தமிழ் நாடு தொழில் திட்டங்கள் சரிவுபாதையிலா?

கேரளா, மேற்கு வங்காளம் முன்பு பெற்றிருந்த அவப்பெயரை, தற்போது தமிழ் நாடு பெற்று வருவது போல் தோன்றுகிறது

0
4267
கேரளா, மேற்கு வங்காளம் முன்பு பெற்றிருந்த அவப்பெயரை, தற்போது தமிழ் நாடு பெற்று வருவது போல் தோன்றுகிறது
கேரளா, மேற்கு வங்காளம் முன்பு பெற்றிருந்த அவப்பெயரை, தற்போது தமிழ் நாடு பெற்று வருவது போல் தோன்றுகிறது

சில ஆண்டுகளுக்கு முன்பு, மேற்கு வங்காளம், கேரளா மாநிலங்களில் தொழிற்முனைவோர்கள் அங்கு தொழில் தொடங்க பெரிதும் தயங்கினர். அந்த மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட அங்கு வேலைக்கு அமர தயக்கம் காட்டினர். கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில், சில அரசியல் கட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள், வன்முறை, கெரோ(முற்றுகையிடுதல்), தொழிற்முனைவோர்கள் குறித்து வெறுப்பு பிரச்சாரம் போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டதால் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. ஆனால், கடந்த சில வருடங்களில் இந்த மாநிலங்களில் ஒரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட்டு, தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றம்; ஏற்பட்டு வருகின்றன. இந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்கள் கண்கூடாக தெரிகின்றன.

கேரளா, மேற்கு வங்காளம் முன்பு பெற்றிருந்த அவப்பெயரை, தற்போது தமிழ் நாடு பெற்று வருவது போல் தோன்றுகிறது. அந்த மாநிலங்கள் விட்ட இடத்தை தமிழ் நாடு எடுத்துக் கொண்டுள்ளது என்று பலரும் எண்ணுகின்றனர்.

தற்போது தமிழ் நாடு அரசின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு, அவர்களின் தலைவி செல்வி ஜெயலலிதா போல் திடமாக ஆட்சியை நடத்த முடியவில்லை. இந்த நிலையில் தீவிரவாத கொள்கையில் நம்பிக்கை உள்ளவர்களும், சில லெட்டர்பேடு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் உலாவரும் சில அமைப்புகளும் பல தொழில் திட்டங்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. மக்களிடம் உணர்ச்சியை தூண்டும் விதத்தில் பேசியும், சில சமூக வளைதளங்கள் மூலம் வெறுப்புணர்ச்சியை வளர்த்தும், தமிழ்நாட்டையே தொழில் திட்டங்களுக்கு எதிரான போர்க்களமாக மாற்றிவருகின்றன.அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்துடன் சில எதிர்கட்சிகளும், அரசியலில் கால் பதிக்க துடிக்கும் நடிகர், நடிகைகளும், பல வன்முறை சம்பவங்களுக்கும், போராட்டங்களுக்கும் ஆதரவு அளித்து, மேலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

அரசியல்வாதிகளால் நடத்தப்படும் சில செய்திதாள்களும், பத்திரிக்கைகளும், ஊடகங்களும் தீவிரவாத கருத்து கொண்டவர்களுக்கும், சமூக ஆர்வலர்கள் என்று கூறி கொள்பவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களால் ஏற்படுத்தப்படும் பிரச்சினைகளுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது போல் செயல்படுகின்றன.

சமீப காலங்களில், அரசியல்வாதிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோர்கள்களுக்கும் இடையில் வித்தியாசம் காண்பது அரிதாகிவிட்டது.

இதனால், பல தொழிற்திட்டங்களும், கட்டமைப்பு திட்டங்களும் தற்போது தமிழ்நாட்டில் முடக்கப்பட்டுள்ளன. எந்த திட்டம் வகுக்கப்பட்டாலும் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் போராட்டம் தொடங்குவதை காணும்; போது, தமிழ் நாடு எதிர்காலத்தில் தொழில்துறையில் வளருமா, வேலைவாய்;ப்புகள் கூடுமா என்ற சந்தேகம் எழுகிறது.

புதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு என்பது மட்டுமில்லாமல் பல நடந்துவரும் திட்டங்களையும், செயற்பட்டு வரும் தொழிற்சாலைகளையும் சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு என்று விளம்பரப்படுத்தி தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தகைய சக்திகளை தடுக்க முடியாமல் தமிழக அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இதனால், தமிழ் நாடு போராட்டக்காரார்களின் சொர்க்கலோகமாக மாறிவிட்டது என்பது கவலை அளிக்கக் கூடிய நிலைமை.

