ஸ்டெர்லைட் பிரச்சனை – சிந்திக்க வேண்டிய 13 விஷயங்கள்

அரசும் சட்டமும் ஸ்டெர்லைட் போராட்ட மரணங்களை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்று விவாதிக்கிறார் முன்னாள் மூத்த காவல் துறை அதிகாரி

0
1928
அரசும் சட்டமும் ஸ்டெர்லைட் போராட்ட மரணங்களை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்று விவாதிக்கிறார் முன்னாள் மூத்த காவல் துறை அதிகாரி
அரசும் சட்டமும் ஸ்டெர்லைட் போராட்ட மரணங்களை எவ்வாறு தடுத்திருக்கலாம் என்று விவாதிக்கிறார் முன்னாள் மூத்த காவல் துறை அதிகாரி

நாம் ஸ்டெர்லைட் விவகாரத்தில் போலிசின் செயல்பாடுகளை பற்றி மட்டும் கவனிப்போம்.

 1. கடந்த சில மாதங்களாக இந்த போராட்டம் நடந்து வந்த நிலையில் இப்போது பதிமூன்று பேர் மரணம் அடைந்ததால் போலிசின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் கோபமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. போராட்டம் கலவரமாக மாறியதற்கு யார் காரணம் இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பு என்பதை அந்த விசாரணை ஆணையம் தெளிவுபடுத்தும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
 2. இந்த விவகாரத்தில் ஒரு சிலர் நேரடி தொடர்பு கொண்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிர்வாகம், காவல் துறை உட்பட மாவட்ட நிர்வாகம், மத்திய மாநில அரசுகளின் மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், நுண்ணறிவு பிரிவு [இண்டலிஜென்ஸ் டிபார்ட்மென்ட்] மத்திய மாநில அரசுகள் மற்றும் பல.
 3. சுமார் இருபத்தைந்து ஆண்டு கால வரலாறு உடைய ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக, அண்ணா திமுக ஆகிய மாநில கட்சிகளும் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி போன்ற தேசிய கட்சிகளும் ஆட்சியில் மாநிலத்திலும் மத்தியிலும் மாறி மாறி இருந்துள்ளன. எனவே இவர்களை மாற்றி மாற்றி குற்றம் சுமத்திக்கொண்டிருந்தால் ஒரு முடிவுக்கும் வர இயலாது.  யார் அனுமதி கொடுத்தார், யாருக்கு யார் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று ஆராய்ச்சி நடத்துவது பயனற்றது. முதலமைச்சரை பத்திரிகைகள் ஜாலியன்வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனெரல் டயருக்கு ஒப்பிடுவதும்  ராகுல் காந்தி மோடியையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும் காரணம் காட்டுவதும் திமுக ஒன்றும் அறியாத அப்பாவி போலிருப்பதும் பொறுப்பற்றதும் அர்த்தமற்றதும் ஆகும்.
 4. இப்போதுள்ள பிரச்சனை காவல் துறையினர் எப்படி இந்த போராட்டத்தை கையாண்டனர்?. இவ்வளவு தூரத்துக்கு எப்படி போக விட்டனர்? எங்கே இப்போராட்டம் அவர்களின் கை மீறி போயிற்று?
 5. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை ஆகியோரிடமிருந்து அறிக்கைகளை பெற்றுத்தான் மத்திய மாநில அரசுகள் ஒரு முடிவெடுக்கும். எனவே இதில் இவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. குற்றவியல் சட்டம் போராட்டக் களத்திற்கு பொறுப்பாக  இருக்கும் காவல் நிலையம் மற்றும் மாவட்ட நீதிபதி தரும் அறிக்கைகளையே அங்கீகரிக்கிறது.
 6. இந்த வழக்கில் நீண்ட வரலாறு இருப்பதால் இதற்கென முக்கிய அலுவலகங்களில் தனியாக ஒரு கோப்பு பராமரிக்கப்பட்டிருக்கும். அப்போது தான் அடுத்து வரும் மாவட்ட ஆட்சியர், எஸ். பி., மற்ற துணை அதிகாரிகள் இந்த பிரச்சனை குறித்து தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க முடியும். இந்த கோப்பு வழக்கின் தீவிரத்தன்மையை புரிந்துகொள்ள உதவும்.
