தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து சிலரால் நடத்தப்பட்ட போராட்டத்தில், வன்முறை, துப்பாக்கி சூடு, உயிரிழப்பு போன்றவைகள் ஏற்பட்டதை குறித்து உலகளவில் பேசப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இத்தகைய நிலைமை குறித்து குழப்பம் அடைந்துள்ளனர்.
சுற்றுப்புற சூழல் பாதிப்படையும் என்று கூறி தொழில் திட்டங்களை தடைசெய்யும் முயற்சிக்கு போராட்டக்காரர்கள் காட்டும் தீவிரம், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிகவும் கூடுதலாக உள்ளது என்பது கண் கூடாக தெரிகிறது.
சமீப காலத்தில், இந்தியா முழுவதும் பல தொழில் திட்டங்களும், அணுமின் நிலையம், தாதுப்பொருள் சுரங்கம், அணைகள் போன்றவை அமைக்கும் திட்டங்களும் போராட்டக்காரர்களின் எதிர்;ப்பினால் கைவிடப்பட்டுள்ளன அல்லது நிச்சயமற்ற நிலைமையை சந்தித்து கொண்டு வருகின்றன.
இந்த திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பு, மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் சுமார் 100 முதல் 200 மக்களே பங்கேற்கின்றனர். சிலரின் கருத்தை சமுதாய கருத்தாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. பல சமயங்களில், கருத்து கேட்பு கூட்டத்தில் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டாலும், அதனை கருத்தில் கொள்ளாமல், போராட்டக்காரர்களின் எதிர்ப்பு தொடர்கிறது.
சுற்றுப்புற சூழல் பாதிப்படையும் என்று கூறி தொழில் திட்டங்களை தடைசெய்யும் முயற்சிக்கு போராட்டக்காரர்கள் காட்டும் தீவிரம், மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மிகவும் கூடுதலாக உள்ளது என்பது கண் கூடாக தெரிகிறது. தகுந்த தொழில்நுட்ப ரீதியில் கொடுக்கப்படும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
மிகவும் மதிக்கப்பட்ட விஞ்ஞானி முன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களால் வரவேற்கப்பட்ட நியூட்ரினோ திட்டம் எதிர்கால ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று உலகெங்கிலும் எண்ணப்படுகிறது. பல வளர்ந்த நாடுகளும், சீனாவும் இந்த ஆராய்ச்சியில்; ஈடுபட்டுள்ளன. இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஏற்படக்கூடிய நன்மையைப்பற்றி அக்கறை கொள்ளாமல் இந்த முக்கியமான திட்டத்தை போராட்டக்காரர்கள் எதிர்க்கின்றனர். பல வதந்திகள் மக்களிடம் பரப்பப்படுகின்றன.
கேரளாவிலிருந்து, தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் இயற்கை எரிவாயு குழாய் திட்டம், கச்சா எண்ணெய் எடுக்கும் நெடுவாசல் திட்டம், குளச்சலில் துறைமுகம் அமைக்கும் திட்டம் என்று பல வளர்ச்சிக்கு வழி வகுக்கக் கூடிய திட்டங்கள் தமிழ்நாட்டில் தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோர்கள், மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து முடக்கப்பட்டுள்ளன.
தற்போது, தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையும், போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் மூடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையும் விதிமுறைகளை மீறவில்லை என்று திட்டவட்டமாக கூறிவருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் சுமார் 3000 ஊழியர்கள் பணியிலுள்ளனர். இது மாத்திரம் அல்லாமல் சுமார் 7000 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மேல் ஸ்டெர்லைட் ஆலையின் பல்வேறு பணிகளுக்காக ஈடுபட்டுள்ளனர். ஆலையின் மிக அருகிலேயே ஊழியர்கள் குடியிருப்பில் பல ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஆலையின் உள்ளேயே பல வருடங்களாக பணியிலுள்ளவர்கள், மற்றும் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்கள் ஆலையின் செயற்பாட்டினால் தங்களுக்கு சுகாதார ரீதியில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஆணித்தரமாக கூறுகின்றனர்.
ஸ்டெர்லைட் ஊழியர்கள் ஆலை தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமென்று தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானித்த தமிழக அரசு இந்த ஊழியர்களின் கருத்தை கேட்கவில்லை. இவர்களும் தூத்துக்குடி வாசிகளே என்பதையும், இவர்களுக்கும் தூத்துக்குடியின் வளர்ச்சியில் ஆர்வம் உண்டு என்பதையும், மக்களின் நலத்தில் இவர்களுக்கு உள்ள அக்கறை மற்றவர்களைவிட எந்தவிதத்திலும் குறைவில்லை என்பதையும்;, தமிழக அரசு கணக்கில் கொள்ளாதது ஏன் என்பது புரியவில்லை.
அதே சமயம், தூத்துக்குடியிலும்,அதன் அருகில் வசிக்கும் மக்களில் சிலருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை குறித்து சந்தேகமும், எதிர்பபுணர்ச்சியும் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.அவர்களது உணர்வையும். மதிக்க வேண்டியது அவசியம்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட முடிவெடுத்த தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை குறித்து இரண்டுவிதமான கருத்துக்கள் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள, ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக உள்ள ஆலையை வன்முறை போராட்டத்திற்கு அஞ்சி தமிழக அரசு ஆலையை மூட முடிவெடுத்ததோ என்ற சந்தேகம் எழ வழிவகுக்க கூடாது. இத்தகைய எண்ணம் தோற்றுவிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் எதிர்கால தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு கடும்பாதிப்பு ஏற்படும்.
தூத்துக்குடியில் வசிக்கும் சில லட்சம் மக்கள் தொகையில், சில ஆயிரம் நபர்களே போராட்டத்தில் இறங்கி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்தனர். இவர்களது கருத்துக்களை மாத்திரம் தூத்துக்குடி மக்களின் மொத்தமான கருத்தை பிரதிபளிப்பதாக கொள்ள முடியாது.
இத்தகைய சூழ்நிலையில். தூத்துக்குடி வாசிகளிடம் ஸ்டெர்லைட் ஆலை தொடரலாமா அல்லது மூடப்பட வேண்டுமா என்று கருத்தெடுப்பு நடத்துவதே சரியான சரியான மக்களாட்சிக்கு உகந்த வழிமுறை. தூத்துக்குடியில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும், தங்களது கருத்தை கூற வாய்ப்பு அளிப்பது அவசியம்.
பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மக்களிடம் கருத்தெடுப்பு நடத்தும் முறை சில வளர்ந்த நாடுகளில் உள்ளன. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து சேர வேண்டுமா என்று முடிவெடுக்க இங்கிலாந்து மக்களிடம் கருத்தெடுப்பு நடத்தப்படப்பட்டது. பெருவாரியான மக்கள் ஐரோப்பிய யூனியனில் சேர வேண்டாம் என்று கருத்து தெரிவித்ததால், இங்;கிலாந்து அரசு ஐரோப்பா யூனியனில் சேரவேண்டாம் என்று முடிவெடுத்தது.
அயர்லாந்தில் கருக்கலைப்பை தடைசெய்ய வேண்டுமா என்று கருத்தெடுப்பு நடத்தப்பட்டது. பெருவாரியான மக்கள் கருக்கலைப்பை தடை செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்ததால் அவ்வாறே முடிவு எடுக்கப்பட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை குறித்து எல்லா மக்களின் கருத்தையும் வாக்கெடுப்பு மூலம் தெரிந்து கொண்டு முடிவு எடுப்பது தான் சரியான, நாகரீகமான வழிமுறை என்பதை யாராலும் எப்படி மறுக்க முடியும் ?