ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்ற தமிழக அரசின் ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்திடம் முறையீடு செய்தது. பசுமை தீர்ப்பாயம் இந்த பிரச்சினை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க கோரி, ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த நிபுணர் குழு ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி தமிழக அரசு அளித்த ஆணை தவறானது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை குறித்து எதிர்ப்பு குரலை கேட்கும் தமிழக அரசு, மாற்று வாதங்களையும் உன்னிப்பாக ஆராய வேண்டும்.
இது இறுதி முடிவு அல்ல. பசுமை தீர்ப்பாயம் மேலும் தமிழக அரசின் வாதத்தையும், போராட்டக்காரர்களின் வாதத்தையும் கேட்டுதான் முடிவெடுக்கும்.
ஆனால், தற்போது, தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் என்று தங்களை வாணித்து கொள்வோரும், பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருந்தால், அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், கடுமையாக எதிர்ப்போம் என்று சவால் விடுகின்றன.
சிலர், நிபுணர் குழு அங்கத்தினர்களை குறித்து சந்தேகம் எழுப்பி அவர்களது முடிவுக்கு உள்நோக்கம் உள்ளது என்று கூறிவருகிறார்கள்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்தால் ஆதரிப்பதையும், மாறாக வந்தால் நீதிபதிகளை குற்றம் சொல்வதையும்,அவர்களது நேர்மையில் சந்தேகம் கொள்வதும் ஒப்புக்கொள்ள கூடிய அணுகுமுறையா? இது நியாயமா ?
நீதிபதிகளின் முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாட்டில் அராஜகம் தான் ஏற்படும். அது நாகரீகமான நிலைக்கு வழிவகுக்காது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை ஏற்படும். இந்த நிலை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிய பாதகம் ஏற்படாதா என்று தீவிரமாக ஆலோசிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை குறித்து எதிர்ப்பு குரலை கேட்கும் தமிழக அரசு, மாற்று வாதங்களையும் உன்னிப்பாக ஆராய வேண்டும்.
முதல் தாமிரம் தொழிற்சாலை அல்ல
ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரம் (copper) என்ற உலோகம் தயாரிக்கப்படுகிறது. இதே விதமான, விஞ்ஞான, பொறியியல் முறையில் தான் மத்திய அரசை சார்ந்த இந்துஸ்தான் காப்பர் என்ற ஆலை ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்டிலும், பிர்லா காப்பர் என்ற ஆலை குஜராத்திலும் பல வருடங்களாக தாமிரம் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த மூன்று தொழிற்சாலைகள,; வளர்ந்த நாடுகளிலுள்ள தொழில் நுட்ப ரீதியில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தான் அமைக்கப்பட்டுள்ளன.
பிர்லா காப்பரின் தாமிரம் உற்பத்தி திறன் ஆண்டொன்றிற்கு 5 லட்சம் டன். ஸ்டெர்லைட் ஆலையின் தாமிரம் உற்பத்தி திறன் ஆண்டொன்றிற்கு 4 லட்சம் டன்.
பிர்லா காப்பர் ஆலையின் உற்பத்தி திறன் ஸ்டெர்லைட் ஆலையை விட கூடுதலாகும். அங்கெல்லாம் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. யாரும் எதிர்க்கவும் இல்லை. தமிழ் நாட்டில் மாத்திரம் எதிர்ப்பது ஏன்?
பிர்லா காப்பர் தொழிற்சாலை, இந்துஸ்தான் காப்பர் தொழிற்சாலைகளிலும் கந்தக அமிலம் தயாரிக்கும் பிற தொழில் அமைப்புகளும் நன்றாக செயல்படுகின்றன. அங்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை.
முதல் கந்தக அமிலத்தொழிற்சாலை அல்ல
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் (Sulphuric acid) தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ் நாட்டில் ஸ்டெர்லைட் ஆலை அல்லாது மூன்று கந்தக அமிலம் உற்பத்தி செய்யுமஆலைகள் இயங்கி வருகின்றன. தூத்துக்குடியிலேயே கீரின் ஸ்டார் பெர்டிலைசர் (Green Star Fertilisers ) என்ற ஆலை இயங்கி வருகிறது. இந்த மூன்று ஆலைகளுக்கும் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மாத்;திரம் எதிர்ப்பது ஏன் ?
தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் கடைசியாக ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்காண காரணங்களை தெரிவித்த போது, ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் தயாரிக்கும் தொழில் அமைப்பிலிருந்து அளவிற்கு அதிகமாக சல்பர் டை ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறவில்லை.
மேலும், தூத்துக்குடியில் 4 மின்சார உற்பத்தி நிலையங்களில் நிலக்கரியை எரி பொருளாக கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவற்றில் உபயோகிக்கப்படும் நிலக்கரியில் சுமார் 5 சதவீதம் வரை கந்தகம் காணப்படும். இதனால், மின் உற்பத்தியிலிருந்து வெளிப்படும் புகையில் ஒரு க்யூபிக் மீட்டருக்கு 1500 மில்லி கிராம் வரை சல்பர் டை ஆக்ஸைடு வெளியேறக்கூடும். ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் புகையிலிருந்து வெளியேறும் சல்பர் டை ஆக்ஸைடு, அனுமதிக்கபட்ட ஒரு க்யூபிக் மீட்டருக்கு 100 மில்லி கிராம் அளவே உள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டின் சென்னை அலுவலகத்தில், தமிழ் நாட்டில் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளிலிருந்து வெளி வரும் புகையிலிருந்து (emission) நச்சுத்தன்மை உள்ளதா என்று கண்டறிய கருவிகள் 24 மணி நேரமும் இயங்கிவருகின்றன.
நச்சு வாயு கசிந்தால் உடனே எச்சரிக்கை மணி ஒலிக்கும். உடனே தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சில வருடங்களில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சல்பர் டை ஆக்ஸைடு வாயு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக வெளிவந்ததாக தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தகவல் தெரிவிக்கவில்லை.
புற்று நோய் ஏற்படுத்துகிறதா?
எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலையினால் புற்று நோய், ஆஸ்த்துமா, சரும ரோக பிரச்சினைகள் ஏற்படுவதாக தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. புற்று நோய் ஏற்படுவதின் காரணங்களை கண்டறிய உலகெங்கிலும் பல ஆராய்ச்சிகள் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. சரியான காரணங்கள் இது வரை துல்லியமாக தீர்மானிக்கப்படவில்லை.
சென்னையில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு புற்று நோய் உள்ளது. மைசூரில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை . இங்கு ஆஸ்மா பிரச்சினை உள்ளது. கல்கத்தாவில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவில்லை. இங்கு சரும ரோக பிரச்சினைகள் உள்ளன.
ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியர்களையும் சேர்;த்து சுமார் 3000 பேர் வேலை செய்கின்றனர்.மேலும் பல குடும்பங்கள் ஸ்டெர்லைட் குடியிருப்பில் வாழ்ந்து வருகின்றன. அவர்கள் யாரும் தங்களுக்கு புற்று நோய் ஏற்பட்டதாக தெரிவிக்கவில்லை.
நிலத்தடி நீருக்கு மாசு ஏற்பட்டுள்ளதா?
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதில்லை. அவை சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் ஆலையிலேயே உபயோகிக்கப்பட்டு வருகிறது.
தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒவ்வொரு மாதமும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீர் குறித்து ஆய்வு நடத்திவருகிறது. அந்த ஆய்வறிக்கையில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டதற்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த ஆய்வறிக்கை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கைவசம் உள்ளது.
தொழிற்சாலையை மூடுவது சரியான அணுகுமுறையா?
எந்த தொழிற்சாலைகளிலும், சில தருணங்களில் எதிர்பாராத விதமாகவோ அல்லது கவனக் குறைவினாலோ, விபத்துகள் ஏற்படக் கூடும். இத்தகைய விபத்துகளுக்கு வளர்ந்த நாடுகளிலுள்ள தொழிற்சாலைகளும் விதிவிலக்கல்ல. உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான தொழிற் நிறுவனங்கள் உள்ளதாக கருதப்படும் டியு பான்ட் (DuPont) என்ற அமெரிக்கா நிறுவனத்திலும் விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
விபத்துகள் ஏற்பட்டால், அதற்கான காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்யப்படுகின்றன. பிறகு தொழிற்சாலை மீண்டும் இயங்கும். பாதிக்கபட்டவர்களுக்கு இழப்பீடும், தேவையான சலுகைகளும் தரப்படும்.