 7. அதை புரிந்துகொண்டால் நுண்ணறிவு துறை அதற்கேற்ப ஆட்களை போராளிகளுக்கு காவலாக  நியமிக்கும். இதில் பரிதாபம் என்னவென்றால், இந்த போராட்ட வரலாறு மற்றும் தீவிரம் குறித்து முழுமையாக இவர்களுக்கு தெரியவில்லை. இதை நுண்ணறிவு பிரிவு சாதாரணப் போராட்டமாகவே கருதிவந்தது.  இந்த பிரிவில் சில அதிருப்தியாளர்கள் இருந்துள்ளனர். விருப்பப்படாத சிலரை இதற்குள் திணித்துள்ளனர். அவர்கள் இப்போராட்டம் குறித்து அக்கறையின்றி இருந்துள்ளனர். தற்போதைய சூழலில்  இருபது வார்டுகளிலும் அறுபது கிராமங்களிலும் இருந்து மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பலவேறு போராட்ட முறைகள் குறித்து கலந்து ஆலோசித்துள்ளனர். இந்த மக்கள் வாழும் பகுதிகளில் அதிக காவலர் பணியமர்த்தப்பட்டு,  பாதுகாப்பு வழங்கப்பட்டு, அவர்களைக் கண்காணித்திருக்க வேண்டும். ரகசியத் தகவலாளிகளை காவல் துறையினர் உருவாக்கி, அவர்களிடம் இருந்து அவ்வப்போது கள நிலவரத்தை தெரிந்துகொள்ள முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்.  அப்படி செய்திருந்தால் புல்லுருவிகளின்  ஊடுருவல் உடனுக்குடன் தெரிந்துவிடும். இந்தப் பணிக்கு உள்ளூர்க்காரர்கள் மற்றும்  அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருந்தால் வேலை சுளுவாக முடிந்திருக்கும்.
 8. மேலதிகாரிகளின் பணியும் பங்கும் இங்கு மிகவும் முக்கியமானது. போராட்டம் குறித்து ஆட்சியர் , துணை ஆட்சியர் காவல் துறை உயர் அதிகாரி, துணை அதிகாரிகள் அவ்வப்போது முழு விவரமும் கேட்டுத் அறிந்திருக்க வேண்டும். இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் போராட்டக்காரர்களை கலவரம் ஆரம்பிப்பதற்கு முன்பாக சந்தித்து பேசி ஒரு முடிவுக்கு வர முயன்றதாகத் தெரியவில்லை. 2018  ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிப்பதால இந்த நிறுவனத்துக்கு அனுமதி தர மறுத்திருக்கிறது அந்த நகல் எஸ். பிக்கு கிடைத்ததா?  அதை அவர் படித்து பார்த்து அதன் தீவிரத்தை புரிந்து கொண்டாரா? என்பது தெரியவில்லை மாசு கட்டுப்பாடு விதிகளை அனுசரிப்பதாக  ஸ்டெர்லைட் நிர்வாகம் காட்டிய வேகம், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தடை, பின் திரும்பவும் அனுமதி பெற்றது, நீதிமன்ற விசாரணைகள், வழக்குகள்,, மக்களின் எதிர் வாதங்கள் போராட்டங்கள் என இவ்வழக்குக்கு நீண்ட வரலாறு உள்ளது.
 9. அடுத்ததாக போலிசும் மாவட்ட நிர்வாகமும் கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து மாசு காரணமாக அவர்களுக்கு வந்த நோய்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்திருக்க வேண்டும் போலீசுக்கும் வருவாய்துறை அதிகாரிகளுக்கும் இதில் முக்கியப் பங்கு உண்டு. அவர்கள் இந்த ஆலையை மூடுவதா திறப்பதா என முடிவு செய்யும் அதிகாரம் இல்லாதவராக இருக்கலாம் ஆனால் பிரச்சனை பெரிதாகும் போது எப்படி சமாளிப்பது என்று அறிந்துகொள்ள மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள இது மிகவும் உதவும்.