சமீபத்தில் சென்னையில் ஐ. பீ. எல். (IPL) கிரிக்கெட் விளையாட்டிற்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை போராட்டம், போராட்டக்காரர்களின் போக்கிற்கும், மனோநிலைக்கும் ஒரு எடுத்துக்காட்டு. இந்த போராட்டத்தை குறித்து பொதுமக்களும், கிரிக்கெட் ரசிகர்களும்; தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் மற்றவர்களின் கருத்துக்களைப்பற்றி கவலைப்படவில்லை.

கூடங்குளம் அணுமின் நிலையம் பல வருடங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் கணிசமாக திட்டத்தின் செலவு கூடியது. இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது.கூடங்குளம் அணுமின் நிலையங்களில் போராட்டக்காரர்கள் கூறியதுபோல், பிரச்சினைகள் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும், கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு இயற்கை எரிவாயுவை கொண்டுவரும் எரிவாயு குழாய்திட்டத்திற்கு எதிர்ப்பை ஏற்படுத்தி அந்த திட்டம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தமிழ்நாட்டிற்கு கிடைத்தால், சுமார் ரூபாய் 10,000 கோடி வரை புதிய தொழில் முதலீட்டிற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இந்த திட்டம் தமிழ்நாட்டிற்கு எட்டாக்கனியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற உலக முதலீட்டார் மாநாட்டின் போது, கடலூரில் PCPIR (Petroleum, Chemicals and Petrochemicals Investment Region) என்று கூறப்படும் பெட்ரோ கெமிகல் வளாகம், பல கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெருமையுடன் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தேiவான நிலத்தேவையை குறித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவித்த போது, பலத்த எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டது. இந்த திட்டமும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் தமிழ்நாட்டில் பல கோடி ரூபாய் முதலீடும் பல வேலைவாய்ப்புகளும் ஏற்படும் என்ற செல்வி ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் என்ற பகுதியில் துறைமுகம் அமைக்கும் திட்டத்தையும் தற்போது சில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்வோரும் எதிர்க்கின்றனர். இந்த திட்டமும் நிறைவேறுமா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

சேலத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டமும் தற்போது எதிர்க்கப்பட்டு இந்த திட்டம் கேள்விக்குறியாகி விட்டது.

சென்னை- சேலம் இடையே அமைக்கப்படவிருக்கும் நெடுஞ்சாலை திட்டத்திற்கும், எதிர்ப்பை போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நியூட்ரினோ திட்டத்தையும், போராட்டக்காரர்களும், சில அரசியல்வாதிகளும் எதிர்க்கின்றனர்.இது ஒரு முக்கியமான இந்தியாவின் பெருமையை நிலைநாட்டக் கூடிய ஆராய்ச்சி திட்டம். இந்த திட்டத்தை குறித்து அருகாமையில்; வசிக்கும் மக்களிடையே வெறுப்புணர்ச்சியையும், சந்தேகத்தையும் போராட்டக்காரர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில், கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாக உள்ளதால் ஆண்டொன்றிற்கு சுமார் 220 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அந்நிய செலவாணி செலவு செய்யப்படுகிறது. இத்தகைய நிலையில், நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியை கூட்ட நெடுவாசலில் அமைக்க திட்டமிடப்பட்ட ஹைடிரோ கார்பன் திட்டமும் எதிர்ப்பினால் நின்று போய்விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் ரூபாய் 2000 கோடி முதலீட்டில் டைடானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை அமைக்க டாடா நிறுவனம் முன் வந்தது. போராட்டக்காரர்களின் எதிர்ப்பினால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.

மத்திய அரசு, மருத்துவ படிப்பிற்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க நீட் (NEET) தேர்வு முறையை அறிவித்த போது, தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த போராட்டக்காரர்கள் பல எதிர்ப்பு கூட்டங்களையும், ஆர்ப்பாட்டத்தினையும் நடத்தினர்.

தற்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் எதிர்ப்பு போராட்டத்தினால் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழப்பர். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், போராட்டக்காரர்கள் தங்களது முடிவே இறுதியானது என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள மிகவும் படித்த, விவரமுள்ள பல பொறியாளர்களும், விஞ்ஞானிகளும் பல தொழிற்திட்டங்களின் முக்கியத்துவத்தைப்பற்றியும், அவற்றினால் ஆபத்து இல்லை என்பதையும் விளக்கமாக கூறிக்கொண்டு தான் உள்ளனர். ஆனால், அவர்களின் கருத்துக்களுக்கு தகுந்த மரியாதையோ அல்லது விளம்பரமோ கிடைப்பதில்லை.

தமிழ் நாட்டின் தொழில் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள நிர்வாகத்தில் அனுபவம் உள்ளவர்களும், விஞ்ஞானிகளும், பொறியாளர்களும், தற்போது தமிழ்நாட்டில் நிலவும் தொழில், கட்டமைப்பு திட்டங்களுக்கு எதிரான சூழ்நிலையை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here