமாக ஏற்று கொள்கிறார் என்றால், பாரதியார் சொன்ன கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கிறார் என்று அர்த்தம் கொள்ளலாமா?

ஜாதிக் கொடுமைகள் வேண்டாம் என்று எட்டு திக்கும் முரசு கொட்டும் பாடலின்  ஆரம்பத்திலேயே ‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே‘ என்கிறாரே பாரதியார் அதை கமலஹாசன் வழி மொழிவாரா?

அது மட்டுமா,

‘வேதமறிந்தவன் பார்ப்பான் – பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்’

என்று பூணூல் போட்ட பார்ப்பானை உயர்வாகச் சொன்னாரே, அதை ஏற்றுக்  கொள்கிறாரா கமல்?

மேலும்,

‘நாலு வகுப்பும் இங்கு ஒன்றே – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை  தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி’

என்று மனுவாதி வர்ணங்களைத் தூக்கிப் பிடித்துள்ளாரே பாரதியார், அவரது அந்த முகம்தான் தனது முகம் என்று கமல் சொல்கிறாரா? இதையும் விடுங்கள். தென் மாநிலங்கள் என்று பாரதத்திலிருந்து பிரித்துப் பேசுகிறாரே கமல், தந்தை என்று சொல்லும் பாரதியார் அதை ஏற்றுக் கொண்டிருப்பாரா? கங்கையையும், காவிரியையும் இணைத்தவர் அவர். காசியையும், காஞ்சியையும் ஒரே நோக்கில் பார்த்தவர் அவர். நாக்கில் வேதம், வாக்கில் செப்பு மொழி பதினெட்டு என்று பாரத தேசம் முழுவதையும் ஒருங்கிணைத்துப் பார்த்தவர் பாரதியார். அப்படி இணைப்பதற்கு அடிபப்டையாக வேத மதத்தை ஏற்றுக் கொண்டவர் அவர். அவரைப் போய் தனக்குத் தந்தை என்கிறாரே,  அவரது முகம் தன் முகத்தில் பொருந்துகிறது என்கிறாரே இது அசட்டுத்தனமா, அல்லது அபத்தமா?

ஒரு வேளை தந்தை பெரியார் என்ற எண்ணத்தில் இந்த பதிலைத் தந்திருக்கிறாரோ? இருக்கும், இருக்கும். கேட்ட கேள்விக்கு ஒழுங்கான பதில் சொல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டால் இப்படித்தான் அசட்டுத்தனமும், அபத்தமும் அரங்கேறும்.

2 COMMENTS

 1. அப்படியெல்லாம் கமல் ஹாசனைக் கேள்வி ஒன்றும் கேட்டுவிடக் கூடாது! அதைவிடச் சாலச் சிறந்தது, அவர் சரணாரவிந்தங்களில் சட்டென்று சாஷ்ட்டாங்கமாகச் சாணுடம்பாகிச் சீடராகச் சார்ந்துவிடுவது! இல்லையென்றாால், ‘பிக் பாஸ்’ (Big Boss)இன் ‘உள்’ளும் ‘வெளி’யும் நடக்கும் நிகழ்வுகளில் கலாவல்லர் “கலைஞர்” (– ஆம், கடந்த ஆண்டின் போது ஒரு சமயம், ‘உள்ளே’ இருந்த அத்தனை பேரையும் “நாமெல்லோரும் கலைஞர்கள்” என்றெல்லாம் உருக்கி வார்த்தும், தாமெல்லோரும் சமூகத்தின் கலங்கரை விிளக்கங்கள் என்பது போலெல்லாம் உசுப்பி உலுக்கியும் விட்டார்!) கமலின் பயணம், பவனி, பாணி வேறெப்படிப் புலப்படுகிறது?

  அது சரி, நேர்முகவாகவோ சமூக ஊடகமாகவோ கூட்டம் சேர்த்துக் கேள்விக் கணை சேகரித்து வாண வேடிக்கை காட்டிக் களிப்புறும், முகம் மிளிரும் மற்றும் உள்ளம் குளிரும் சமூகக் கலங்கரை விளக்கங்கள் ஏன் தக்க பதில் தரும் பொறுப்பும் ஏற்க வேண்டும்? அதுவும், கமல் வெளிப்பாட்டுத் திறன் (~ communication skill)இல் நடிப்புக் கலை தாங்கியவர். செல்வ வளத்தில் வணிக வல்லமை ஓங்கியவர். காமெடியும் கடியும் கலப்பதில், தவிரக் குழப்புவதில், சிறப்புப் பெயர் வாங்கியவர். ஆகமொத்தம், ஆசான்-சீடன், அரசன்-ஆண்டி, தலைவன்-தொண்டன் போன்ற காரியத்திலோ மற்றும் வினா-விடை, உரிமை-கடமை, அரவம்-அமைதி போன்ற கருத்திலோ வேறு எவ்வாறும் வேடம்-தடம் புரளாமை-தளராமை நீங்கியவர்.

  ஒரு விஷயத்தைக் கண்கூடாகப் பார்க்கலாம், ஆதலால் தாராளமாக ஏகமனதாக ஏற்கலாம்: அதாவது, தொடர்ந்து பின்னங்காலால் உதைத்துத் தொலை தூரம் தன்னைத் தாக்கித் தூக்கி எறி்ந்து கொண்ட வண்ணம் இருக்கும் திராவிடக் கோவேறு கழுதை மீது, அத்தனையும் மீறித் தொய்வும் தோல்வியுமாகத் தொற்றியும் தொங்கியும், விடாது முயன்று சவாரி ஏறிச் சவுகரியம் செய்து கொள்ளப் பார்க்கிறார் கமல் ஹாசன்.

