ஐரோப்பிய யூனியன் – ஆத்மா சாந்தியடைவதாக!

ஐரோப்பாவின் பொருளாதார, சமூக நெருக்கடியானது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

0
2178

ஐரோப்பாவின் பொருளாதார, சமூக நெருக்கடியானது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், சில நாடுகள் அமைதி மற்றும் கூட்டுறவுக்கு விழைந்தபோது தோன்றியதுதான் ஐரோப்பிய யூனியன் என்றதொரு யோசனை. 1950ல் பிரான்ஸ் நாட்டு வெளியுறவு அமைச்சர் ராபர்ட் ஷூமேன் நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஒரு திட்டத்தை முன்வைத்தார். இரும்பு மற்றும் நிலக்கரி தொழிற்சாலைகளை பொதுவானதொரு அடிப்படையில் கட்டுப்படுத்துவதன் மூலம் ஆயுத உற்பத்தியை நெறிப்படுத்தவே இந்த யோசனையானது முன்வைக்கப்பட்டது.

ஷூமேன் திட்டத்தை ஏற்ற ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் லக்ஸம்போர்க் நாடுகள் தங்களது கனரக தொழிற்சாலைகளை – இரும்பு மற்றும் நிலக்கரி – பொதுவான தலைமையின் கீழ் நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இதன் மூலமாக, முன்போல எந்த நாடும் தன்னிச்சையாக ஆயுதம் தயாரிக்கவோ, மற்றொரு நாட்டிற்கெதிராக பிரயோகிக்கவோ முடியாது. ஒருவிதத்தில், ஐரோப்பிய யூனியனானது, மாஸ்டிரிட் ஒப்பந்தத்தால் 1993, நவம்பர் 1ந்தேதி உருவானது. பொருளாதாரம், சட்டவரைவு இவற்றோடு ஓரளவு பாதுகாப்பு குறித்த கொள்கைகளையும் நிர்ணயித்தது இந்த ஒன்றியம். மிகவிரைவில் இந்த யூனியன் விரிவடைய ஆரம்பித்தது;அதுவரை கம்யூனிஸ்ட் நாடுகளாக இருந்தவை கூட இதில் இணைய போட்டியிட்டன.ருமேனியா மற்றும் பல்கேரியா 2007ல் இணைந்தன.

” ஐரோப்பிய யூனியனில் யூரோ என்ற பொதுவான நாணய செலாவணி இருந்ததே தவிர, நடைமுறையில் இணைந்ததொரு நிதிஒன்றியமாக செயல்பட முடியவில்லை

ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பற்றாக்குறை 3 சதவிகிதத்தையும், கடன் 60 சதவிகிதத்தையும் தாண்டக்கூடாது என்ற ஒரு புரிந்துணர்வு நிதி நடவடிக்கைகளில் இருந்தது. ஆனால், இத்தாலி, கிரீஸ் போன்ற நாடுகள் கணக்கு,வழக்கில் தில்லுமுல்லு செய்து,பொய் விவரங்களைத் தந்ததால், இதை நடைமுறைப்படுத்த இயலவில்லை.

ஐரோப்பிய யூனியனில் யூரோ என்ற பொதுவான நாணய செலாவணி இருந்ததே தவிர, நடைமுறையில் இணைந்ததொரு நிதிஒன்றியமாக செயல்பட முடியவில்லை. எப்படி இந்தியாவில் பொதுவானதொரு நாணய செலாவணி இருந்தாலும், ஒவ்வொரு மாநிலத்தின் நிதிநிலையிலும் வெவ்வேறு அளவிலான பற்றாக்குறை,கடன் இருக்கிறதோ அதைப் போன்றுதான்;எனவே இந்நிலை நீடித்து நிலைக்க முடியாது என்பது வெளிப்படை.

ஐரோப்பாவின் பொருளாதார, சமூக நெருக்கடியானது நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஐரோப்பாவில் நிலைமை சீராக எவ்வளவு காலமாகும் என்று 2008ல் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கேட்டபோது 40 காலாண்டுகளாகும் என்று கூறினர். ஆனால்,இன்று சொல்கிறேன் – எந்தக்காலத்திலும் நிலைமை சீராகப்போவதில்லை. ஐரோப்பாவானது பொருளாதாரம், மக்கட்தொகை மற்றும் சமூக நாகரிகம் தொடர்பாக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது – இவற்றிலிருந்து வெளிவரும் நிலையில் அது இல்லை. இம்மூன்றும் சமீபத்தில் ஏற்பட்டவை அல்ல;சில காலமாகவே உருவாகி, வளர்ந்து, தற்போது ஒரு பேராபத்தாக முடியப்போகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்நாட்டுக்கடனின் விகிதாசாரம் தாக்குப்பிடிக்க முடியாத அளவில் உள்ளது. பிரிட்டனிலோ 500 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது. உள்நாட்டுக்கடன் என்பதில் அரசின் கடன், வணிகநிறுவனங்களின் கடன் மற்றும் தனிப்பட்ட குடும்பங்களின் கடன் என மூன்று அங்கங்கள் உண்டு –.ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிப்பட்ட குடும்பங்களின் கடனின் விகிதம் 80 முதல் 100 சதவிகிதத்தை தொட்டுவிட்டது. காரணம் மிகத் தெளிவவானது – இந்தியக்குடும்பங்களைப் போலன்றி, அந்நாடுகளிலுள்ள குடும்பங்கள் சேமிப்பு என்றொரு சாதாரண வார்த்தையை மறந்ததுதான் அதனால் கடனாலே உயிர்வாழ்ந்து,கடனோடேயே புதைக்கப்படுகிறார்கள்.

