காமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா?

திரு. காமராஜர் ஆட்சியில் இருந்த போது, தமிழ்நாட்டில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

1
4331
காமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா?
காமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா?

தமிழ்நாட்டில், பல தரப்பட்ட மக்களும் திரு. காமராஜர் அவர்களின் பிறந்த நாளை ஜூலை 15ம் தேதி, மிகுந்த மரியாதையுடன், அவர் தமிழ்நாட்டிற்கு அளித்த நல்லாட்சியை குறித்து நன்றி உணர்வுடன் அனுசரித்தனர். காமராஜர் முதலமைச்சராக வீற்றிருந்தபோது, தமிழக அரசு ஒரு தூய்மையான, கட்டுக்கோப்பான ஆட்சிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது.

திரு. காமராஜர், திரு. கக்கன் மறைந்த போது அவர்களிடம் பெரிய சொத்து இல்லை. அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளை போல பணம் சுருட்டுவதே தங்களது குறிக்கோள் என்று எண்ணவில்லை.

திரு. காமராஜரும், திரு. கக்கனும் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தனர். தங்களது சுயமுயற்சியினாலும், நேர்மையான அரசியல் சித்தாந்தங்களும் கொண்டு மக்கள் சேவையே மகேசன் சேவை என்று நாட்டுப்பணியில் தங்களை அர்ப்பணித்து கொண்டார்கள். இத்தகைய சிறப்புகளினால், தமிழ்நாடு வரலாற்றில் ஒரு நிரந்தர இடத்தை பெற்றுள்ளனர். நேர்மையான வழிமுறைக்கு, எதிர்கால சந்ததியதற்கு ஒரு முன் மாதிரியாக போற்றப்படுகின்றனர்.

திரு. காமராஜர் ஆட்சியில் இருந்த போது, தமிழ்நாட்டில் பல ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. திட்டங்கள் திறமையுடன், குறிப்பிட்ட கால அளவில் முடிக்கப்பட்டன. இத்தகைய நல்ல நிலைமைக்கு முக்கிய காரணம், ஆட்சியில் இருந்த நேர்மையான அனுகுமுறை, அரசு நிர்வாகத்தில் லஞ்சம் மையப்பொருளாக இல்லாமலிருந்தது, அரசியல்வாதிகள் தனிப்பட்ட வருமானம் ஈட்டுவதில் நாட்டமில்லாமல் இருந்தது போன்ற ஆரோக்கியமான சூழ்நிலையே ஆகும். இத்தகைய முற்போக்கான நிலை ஏற்படுத்தியதற்கு திரு.காமராஜ், திரு.கக்கன் போன்றோர் தான் வழி காட்டியாக பணியாற்றினர்.

இன்று, 60 வயதிற்கு மேல்  வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்கள், திரு. காமராஜரின் நேர்மையான ஆட்சியை காணவும், அனுபவிக்கவும் வாய்ப்பு பெற்றிருந்தனர். இத்தகைய மூத்த குடிமக்கள் இன்று தமிழ்நாட்டில பொதுவாழ்க்கையிலும், தனிவாழ்க்கையிலும், அரசு நிர்வாகத்திலும்  விரிந்து பரந்துள்ள லஞ்சலாவண்யத்தை கண்டு மிகவும் வருந்து கின்றனர்.

இன்றைய தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், இளைஞர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். கடின உழைப்பே வாழ்க்கையின் அனுகுமுறையாக இருக்க வேண்டுமென்று நமது முன்னோர்கள்  கூறிய பாடங்களெல்லாம் காற்றில் பறக்கப்பட்டுவிட்டன. அரசின் இலவசங்களையே எதிர்பார்த்து வாழும் மனோநிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டின் பொது வாழ்க்கை இன்று நேர்மைக்கும், நாணயத்திற்கும் அநேகமாக வெற்றுப்பூமி போல் தெரிகிறது.

காமராஜர் ஆட்சியில் இருந்த போது, அன்றைய திராவிட கட்சிகள் அவரது ஆட்சியை குறித்து, கடுமையாக விமர்சித்தனர். திரு. அண்ணாதுரை தவிர, மற்ற திராவிட கட்சிகளின் தலைவர்கள், திரு.காமராஜரைப்பற்றியும், அவரது ஆட்சியை குறித்தும் கடுமையான அரசியல் பரப்புரை நடத்தினாலும், திரு.காமராஜர் மீது மக்களுக்கு இருந்த மரியாதையும், ஈடுபாடும் எள்ளளவும் குறையவில்லை. குறை கூறியவர்களுக்கு தற்போது காலம் பதில் கூறிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அரசு நிர்வாகத்தில் நேர்மையில்லாத நிலைமை திரு.அண்ணாதுரை ஆட்சிக்கு பின் தொடங்கியது. திரு.அண்ணாதுரை குறுகிய காலமே முதலமைச்சராக வீற்றிருந்தார். அதன் பிறகு தொடர்ந்து அரசின் நேர்மை என்பது சரிவு பாதையிலேயே தான் போய்கொண்டுள்ளது.