  ஆனாலும், இவர் ஏன் இப்படித் திராவிட நதியில் நல்கி நீந்தி நீராட வேண்டும்? அதிலும், இப்படி ஓடமாகி எதற்கு இத்தனை ஓட்டம் ஓட வேண்டும்? இப்படியே போய் எங்கே சேர இவ்வளவு பேராவல்? மேல்* வானம் மேகம் கூட்டுகிறது, பொன்மழை கழிக்கிறது, கீழே திராவிட நதிப் பாய்ச்சல் பெ்ருக்குகிறது. ஏழ்கடல் எட்டிப் பாரெங்கும் வாழ வழி வகுக்கிறது. மேற்கண்ட கூட்டல்-கழிித்தல்-பெருக்கல்-வகுத்தல் கணக்கில் மேன்மை பெற ‘நீராண்மை’ நெறி வழுவாது தேக்கி்க் கொண்டு ஆக்கம் பெருக்கியும், காட்டாற்று வெள்ளமாய் ஓடவிட்டுத் தாக்கம் ஏற்படுத்தியும் தண்டமிழ் பயில் நம் நாடு மேலோங்க நல்லாட்சி செய்ய வேண்டும். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”வது நம் தண்டமிழர் பண்டை மரபேயன்றோ? கீழோர் யாவரையும் மேலோராக்குவது தன்னலமற்று, முழுவதும் பொதுநலமுற்றுப் புரியும் புனிதத் தொண்டேயன்றோ?

  மேற்காற்று எப்புறம் வீசுகிறது என்று எவ்வாறு அறிவிப்பது? கீழ்-மேல் பாகுபாடு எப்படிச் சுட்டிக் காட்டுவது? “கீழே = வேண்டவே வேண்டாம், விட்டு ஓடிப் போ; மேலே = வேணடும், வேண்டும், நாடித் தேடி அடித்துப் பிடித்து உதைத்துத் தள்ளி வா”– இதை எப்படி உணர்த்துவது? ஒரு பக்கம், வெற்றுக் கயிற்றை விஷப் பாம்பாக்கியும், மரம் ஆலோ வேலோ வேறெதுவோ அதைப் புளியாக்கி அதை அண்டியவனையே பேயாக்கியும், இவ்வாறே மற்றப் பலப்பல விதமாகப் பீதி கிளபிப்ப் பரப்பிப் பலரை அகற்றலாம். இன்னொரு பக்கம், எண்ணத்தில் மிகுந்தோராயினும் எண்ணிக்கையில் மிகாதோரைத் தனிமைப் படுத்திக் கொச்சப் படுத்திக் கொடும்பாவையாக்கிக் கூட்டம் போட்டுக் கொட்டமடிக்கலாம். இவையாவுமே மேலோர்க்குக் காலங்காலமாகக் கைவந்துள்ள திசைகாட்டியும், வழி வரைபடமும் ஆகும்.

  கமல் தாம் யார்யார் கூட்டுடன் யார்யாருடன் கூட இந்தப் பேருந்தல் காட்டுகிறார்? கூட்டமும் கூப்பாடும் கூட்டுறவின் கூறுகள்தாமே? பேரிரைச்சலும் பெரியத்தனமும் பேருறவின் பேறுகள்தாமே? இதனால்தானே இதிலெல்லாம் சார்ந்தவர்கள், சேர்ந்தவர்கள், தேர்ந்தவர்கள் யாவரும் களத்தில் தத்தம் இருப்பை, உறுப்பை, பொறுப்பை, மற்றும் பெருக்கைப் பன்மடங்காக்கப் பன்முறை– இதில் வன்முறையும் அடக்கம்– கைகொள்கிறார்கள்!

  நிஜமாக இிவ்விஷயத்தில் பாரதியாரரோ, பெரியாரோ பூணூலோ முக்கியமாகத் தெரியவில்லை. ஏன், எந்த வேலைக்கும் ஆகாத பார்ப்பானே இதில் முன்னிலையில் இல்லை! எப்படியென்றால், மேலே பீறிப் பெருகித் தாவும் திராவிடக் காட்டாற்றுடன் சீறிப் பாய்ந்து ஓடும் ஒவ்வொருவனும் ஒரு வகையில் பார்ப்பானே ஆவான்: ஒருத்தன் தனி மரமாகவே நீந்திப் பார்ப்பான், இன்னொருத்தன் எல்லாரும் புடை சூழ நல்ல மரப் படகு மீது நின்று நாலாப் பக்கமும் பார்ப்பான். படகு ஏனையச் சாதனங் கொண்ட ஏறக்குறைய ஒவ்வொருத்தனுமே வெறுந் தண்ணீரில் வெடவெடப்பவனை வேண்டுமென்றே வெறுமென்றே பலப்பேராக ஒன்று சங்கமித்து வேடிக்கை பார்ப்பான்.

  இது போன்று நாடு முற்றிலும் தலைக்கு ஒருத்தனாகத் தறிகெட்டுத் தெறித்தோடத் தென்படும் அவல, அராஜக, மற்றும் அநீதி நிலையில், பாவம், கமல் ஹாசனால் மட்டும் எது போன்ற பதில் பகர இயலும்? ஆனாலும் முழுதும் வேறான ஒருத்தனும் இத்தனையும் தவறாது பண்புறப் பார்ப்பான், சீர்கொளச் சேர்ப்பான், கோலமாகக் கோர்ப்பான். அவன்தான் காலன், காருண்யன், தருமன் ஆவான்.

  —————————————–
  *”மேல்”உக்கும் “மேற்கு”க்கும் மற்றும் “கீழ்”உக்கும் “கிழக்கு”க்கும் வித்தியாசமே கையாளாமல் இிருப்பது இந்தக் கருத்துரை (= comment) பூராவுக்குமே வாகாக அமையும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here