விபத்துகள் நடந்தது என்று கூறி தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடப்படுவது அபூர்வம். சிறிய, மிதமான விபத்துகள் ஏற்பட்டதற்காக தொழிற்சாலைகள் மூடப்பட்டால், தொழிற்சாலைகளே இல்லாத நிலைமை தான் ஏற்படும்.
தினமும் சாலை விபத்துகளும், அடிக்கடி விமான விபத்துகளும், ரயில் விபத்துகளும் ஏற்படுகின்றன. பயணங்களை நிறுத்திவிடுவோமா ?
ஏற்படும் வேலை இழப்புகள், ஊழியர்களின் துயரம்
ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்த ஊழியர்களையும் சேர்த்து சுமார் 3000 நபர்கள் வேலை செய்கின்றனர். வேலை செய்யும் நபர்களின் ஊதியத்தை நம்பி 4 அல்லது 5 குடும்ப உறுப்பினர்கள் வரையுள்ள குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழந்தால், பாதிக்கப்படுவோர்கள் நிலை என்னவாகும ?;. அவர்களுக்கு மாற்று வேலை கிடைக்குமா ? வேலையில்லா திண்டாட்டம் பெருகிக் கொண்டிருக்கிறது என்று ஒரு புறம் கூற, மறுபுறம் வேலை இழப்பிற்கு வழி வகுக்கலாமா ?
ஸ்டெர்லைட் ஆலையை மூட ஆணையிட்ட தமிழக அரசோ அல்லது ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்களோ , அரசியல்வாதிகளோ அல்லது சமூக ஆர்வலர்களோ வேலை இழக்கும் ஊழியர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் ரீதியில் மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை. அதனை குறித்து ஆலோசிப்பதாக கூட அறிகுறி இல்லை.
ஸ்டெர்லைட் ஆலையின் ஊழியர்களின் எண்ண ஒட்டங்களை அறிய வேண்டாமா?
ஸ்டொலைட் ஆலையில் வேலை செய்யும் ஊழியர்களும், சமுதாய ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் தாhன். பல நாட்களாக அங்கே வேலை செய்து வருகின்றனர். அவர்களது கருத்தை யார் கேட்டார்கள்?;
ஸ்டெர்லைட் ஆலையில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ வேலை செய்யும் செய்யும் தொழிலாளர்கள் பலர் ஸ்;டெர்லைட் ஆலையை மூட வேண்டியதில்லை என்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர். ஆனால், அவர்களது குரல் வலிமையாக மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்லப்படவில்லை. இது ஏன் என்று புரியவில்லை.
தமிழ்நாட்டின் தொழிற் திட்டங்களை தீர்மானிக்க வேண்டியவர்கள் யார்?
தமிழ் நாட்டில் சினிமா நடிகர்களும், அரசியல்வாதிகளும் தங்களுக்கு சிறந்த பயிற்சி இல்லாத பல துறைகளை குறித்து தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற நிலையில் பேசி வருகின்றனர். விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கருத்துகள் புறக்கணிக்கப்படுகிறது.
இவர்களது எதிர்ப்பு இயக்கத்திற்கு, ஆளும் அரசு செய்வதறியாது செவி சாய்க்கின்றது.
பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த ஆணை ஒரு அரசியல் கண்ணோட்டம் கொண்டது (political decision) என்று கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்
தொழில் சார்ந்த பல விஷயங்களில் இது போன்ற நிலையே தமிழ் நாட்டில் காணப்படுகிறது. இது ஆக்கபூர்வமானதா, தமிழ்நாட்டினை சரிவு பாதைக்கு அழைத்து செல்லாதா என்று தீர்மானிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.