சசி தரூர் சுனந்தா புஷ்கரின் மர்ம மரண வழக்கில் ஒரு வழியாக சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டார். செவ்வாய்க்கிழமை அன்று விரைவு நீதி மன்றம் குற்றம் சாட்டப்ட்டவராகக் கொண்டு அவருக்கு வரும் ஜுலை மாதம் ஏழாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை வழங்கியது. அவருக்கு எதிராக இந்த வழக்கை நடத்த போதிய ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தரூர் தான் சுனந்தாவின் மரணத்துக்கு காரணம் என்று கருதத்தக்க வகையில் அவர் மனைவிக்கு செய்த கொடுமைகளும் அவரை தற்கொலைக்கு தூண்டியதற்கான குற்றச்சாட்டுகளும் இருப்பதாக கூடுதல் தலைமை பெருநகர் நீதிமன்ற நீதிபதி சமர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி “அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்களை கேட்டேன். குற்றப் பத்திரிகையையும் அது தொடர்பாக கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் படித்தேன் போலிசாரின் குற்றப் பத்திரிக்கை சசி தரூரால் சுனந்தா கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்யும்படி தூண்டப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள உதவுகின்றது.’’ என்றார்.
இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 306 இன் கீழும் 498A பிரிவின் கீழும் சசி தரூர் மீது வழக்கு தொடர போதுமான முகாந்திரம் இருக்கிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார். எனவே அவர் வழக்கு விசாரணைக்கு வரும் ஜுலை மாதம் ஏழாம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
முதற்கட்ட விசாரணை செய்தவர்கள் சுனந்தாவின் மரணம் குறித்த சில தகவல்களை பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்த சுப்பிரமணியன் சுவாமியின் வேண்டுகோளுக்கு இணங்க டில்லி போலிசாரிடம் அவர்களின் விஜிலென்ஸ் ரிப்போர்ட் குறித்து பதில் அளிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. ‘’மரணம் குறித்து அறிக்கை அளித்த டில்லி போலீசார் சில ஆதாரங்களை அழித்துவிட்டனர். சிலவற்றில் விளக்கங்கள் போதுமானவையாக இல்லை’’. என்று மனுதாரர் சு சுவாமி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அரசு வழக்கறிஞர் அதுல் குமார் ஸ்ரீவஸ்தவா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை அமர்வு நீதிமனறத்தில் விசாரிக்கப்படலாம் என்றார்.
சுப்பிரமணியன் சுவாமி அதுல் குமாரின் வாதத்தை மறுத்து ‘’ விஜிலென்ஸ் அறிக்கை கண்டிப்பாக இங்கு சமர்ப்பிக்காப்பட வேண்டும். தற்போது சிபிஐயின் இயக்குனராக உள்ள அன்றைய டில்லி காவல்துறை ஆணையர் அலோக் வர்மா தான் முதற்கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டவர். அந்த விசாரணை அறிக்கையில் பலவற்றிற்கு விளக்கங்கள் போதுமானவையாக இல்லை; சில ஆதாரங்களை அழித்து மாற்றி திரித்துள்ளனர். என்னிடம் அந்த முதற்கட்ட அறிக்கையை தர வேண்டாம் ஆனால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் இந்த வழக்கு எப்படி ஜோடிக்கப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றம் அறிந்துகொள்ள வேண்டும்.’’ என்றார்.
மேலும் அவர் ‘’டில்லி போலீசார் அந்த அறிக்கையை தர மறுத்தால் நான் நாளை தருகிறேன்’’ என்றார். அந்த அறிக்கை அய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் சு. சுவாமி தீவிரமாக இருந்தார். பத்திரிகையாளர் கருத்துப்படி இணை ஆணையராக இருந்த விவேக் கோகியா தான் அப்போது சுனந்தா மரணம் குறித்த முதற்கட்ட விசாரணையை நடத்தியவர் ஆவார். அவரே அந்த விசாரணை அறிக்கையில் தகிடுதத்தம் செய்த குற்றவாளி ஆவார். மரணம் நடந்த மறுநாளே சுனந்தாவின் அலைபேசிகளை போலீசார் தரூரிடம் கொடுத்துவிட்டனர். சுனந்தாவின் உடல் கிடந்த படுக்கைவிரிப்பை பத்து மாதங்கள் கழித்து வாங்கி ஆய்வு செய்தனர். .
மூவாயிரம் பக்க குற்றப் பத்திரிகையில் சசி மட்டுமே குற்றம் சுமத்தப்பட்டவராக உள்ளார். தன மனைவியை கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியவர் என் அவர் மீது குற்றம் சுமத்த ஆதாரங்கள் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த வழக்கில் வீட்டு பணியாளரான நாராயணன் சிங் என்பவர் முக்கிய சாட்சியாக இருக்கிறார். 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி சுனந்தா தான் தங்கியிருந்த ஏழு நட்சத்திர ஒட்டலில் தான் தங்கியிருந்த அறையில் பிணமாகக் கிடந்தார். காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் காங்கிரஸ் அரசின் அமைச்சருமான சசி தரூர் மீது கணவன் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது [306] மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது [498A] என்ற இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. 306 பிரிவில் குற்றம் நிரூபிக்கப்ப்ட்டால் மூன்று ஆண்டு தண்டனையும் 498A பிரிவில் குற்றம் உறுதியானால் பத்தாண்டு சிறைத்தண்டனையும் சசிக்கு கிடைக்கும்.
டில்லி போலிசாரின் செய்தி தொடர்பாளரான தீபேந்திரா பதக் ‘’ நாங்கள் இந்த விசாரணையை கவனமாக கையாண்டிருக்கிரோம். அதனால் நீதிமன்றத்தில் வாதாடி ஜெயிப்போம் என்றார்.
தரூரின் வக்கீல்கள் வரும் ஜுலை மாதம் ஏழாம் தேதி சசி நீதிமன்றத்துக்கு வராமல் இருக்க முன்கூட்டியே ஜாமீன் பெறுவதற்கான சட்ட ரீதியான வாய்ப்புகள் ஏராளம் இருப்பதாகத் தெரிவித்து அவற்றை பயன்படுத்தி அவருக்கு முன்ஜாமீன் பெறும் முயற்சியில் உள்ளனர்.