” ஐரோப்பாவின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையில் 25 சதவிகிதமாக இருந்தது;இன்றோ அது 11 சதவிகிதமாக உள்ளது

இந்நெருக்கடிக்கு அடிப்படைக் காரணம் குடும்பங்களின் அரசுமயமாக்கலும் வணிகத்தின் தனியார்மயமும்தான். தனிப்பட்ட குடும்ப விஷயங்களான முதுமை/ ஆரோக்கியம்/ குழந்தை வளர்ப்பு முதலானவை அரசுமயமானதால், இன்று அந்த அரசாங்கங்கள் தள்ளாடுகின்றன. குறைந்த இனப்பெருக்க விகிதத்தால் தொழிலாளர்கள் குறைந்துவிட்டனர்;வேலையாட்களின் எண்ணிக்கை குறைவால் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கட்டணசேவைகள் திண்டாடுகின்றன; குறைந்த மக்கட்தொகையால் வரி வசூலும் குறைந்துவிட்டது;அதனால் கட்டணமில்லா சேவைகளும் திண்டாடுகின்றன.

இந்நிலைமையை மேலும் மோசமாக்குவது வேலையில்லா திண்டாட்டம்.
ஸ்பெயின் நாட்டில் இளைஞர்களிடையே வேலையில்லாதவர்கள் 55 சதவிகிதம் ஆகவும், மற்ற நாடுகளில் இது கிட்டத்தட்ட 30 சதவிகித அளவிலும் உள்ளது.இந்த வேலையில்லா திண்டாட்டம் பல நாடுகளில் சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு பிரச்சனை மக்கட்தொகை நெருக்கடி;முதலாம் உலகப்போர் சமயத்தில், ஐரோப்பாவின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையில் 25 சதவிகிதமாக இருந்தது;இன்றோ அது 11 சதவிகிதமாக உள்ளது;அடுத்த 20 ஆண்டுகளில் இது 3 சதவிகிதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கட்தொகை சமநிலையில் இருக்க 2.1 என்ற அளவில் இருக்க வேண்டிய இனப்பெருக்க விகிதம்,இந்நாடுகளில் மிகவும் குறைந்து 1 என்ற அளவை எட்டிவிட்டது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து குடிபெயர்ந்து வரும் அகதிகளும் இல்லையென்றால் ஐரோப்பா என்பதே உலக வரைபடத்திலிருந்து அழிந்துவிடும். இதனால்தான் ஐரோப்பாவை யூரோபியா என்றும் லண்டனை லண்டனிஸ்தான் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இவற்றோடு சமூகப்பண்பாட்டு நெருக்கடியும் சேர்ந்துகொண்டு விட்டது. ஐரோப்பா கிறிஸ்துவ தேவலயங்களைத் துறந்து மதச்சார்பற்றதாகிவிட்டது. கிறிஸ்துவ தேவலயங்களுக்கு வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது;அவை வழிபாட்டுத் தளங்கள் என்பது மாறி பெரும்பாலும் சுற்றுலாத் தளங்களாகிவிட்டன.

” BREXIT என்பது ஆரம்பம்தான். ஐரோப்பிய யூனியன் என்பது இனி நீடிக்க முடியாது;அது அழிந்துவிட்டது

அங்கு துப்புரவுப் பணி,ஓட்டல்களில் சுத்தம் செய்யும் வேலை,சுமை தூக்குதல்,திராட்சைத் தோட்ட வேலை போன்ற வேலைகள்’ செய்வது மௌரிடானியா, சோமாலியா, அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகளே;அவர்களில் பெரும்பாலோர் மத நம்பிக்கையால் முஸ்லிம்களாவர்.

வேலையின்மை அதிகரிப்பால் புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கெதிரான மனக்கசப்பு அதிகரித்து, அது முஸ்லிம்களுக்கு எதிரான கோபமாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 10,000 அகதிகள் ஐரோப்பாவில் நுழைய முயற்சிக்கிறார்கள்; பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் நுழையக் காத்திருக்கிறார்கள்.

நெதர்லாந்தில் நடந்து முடிந்த தேர்தலில் வைல்டர்ஸின் கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக வந்துள்ளது- அக்கட்சி குடிபெயர்ந்து வருவோர், ஐரோப்பிய யூனியன் மற்றும் இஸ்லாமுக்கு எதிரானது.பிரான்சில் மரைன் லீ பென் முன்னேறலாம் – அவரும் குடிபெயர்ந்து வருவோருக்கும், ஐரோப்பிய யூனியனுக்கு எதிரானவரே. அவர் வெற்றி பெற்றால், ஐரோப்பிய யூனியனின் முடிவு விரைவில் ஏற்படும். ஹங்கேரி, ஆஸ்திரியா, போலந்து ஆகியவையும் வரிசையில் உள்ளன. BREXIT என்பது ஆரம்பம்தான். ஐரோப்பிய யூனியன் என்பது இனி நீடிக்க முடியாது;அது அழிந்துவிட்டது; ஐரோப்பிய யூனியன் நீடூழி வாழ்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here