இந்த சரிவை தடுத்து நிறுத்த திரு. காமராஜர், திரு. கக்கன் போன்ற அரசியல் தலைவர்கள் இன்று நம்மிடம் இல்லை. தற்போதைய அபாய நிலையிலுள்ள நேர்மையின் சரிவு, இன்னும் எந்த அளவில் சரியும் என்றும், அதனால் எத்தகைய மோசமான நிலைமை ஏற்படும் என்பதை சிந்தித்துக்கூட பார்க்க முடியவில்லை.

இன்று தமிழ்நாட்டில், எந்தவிதமான வேலைக்கும் செல்லாதவர்களும், எத்தகைய நேர்மையான தொழிலில் ஈடுபடாதவர்களும், அரசியலை பிழைப்பாக கருதி வாழ்பவர்களுமான பல அரசியல்வாதிகள், மற்றும் இடைத்தரகர்கள் கோடிக்கணக்கில் தவறான முறையில் சொத்துக்களை சம்பாதித்து எல்லாவிதமான சுகபோகங்களுடன் அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் ஆணவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடமுள்ள படகு போன்ற மகிழுந்து, பிரம்மாண்டமான வீடுகளை பார்க்கும் போது, அன்றாட வாழ்க்கைக்கே  அல்லல் படும் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் திகைத்து நிற்கின்றனர்.

கோடிக்கணக்கில் பணம் ஈட்டிய அரசியல்வாதிகள், பல்கலைக்கழகங்கள் தொடங்கி, அவற்றின் வேந்தராகவும் உள்ளனர். அவர்களிடம் படித்த அனுபவமுள்ள பேராசிரியர்கள் தலைவணங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்று தமிழ்நாட்டில் புதியதாக கட்சிகள் புற்றீசல்களைப் போல தொடங்கப்பட்டு வருகின்றன.

சில பணப்பசையுள்ளவர்கள் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்தினர்களுக்காகவும் கட்சியை தொடங்கி, கட்சியின் தலைவர்  என்று தன்னை அறிவித்து கொள்கிறார்கள். இது போன்ற பலரிடமும், சம்பாதித்த கோடிக்கணக்கான சொத்தை தவிர வேறொன்றும் சொல்வதிற்கில்லை. பொது வாழ்க்கையில் மற்றவர்களுக்காக எந்தவிதமான தியாகமும் செய்தவர்களல்ல. இவர்களும் திரு.காமராஜர், திரு.கக்கன், திரு.பெரியார், திரு.அண்ணாதுரை போன்ற மதிப்பிற்குறிய தலைவர்களின் பெயரை முன்வைத்து தங்களை வளர்த்துக் கொள்ள முயல்கின்றனர்.

இத்தகைய கவலையளிக்கும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியலும், அரசியல் சித்தாந்தங்களும், பொது வாழ்க்கையும் எங்கே சென்று முடியுமோ என்று திரு.காமராஜர், திரு.கக்கன் போன்றோரைப் பார்த்த, இன்று வாழ்ந்து வரும் வயது முதிர்ந்தவர்கள்அங்கலாய்ப்புடன் பேசி வருவது கேட்கிறது.

திரு. காமராஜர், திரு. கக்கன் மறைந்த போது அவர்களிடம் பெரிய சொத்து இல்லை. அவர்கள் இன்றைய அரசியல்வாதிகளை போல பணம் சுருட்டுவதே தங்களது குறிக்கோள் என்று எண்ணவில்லை. நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை செய்வதே அவர்களது வாழ்க்கை குறிக்கோளாக இருந்தது. திரு.காமராஜர் சில வேட்டி சட்டைகளையும், ரூபாய் நூறு போன்ற தொகையையும் தான் விட்டு சென்றார்.

தமிழ்நாட்டில் மீண்டும் திரு.காமராஜர், திரு.கக்கன் நாட்கள் வருமா என்பது சந்தேகமாகிவிட்டது.

இந்த நிலை தொடரக்  கூடாது என்ற கவலையே, சிந்தனைப் போக்குள்ள தமிழ்நாட்டு மக்களின் மனதில் மேலோங்கியுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here