 10. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அடுத்ததாக சில தீய சக்திகள் கூட்டத்துக்குள் ஊடுருவி விட்டனர் அதனால் மரணங்கள நிகழ்ந்துவிட்டன. போலீசார் சரியாக இந்த போராட்டத்தை கண்காணித்து வந்திருந்தால் இதில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என சரியாக. கணித்திருப்பர். எத்தனை பேர் இந்த போராட்ட ஊர்வலத்தில் நடந்து வருவர், எந்த இடத்தில் கூட்டம் நடத்துவர், எங்கு போய் போராட்டத்தை முடித்து பிரிந்து செல்வர். என்று சரியாக அறிந்திருக்கலாம் .அவர்கள் பள்ளி மைதானம் அல்லது ஆட்சியர் அலுவலகம் முன்பு இதை நடத்திக்கொள்ளலாம் என்று போலீசார் அனுமதி வழங்கியிருக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க திட்டமிட்டுள்ளவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்திருக்கலாம்.
 11. உள்ளூர் போலீசார் போராட்டக்காரர்களை பல் சிறிய குழுக்களாக பிரிப்பது ஒன்றும் புதிதல்ல. இது ஒரு நல்ல வழிமுறை. போலீசார் இந்த குழுக்களின் வலிமையையும் எளிமையையும் தெரிந்துகொள்ள இந்த முறை உதவும். இதை கணிக்க தவறினால் அது விபரீதமாக போய்விடும். இந்த முறை போராட்டக்காரகளுக்கு சரியான தலைவர் இல்லாததால் சமூக விரோதிகள் ஊடுருவ வசதியாகிவிட்டது. அவைகள் மக்களை அழிவுச் செயல்களில் ஈடுபடுத்திவிட்டனர். வழி எங்கும் வண்டிகளைத் தீ வைத்து கொளுத்தியது சாதாரண உள்ளூர்   மக்கள் செய்யககூடிய செயல் அல்ல.
 12. போராட்டத்தை ஒடுக்க தேவையான லத்தி, ஆயுதம், துப்பாக்கி போன்றன மற்றும் கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் அங்கு அனுப்பப்பட்டனரா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.. உரிய அதிகாரிகளிடமிருந்து துப்பாக்கிச்சூட்டுக்கான உத்தரவைப் பெற்ற பிறகு அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிடலாம். துப்பாக்கிச்சூட்டை எப்படி நடத்த வேண்டும் என்று சில வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் உண்டு. பொதுவாக மற்ற  எல்லா வழிமுறைகளும் செயலற்றுப்போன பிறகு கடைசி வழியாக துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளிப்பதுண்டு. இதை பயன்படுத்தியே ஆக வேண்டும் வேறு வழியில்லை என்ற நிலையில் தான் இந்த முடிவை எடுப்பார். கூட்டம் கலைவதற்காகத்தன் துப்பாக்கி சூடு நடத்த வேண்டுமே யாரையும் கொல்வதற்காக அல்ல. அதுவும் காலில் தான் சுட வேண்டுமே தவிர உயரே நின்றுகொண்டு  தலையில் சுடக் கூடாது.  இந்த வழக்கில் போலிசார் ஆட்சியர் அலுவலகத்துக்குள் மக்கள் போய்விடக்கூடாது என்பதால் அவர்களைக் கலைக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும் ரப்பர் குண்டுகளை வைத்து சுடவும் தயாராக இருந்துள்ளனர்.
 13. அறிக்கையின்படி டி.ஐ ஜி அங்கே சம்பவ இடத்தில் இருக்கவில்லை. இது போன்ற சிக்கலான சூழ்நிலையில் தனது மாவட்ட அதிகாரிகளை நெறிப்படுத்த ஒரு மூத்த அதிகாரி சம்பவம் நடந்த இடத்தில் இல்லாதது அதிர்ச்சியாக உள்ளது. ஆவர் இருந்திருந்தால் விஷயம் இவ்வளவு சிக்கலாகியிருக்காது. சில இடங்களில் போலிஸ் பின்வாங்கியிருப்பதையும் பார்க்கிறோம். இதுவும் கூட்டத்துக்கு அசாத்தியமான அசட்டு துணிச்சலை தந்துவிட்டது. நிறைவாக, போலிசாரால் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் தமது அறிவு, துணிவு, மன உறுதி, ஒழுங்கான அணுகுமுறை போன்றவற்றால் சமாளித்துவிட முடியும் ஆனால் துப்பாக்கி குண்டுகளால் சமாளிக்க முடியாது அது விபரீதத்தை ஏற்படுத்திவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here